உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

பாமாயில் மரம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: நெல் உற்பத்தி கணிசமாக குறைய வாய்ப்பு

காட்டுமன்னார்கோவில்:

                நெல்பயிரை மட்டுமே நம்பியிருந்த காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் சமீப காலமாக பாமாயில் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகள் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளாக கருதப்படும். இங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

                குறிப்பாக அப்பகுதியின் உயிர் நாடியாக விளங்கும் வீராணம் ஏரியின் பாசனத்தை நம்பி 70 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக மழை, வெள்ளம், பருவம் தவறிய மழை, கடும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளை சமாளித்து தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியாமல் திணறி வருகின்றனர்.இதனால் பல்லாயிரக்கணக்கில் கடன் பெற்று விவசாயம் செய்தும் பலன் இல்லாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மாற்று பயிராக பாமாயில் மரம் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பாமாயில் பயிர் செய்யப்பட்டு வந்தாலும் தற்போது விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

               காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டு மேலகடம்பூரில் அப்துல் வதூது 3 ஏக்கரில் பாமாயில் பயிர் செய்தார். அவரையடுத்து கணேசன் என்பவர் 5 ஏக்கரில் பாமாயில் பயிர் செய் தார். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பாமாயில் பயிர் செய்வது அதிகரித்து வருகிறது.உற்பத்தி செலவு, திருடு பயம், கூலி ஆட்கள், குறைந்த தண்ணீர் தேவை, சுலபமான அறுவடை போன்ற காரணங்களால் பாமாயில் பயிர் செய்வது விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்றதையடுத்து தற் போது 800 ஏக்கர் வரை காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பாமாயில் பயிர் செய்யப்பட்டுள்ளது.பாமாயில் பயிர் செய்யும் நிலத்தில் ஊடுபயிராக நெல், வாழை, உளுந்து பயிரிட்டு லாபமடையலாம். அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் இடம் மட்டும் கொடுத் தால் போதும். உரம், கன்றுகள் என அனைத்து உதவிகளையும் அரசு மானியமாக கொடுத்து, பராமரிப்பு செலவையும் அரசே கவனித்துக்கொள் கிறது. தொடர்ந்து பயிர் வளரும் வரை 4 ஆண்டுகள் தொடர்ந்து மானியமாக அரசு வழங்கி வருகிறது.
                இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்து மழை, வெள்ளத்தில் நஷ்டப்படுவதை விட "ரிஸ்க்' இல்லாமல் விவசாயம் செய்வதே சிறந்தது என விவசாயிகள் பாமாயில் மரத்தை பயிர் செய்வதில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நெல் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாமாயில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இந்த பாமாயில் சாகுபடி வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

Read more »

மனைப்பட்டா கிடைக்கும் வரை மறியல்: தமிழக விவசாய சங்க வட்டக்குழு முடிவு

திட்டக்குடி:

            திட்டக்குடி வட்டக்குழு தமிழக விவசாய சங்கம் சார்பில் இறையூர் சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 400 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக் கப்பட்டது.தமிழக விவசாய சங்க திட்டக்குடி வட்டக்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. வட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் செயலா ளராக கோவிந்தராஜ்,தலைவராக பூமாலை, பொருளாளராக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

                      பின்னர் நடந்த கூட்டத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 400 வழங்க வேண்டும். வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யக் கோரி வரும் 24ம் தேதி இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. குடிமனைப்பட்டா, இரண்டு ஏக்கர் இலவச நிலம், கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, குத்தகை விவசாயிகளுக்கு பட்டா, ஏரி மற்றும் குளங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மார்ச் 1ம் தேதி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் பட்டா கிடைக்கும் வரை மறியல் போராட்டம் நடத்துவது. இதனை விளக்கி வரும் 23ம் தேதி முதல் தாலுகா முழுவதும் பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

ராமநத்தம்:

         ராமநத்தம் ஆற்காடு லூத்ரன் சபை வாலிபர் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ராபின்டிரஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார கல்வி விழிப்புணர்வு பேரவை அமைப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தார். செல்வராஜ் வரவேற்றார். எய்ட்ஸ் வரும் காரணம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள், ஆணுறையின் அவசியம், குடும்ப உறவு குறித்து டாக்டர் கிரிஜா பேசினார்.பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர், ஸ்டீபன் பிரபாகரன், டீக்கன், டேனி ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து பேசினர். ராஜாமணி நன்றி கூறினார்.

Read more »

புதுச்சேரி பதிவெண் பஸ்கள் விதிகளை மீறுவதாக புகார்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்திற்குள் வரும் புதுச்சேரி பதிவெண் உள்ள பஸ்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. கடலூரிலிருந்து 24 கி.மீ., தொலைவில் உள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் தமிழகம், புதுச்சேரிக்கும் விற்பனை வரி வித்தியாசத்தால் நுகர்வோர்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம். கடலூர்-புதுச்சேரியில் ரயில் போக்குவரத்து இல்லாததால் புதுச் சேரி செல்லும் பஸ்சில் கூட்டம் அலைமோதும். கடலூரில் இருந்து 'பீக் அவரில்' 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் புதுச்சேரிக்கு செல்கின் றன. இவை சீட்டு ஏற்றுவதற்காக ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று நேரத்தை வீணடித்துவிட்டு பின்னர் மீதியுள்ள சொற்ப நேரத்தில் அதிவேகமாக பஸ்சை ஓட்டுகின்றனர்.

            குறிப்பாக புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட பஸ்கள் சாலையின் மையத்திலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவது, தடை செய்யப் பட்ட இடத்தில் செவிப்பறையை கிழிக்கும் ஹாரன் சத்தம், திடீரென ஒரு வழிப்பாதையில் நுழைவது என போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விதிமுறை மீறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நாட்டு நலப்பணி திட்டம் துவக்கம்

நெய்வேலி:

             நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் நடந்தது.நெய்வேலி அருகே உள்ள இருப்பு கிராமத்தை உள்ளடக்கிய தெற்கிருப்பு மற்றும் வடக்கிருப்பு கிராமங்களில் ஜவகர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 100 மாணவ, மாணவிகளை கொண்டு 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பத்மாமணி தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் கிப்ட் கிறிஸ் டோபர் வரவேற்றார்.
                    என்.எல்.சி. மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். என்.எல்.சி. முதன்மை பொது மேலாளர் பெருமாள்சாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோவையிலிருந்த முனைவர் கவிதாசன் தொலைபேசி கான்பரன்ஸ் மூலம் நாட்டு நலப்பணி திட்ட முகாமை வாழ்த்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள் ராசாராம், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஆறுமுகம் கல்லூரியில்இலவச ரத்ததான முகாம்

ராமநத்தம்: 

         தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, திட்டக்குடி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ் ணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன் முன் னிலை வகித்தார். முதல்வர் ரெங்கநாதன் வரவேற்றார்.இதில் நிர்வாக இயக்குனர் ராஜன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 143 யூனிட் ரத்ததானம் செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் துரைஎழிலன், அரிமா மாவட்ட தலைவர்கள் இன்பசேகரன், சேகர் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலை கத்தரி செடிகள்: வேளாண் மாணவர்கள் ஆய்வு

கிள்ளை:

         சி.முட்லூர் பகுதியில் விளைந்துள்ள அண்ணாமலை கத்தரிக்காயை வேளாண் மாணவர்கள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அண்ணாமலை கத்தரி தோட்டங்களை அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் கல்லூரி நான் காம் ஆண்டு மாணவர்கள் வேளாண் விரிவுரையாளர் ராஜ்பிரவீன் தலைமையில் ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் தோட்டப்பயிர்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.

Read more »

கல்லூரி ஆசிரியர்களுக்கான போட்டி:அண்ணாமலை பல்கலை., சாம்பியன்

சிதம்பரம்:

          சென்னையில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் அண்ணாமலை பல்கலை., அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி சென்னை ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் கூடைபந்து, வாலிபால், கால் பந்து, பூப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அணிகள் பங் கேற்றன. அண்ணாமலை பல்கலைக்கழக அணி கால்பந்து, கூடைபந்து, இறகுபந்து போட்டிகளில் முதலிடத்தையும், வாலிபால் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாம்பியன் பட் டத்தை வென்றது. அண் ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இணை பேராசிரியர்கள் ராஜசேகரன், கோபிநாத், செந்தில்வேலன் ஆகியோர் அணிகளுக்கு தலைமை தாங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜோசப் கல்லூரி இயக்குனர் பாபு மனோகர் பரிசு வழங்கினார். சாம்பியன் பட்டம் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணியை உடற்கல்விதுறை இயக்குனர் மங்கையர்கரசி, பேராசிரியர் ரவீந்திரன் பாராட்டினர்.

Read more »

மருத்துவ முகாம்

விருத்தாசலம்:

             மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மதியழகன், கவுன்சிலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முரளி வரவேற்றார். தலைமை ஆசிரியர் குமாரசாமி, துணை தலைவர் அழகப்பன், டாக்டர்கள் கதிர்வேல், முத்துகுமரன், பட்டி ஊராட்சி தலைவர் பாஸ் கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மாணவர்களுக்கு செய்முறை தேர்வு:விருத்தாசலத்தில் மின் நிறுத்தம் மாற்றம்

விருத்தாசலம்:

             விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வை யொட்டி மின் நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் செயற்பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 

              விருத்தாசலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது செய் முறை தேர்வுகள் நடந்து வருவதால் மின்நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்ட காந்திநகர், கடைவீதி, தென் கோட்டைவீதி, கம்பர் வீதி, சேலம்ரோடு ஆகிய பகுதிகளுக்கும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்ட பெரியார்நகர், பூதாமூர், கடலூர் ரோடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று முதல் ஒரே நேரமாக காலை 7 மணி முதல் 9 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். வரும் 20 ம் தேதி வரை இந்த புதிய நடைமுறையும் பின்னர் பழைய முறையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more »

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் விருத்தகிரஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி உழவாரபணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி சார்பில் திருக்கோவில் முழுவதும் உழவாரபணி நடந்தது. இதில் கடலூர் மாவட்ட சத்யசாயி சேவா சமிதி தலைவர் பிரசாத், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், விருத் தாசலம் சாய் சமிதி கன்வீனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றி வில்லு பாட்டு மூலம் மாணவர்கள் பாடினர். இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, சண்முகம், சந்தான கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

அம்மேரி கொக்கன்குப்பம் பள்ளிக்கு நிலம் தானம்

நெய்வேலி:

                நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் மக்கள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதுமான இடம் இல்லாத நிலை இருந்து வந்தது. கடந்த 11ம் தேதி பள்ளியில் கல்விக்குழு கூட்டம் நடந்தது.  ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை இருதயமேரி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜகோபால், ராமச்சந்திரன், ராஜவேல், காசிநாதன், முருகேசன் ஆகியோரின் குடும்ப சொத்தில் 9 சென்ட் நிலத்தை, மேற் பார் வையாளர் ஜம்புலிங்கம், ஆசிரியர் நடராஜன் முன்னிலையில் பள்ளிக்கு தானமாக வழங்கினர். விழாவில் தமிழ்ச்செல்வன், கல்வியாளர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியன், பள்ளி ஆசிரியர் செல்வராணி பங்கேற்றனர்.

Read more »

உடல் உறுப்பு தானம் குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்: 

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம், விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் திருமார்பன், மாவட்ட துணை தலைவர் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் வாழுமுனி வரவேற்றார். யார் யார் உறுப்புகளை தானம் செய்யலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ரமேஷ், கண்ணன், பாஸ்கரன், குமார், ஆண்டனி பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் மணிவண் ணன் நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் வட்டார வள மையஆசிரியர் பயிற்றுனர் தேர்வு

கடலூர்:

          கடலூரில் 10 மையங்களில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 500 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த 5,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,766 பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் உள் ளிட்ட பாடங்களில் கேள்விகள் கேட்கப் பட்டன. காலை 10 மணிக்கு துவங்கி 1 மணிக்கு முடிந்தது.கடலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் 10 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வையொட்டி சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமையில் 250 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும், 40 தலைமையாசிரியர்கள் துறை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Read more »

குறிக்கோளை அடைய அயராது உழைக்க வேண்டும்:நீதிபதிராமபத்திரன்அறிவுரை

கடலூர்:

                   வள்ளலாரின் பசித்திரு, தனித்திரு, விழித்திரு தத்துவத்தை கடைபிடித்தால் "பதவி' தேடி வரும் என நீதிபதி ராமபத்திரன் கூறினார். க டலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆக்னல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில மாவட்ட அமர்வு நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது:

                  மாணவர்கள் குறிக் கோளை அடைய தீவிர முயற்சி செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆசை படுவதை அடைய அல் லும், பகலும் அயராது உழைக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்டு அதன்படி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். வள் ளலாரின் (ப)சித்திரு, (த)னித்திரு, (வி)ழித்திரு என்ற தத்துவத்தை கடைபிடித்து வந்தால் "பதவி' தேடி வரும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது.
                    வாழ்வியல் கல்வியும் அவசியம். குழந் தைகள் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற பாடலுக்கு ஏற்ப பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்தால் அவர் கள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வருவார்கள் என் பதில் சந்தேகமில்லை. இவ்வாறு நீதிபதி ராமபத்திரன் பேசினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அதிகாரி திருமுகம், ஜோசப் ஞானராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.பாலர் பள்ளி முதல்வர் சூசைராஜ் நன்றி கூறினார்.

Read more »

தென்னாற்காடு மாவட்டஆசிரியர் இல்ல மீட்பு கூட்டம்

கடலூர்:

               ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர் இல்ல இடம் மீட்பு மற்றும் ஆசிரியர் இல்லம் அமைப்பு நடவடிக் கைக்குழு கூட்டம் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சஞ்சிவிராயன் தலைமை தாங்கினார். விஜயரங்கன் வரவேற்றார். குப்புசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடலூரில் ஆசிரியர் இல்லம் கட்ட ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்பில் வாங்கிய 1.20 சென்ட் இடத்தை கிரயப்பத்திரத்தில் உள்ளபடி பதவி வழி சி.இ.ஓ., விடம் பத்திரத்தையும், கடலூர் