உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

பிளீச்சங் பவுடர் வாங்கியதில் முறைகேடு

சிதம்பரம்: 

              சிதம்பரம் நகராட்சியில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று பாமக நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் குற்றம் சாட்டினார். 

                    சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் திமுக உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் கோரியதன் பேரில் மறைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையிலும், காந்தியடிகள் மறைந்த தினத்தை முன்னிட்டும் கூட்டத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம்:ஆ.ரமேஷ் (பாமக)- நகராட்சியில் வாங்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் 33 சதவீத காரத் தன்மை இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத காரத்தன்மைதான் உள்ளது. இதை அனைத்து நகரமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று நிருபிக்க தயார். இல்லையெனில் பதவியை ராஜிநாமா செய்ய தயார். எனவே இதுகுறித்து நகரமன்றத்தலைவர் ஆய்வு செய்து ஆனையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                     பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்காத நகரின் மையப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிதியை ரத்து செய்து பிற்படுத்தப்பட்ட பகுதி வளர்ச்சிக்கு செலவிட வேண்டும். நகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை.தலைவர்: பிளீச்சர் பவுடர் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகமது ஜியாவுதீன் (இ.காங்)- சிதம்பரம் நகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக தொலைபேசி எண்கள் கொண்ட விளம்பர பலகையை  நகராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும்.அப்புசந்திரசேகரன் (திமுக)- சமீபத்தில் பெய்த மழையில் சிதம்பரம் நகரில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. அதனைச் சீரமைக்க வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது கொசு ஒழிப்புப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- சிதம்பரம் மானாசந்து மேல்நிலை குடிநீர் தேக்க வளாகத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டும். போல்நாராயணன்தெருவில் சாலை மிக மோசமாக உள்ளதால் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.ராஜலட்சுமி (திமுக)- காலை வேளையில் நடைபெறும் நகரமன்றக் கூட்டத்தை காலதாமதமாக 12 மணிக்கு மேல் தொடங்குவதால் வீட்டில் சமையல் செய்ய முடியவில்லை. எனவே காலதாமதமாக கூட்டத்தை தொடங்கினால் தலைவர் மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏ.ஆர்.சி.மணி (திமுக)- நகராட்சிக்கு ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் வருமானத்தைப் பெருக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாதம் வரி மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ரூ.10 லட்சம் தான் வருமானம் வருகிறது. ஆனால், ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க ரூ.30 லட்சம் செலவாகிறது.÷பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியை சம்பளத்துக்கு  செலவிடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வருமானத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ராஜாமான்சிங் (சுயேட்சை)- சிதம்பரம் நகராட்சியில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.தலைவர்: 4 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. டெண்டர் விடப்பட்ட பின்னர் பணி தொடங்கப்படும்.இரா.வெங்கடேசன் (திமுக)- சிதம்பரம் நகரில் 500-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேலாளர் ஜி.செல்வராஜ், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே பள்ளிக்குச் சென்ற 5 மாணவ, மாணவியர் மாயம்

கடலூர்: 

                    திட்டக்குடி அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை வியாழக்கிழமை முதல் காணவில்லை. 

                   திட்டக்குடி அடுத்த வேப்பூர் அருகே உள்ள ஐயனார் பாளையத்தைச் சேர்ந்த கொண்டையன் மகள் தேவி (14), ஐயப்பன் மகள் ரம்யா (14), செல்வராஜ் மகள் மகேஸ்வரி (13), தங்கவேல் மகன் சதீஷ் (15), பழநிச்சாமி மகன் பிரபாகரன் (13). வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சதீஷ் 10-ம் வகுப்பும், ரம்யா, தேவி, ஆகியோர் 9-ம் வகுப்பும், மகேஸ்வரி 8-ம் வகுப்பும், பிரபாகரன் 7-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாகக்கூறி, வீட்டில் இருந்து புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில் வீடுகளுக்கும் திரும்பவில்லை. மாணவ மாணவியரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே வெள்ளிக்கிழமை மேற்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் வேப்பூர் காவல்  நிலையத்தில் தனித்தனியாகப் புகார்களை அளித்தனர். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, மாணவ, மாணவியரைத் தேடி வருகிறார்கள். மாணவ, மாணவிரை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது அவர்களாகவே எங்காவது சென்றனரா என்று தெரியவில்லை. திட்டக்குடி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ வேப்பூர் சென்று பெற்றோர்களைச் சந்தித்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more »

அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்கு

கடலூர்: 

              கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரைத் தாக்கியதாக, தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

                      கடலூர் அருகே கே.ஆர். சாவடியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் பழநிச்சாமி (48). அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உலகஅரசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. பழநிச்சாமி வியாழக்கிழமை மாலை செல்லஞ்சேரியில் இருந்து புதுவைக்குக் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். செல்லசேரியைச் தாண்டி சிறிது தூரம் சென்றதும், உலகஅரசன் உள்ளிட்ட 11 பேர் பழநிச்சாமியின் காரை வழிமறித்தனர்.  அவர்கள் கார் கண்ணாடிகளை இரும்புக் குழாயால் அடித்து உடைத்தனர். பின்னர் பழநிச்சாமியை கத்தி மற்றும் இரும்புக் குழாயால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த பழநிச்சாமி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.÷இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த உலகஅரசன், ராமு, ரவி, தனசேகரன் உள்ளிட்ட 11 பேர் மீது, ரெட்டிச்சாவடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கோட்டாட்சியர் ஆய்வு

கடலூர்:

: கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு செய்தார். கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்து வருகிறார்கள். கடலூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இப்பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். நிலை அலுவலர்கள் சரியான முறையீட்டு விவரங்களை பெற்றுள்ளனரா எனக் கேட்டறிந்தார். கோட்டாட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர் என செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

விருத்தாசலம்:

                  : விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

                       விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.÷கூட்டம் தொடங்கியவுடன் பஸ் நிலையக் கடைகள், மாட்டுச்சந்தை மற்றும் எடை பார்க்கும் கருவி ஆகியவைகளுக்கான ஏலநாள் முன்னறிவிப்பு இன்றி  ஒத்திவைக்கப்பட்டதன் காரணம் என்னவென்று, அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு நிர்வாக காரணங்களால் ஏலத் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதில் திருப்தி அடையாத அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அதன் காரணத்தை நகர்மன்ற தலைவரிடத்தில் கேட்டனர்.÷அப்போது குறுக்கிட்டு பதிலளித்த தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் ராமு, மன்றத்திற்கு உட்படாத கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாமென கூறினார். தொடர்ந்து ஏலம்தள்ளி போனதற்கான காரணங்களை கேட்டுக்கொண்டிருந்த  அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவரிடம் ஆவேசமாக பேசிவிட்டு மேசையில் இருந்த ஒலிவாங்கியை தள்ளிவிட்டு கூட்டத்தினை புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளதே என தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு, அது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேர்மன் கூறினார்.

                     பின்னர் விருத்தாசலம் சாவடிக்குப்பம் பகுதியில் 50-லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு புதிய ஒப்பந்தப் புள்ளி கோருவது உள்ளிட்ட 54- தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மைக்கை தள்ளி மன்ற சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகிய மூன்று பேருக்கும் அடுத்து வரும் ஒரு கூட்டத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் கூறினார்.

Read more »

வீராணம் ஏரி: தலைமைப் பொறியாளர் ஆய்வு

சிதம்பரம்:

                       வீராணம் ஏரி மற்றும் கொள்ளிடக்கரையை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்டார்.÷கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருவதால் ஒவ்வொரு ஆண்டும் முழுக்கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் ஏரியின் மேல்கரை கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து நெற்பயிர்கள் பாதிப்படைகின்றனர். திருநாராயூர் நந்திமங்கலம், அத்திப்பட்டு, சித்தமல்லி உள்ளிட்ட கிராமங்களில் நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், நீரைத் தேக்கி வைக்கவும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகனுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். தலைமைப் பொறியாளர் கோரியதன் பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தை தடுக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் முன்மாதிரி வரைவு திட்டத்தை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைத்தது. 

                              இந்நிலையில் தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழக்கிழமை மாலை வீராணம் ஏரிக்கரையை ஆய்வு செய்தார். வீராணம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது; எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம்; ஏரியை தூர்வாரி அகலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். நபார்டு வங்கி உதவியுடன் ரூ.120 கோடி செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையொட்டி தலைமைப் பொறியாளர் அன்பழகன் கொள்ளிடக்கரைப் பகுதியை வெள்ளிக்கிழமையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்ளிடக் கரையோரம் உள்ள படுகை நிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமானதா வருவாய்த் துறையினருக்கு சொந்தமானதா என பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார். தலைமைப் பொறியாளருடன் கோட்டப் பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் ஏரி உதவிப் பொறியாளர்கள் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

Read more »

முத்துக்குமரனுக்கு நினைவஞ்சலி

சிதம்பரம்: 

                       இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்து வீரமரணம் அடைந்த முத்துக்குமரனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில்  அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பூமாகோவில் முன்பு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி மாணவர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.மணிகண்டராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.அமர்நாத், அமைப்பாளர் மார்க்சியஒளி, துணைத் தலைவர்கள் செல்வம், சரவணக்குமார், தயாநிதி, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Read more »

கடலூர் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்:

                  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.  அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் டி.அரசன், துணைத் தலைவர் எஸ்.சிவபாலன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மோசமான உணவு வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி விடுதிகள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான உணவு விடுதிகளில் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுவதில்லை.  விலைவாசி உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவில் பருப்பு காய்கறிகள் குறைவாக உள்ளன. அரிசியின் தரமும் மோசமாக உள்ளது. 

                    இதனால் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி கலோரி உணவு கிடைப்பதில்லை. மாணவர் விடுதிகளுக்கு அரசு வழங்கும் தொகை, தரமான உணவு வழங்கப் போதுமானதாக இல்லை. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் விடுதிகளில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. ÷விடுதி சுகாதாரமாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அட்டவணைப்படி உணவு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Read more »

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்: 

               சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

                    இந்நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் தாம் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாட்டுத் திடலையும் சுற்றிப்பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு  மகிழ்ந்தனர். பின்னர் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கல்வி வளர்ச்சிக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் உதவி செய்வதாக உறுதியளித்தனர். மேலும் தமக்கு கல்வி புகட்டிய 12 ஆசிரியர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்து பெற்றனர்.÷பின்னர் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து புவனகிரி சங்கமம் என்ற அமைப்பை  ஏற்படுத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். புதிய நிர்வாகிகள்: தலைவர்- கிரீடு தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி, துணைத் தலைவர்- சா.ராபர்ட் புருஷோத்தமன், பொதுச் செயலாளர்- ஜி.உதயசூரியன், பொருளாளர்-எம்.ஆறுமுகம், இணை பொதுச்செயலாளர் டி.பாலசந்தர், செயலாளர்கள்- அண்ணாஜோதி, சரவணன், ஞானவள்ளல், கண்ணன், வெங்கடேசன். அன்றைய தினமே புவனகிரி சங்கமம் அமைப்பு சார்பில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக ரூ.4 லட்சம் நிதி திரட்டப்பட்டது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் போதிக்க அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இல்லாததால் அவதியுற்றனர். 

                      மாணவர்கள் கோரிக்கைக்கு இணங்க இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக 2 ஆசிரியர்களை மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தாற்காலிகமாக பணியமர்த்த தலைமை ஆசிரியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் முப்பெரும் விழா

சிதம்பரம்:

                        சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம், கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலமாக நிலை உயர்த்தப்பட்டதை முன்னிட்டு அதிநவீன நூலகம் திறப்பு விழா, அதிநவீன ஆராய்ச்சிக்கூடம் அடிக்கல்நாட்டு விழா, கடல்வாழ் உயிரியல் மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக் கூடம் அடிக்கல்நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

                      விழாவில் சென்னை செட்டிநாடு மருத்துவ நகரத்தின் துணைத் தலைவரும்,  பல்கலை. ஆளவை மன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா பங்கேற்று அதிநவீன நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் புதிய அதிநவீன ஆராய்ச்சிக்கூடம். மருத்துவப் பரிசோதனைக்கான விலங்கின ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றை திறந்து  வைத்துப் பேசினார்.

அவர் பேசியது: 

                     பரங்கிப்பேட்டையில் 49 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சிப் பணிகளும், கல்விச்சேவையும் பாராட்டுதற்குரியது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்திய, மாநில மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு 44 ஆராய்ச்சிப் பணிகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பல சிறு தொழில்நுட்பங்களை இலவசமாக இம்மையத்தின் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும் என முத்தையா கூறினார்.விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில் கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 10வது புலமாக திகழ்கிறது என்றார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வாழ்த்துரையாற்றினார். கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

குறிஞ்சிப்பாடி:

                வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடக்கிறது. கடந்த 22ம் தேதி முதல் தருமச்சாலை மற்றும் ஞானசபை மேடைகளில் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா முற் றோதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வள்ளலார் அவதரித்த மருதூரில் கிராம மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. காலை 10 மணிக்கு ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்கள் சன் மார்க்க கொடியை ஏற்றி தைப்பூச விழாவை துவக்கி வைத்தனர்.

                இன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 6 மணி ஆகிய நேரங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு மலிவு விலையில் திருஅருட்பா புத்தகம், மருதூர் தங்கம் விடுதி திறப்பு விழா நடக் கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் வரவேற்கிறார். இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத், அரசு செயலர் முத் துசாமி, இணை ஆணையர் தங்கராஜ் முன்னிலை வகிக்கின்றனர். அமைச் சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் புதிய கட்டடங்களை திறந்து வைக்கின்றனர்.
                   எம்.பி., அழகிரி, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தொழிலதிபர் பொள் ளாச்சி மகாலிங்கம், குருகுலப் பள்ளி தாளாளர் செல் வராஜ், என்.எல்.சி., சேர் மன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை சத்தியஞான சபை நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தைப்பூச தரிசனத்தை காண லட்சக்கணக் கான மக்கள் வருவர் என்பதால் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் ஐந்து டி.எஸ்.பி.,க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 60 சப் இன்ஸ்பெக்டர்கள், 215 பெண் போலீசார், 325 ஆண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சாவூர், காரைக்கால் உட்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் இரண்டு டாக்டர் கள் கொண்ட மொபைல் மருத்துவமனை திறக்கப் பட்டுள்ளது.

 நாளை இசை விழா: 

                       வட லூரில் திருஅருட்பா இசை சங்கம் சார்பில் நாளை (31ம் தேதி) இசை விழா நடக்கிறது. அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். சீர்காழி சிவசிதம்பரம், வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றனர். சிவகாமசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். கடலூர் அரசு இசைப் பள்ளி மாணவர்களின் மங்கள இசை, ஆசிரியர் ராமானுஜம் குழுவினரின் மகாமந்திரம் ஓதுதல் நடக்கிறது. காலை 11 மணிக்கு சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், ராஜகோபால் அரிமளம் பத்மநாபன், மழையூர் சதாசிவம் குழுவினர் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் பிச்சாண்டி, தென்னக பண்பாட்டு மைய உதவி இயக்குனர் முத்து, ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

Read more »

வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணி செப்டம்பரில் முடியும்: அன்பழகன்

திட்டக்குடி:

                   திட்டக்குடி வெலிங் டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக, சென்னை தலைமை பொறியாளர் அன்பழகன் கூறினார். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிக் கரை 20 கோடி ரூபாய் செலவில் சீரமைக் கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித் துறை (பாசனப் பிரிவு) சென்னை மண்டல தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணி விபரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்  கூறியதாவது:

                     வெலிங்டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட 20 கோடியில் இதுவரை 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

                  800 மீட்டர் கரை சீரமைப்பு பணியில் நீர்கசிவு தடுப்பு சுவர் 640 மீட்டர், நீர்வடிகால் 600 மீட்டர், கருங்கல் தடுப்புச்சுவர் 750 மீட்டர், 4.5 அடி உயரத்தில் நீர்புகா களிமண் பகுதி 400 மீட்டர், 1 அடி உயரத்தில் வெளிப் புற மண் பகுதி 150 மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.இந்த பணி கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் மாதிரி தோற்றம் 15 நாளில் அமைக்கப்படும்.வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 70 முதல் 77 கன அடி வரை தண்ணீர் எடுக் கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல்- ஜூன் மாத இறுதி வரை இப்பணி நடைபெறும் என்றார். பேட்டியின் போது செயற்பொறியாளர் சின்னராஜ், உதவி செயற்பொறியாளர்கள் நஞ்சன், பிரேம் குமார், நாகராஜ், பாசன சங்க தலைவர்கள் கொத் தட்டை ஆறுமுகம், வேணுகோபால், மருதாச்சலம், சேலம் மாவட்டம் சிறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

வீராணத்தில் வெள்ள பாதிப்பு தடுக்கதலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்:

                  வெள்ள பாதிப்பை தடுக்க கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு நிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராணம் ஏரியின் மேற்கு கரை பலப்படுத்துதல், பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல் மற்றும் பாழ்வாய்க் கால் ஷட்டர் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
                        அதே போல் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் பலப் படுத்தி தடுப்பணைகள் கட்ட 120 கோடி ரூபாயிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன்பேரில் வீராணம், கொள்ளிடம் மற்றும் வெலிங்டன் ஏரி பகுதிகளை பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் நஞ்சன், அணைக் கரை செயற்பொறியாளர் பெரியசாமி, சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வராஜ், வீராணம் உதவி பொறியாளர் சரவணன், மாணிக்கம், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

விருத்தாசலம் அருகே வயலில் புத்தர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம்:

                   விருத்தாசலம் அருகே வயலில் கிடந்த பழங்கால கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை விவசாயிகள் கண்டெடுத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் பெருமாள் கோவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே பகுதியைச்சேர்ந்த வேல்சாமி, முருகேசன் இருவரது நிலங்களின் வரப்பில் 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பழைய கருங்கல் கிடந்தது. அந்த கல்லை, கோவிலுக்கு எடுத்து சென்று போடலாம் என நினைத்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல், அய்யம்பெருமாள், நாராயணன் ஆகியோர் திருப்பியபோது, புத்தர் சிலை என தெரியவந்தது.பின்னர் ஊராட்சித் தலைவர் மதியழகன், வி.ஏ.ஓ., தண்டபாணிக்கு தகவல் கொடுத்தார். ஆர்.ஐ., ஜெயந்தி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புத்தர் சிலையை பார்வையிட்டு சென்றனர்.

Read more »

வெறிநாய்கள் துரத்திய மான் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம்

சிறுபாக்கம்:

                       வேப்பூர் அருகே வெறிநாய்கள் துரத்தியதால் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம் அடைந்த புள்ளி மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோடு பெரியநெசலூர் பகுதியில் அரசு காப்பு காடு உள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் புள்ளி மான் ஒன்று காட்டை விட்டு வெளியேறி வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்திற்கு வந்தது. அதனைக் கண்ட அங்கிருந்த வெறி நாய்கள் துரத்தின. அதில் மிரண்ட புள்ளி மான் வெகுதூரம் ஓடி வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சமடைந்தது.அதனை நிலைய அதிகாரி ஆறுமுகம், தீயணைப்பு வீரர்கள் கணேசன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பிடித்து வனவர்கள் ஏகாம்பரம், தில்லைக்கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior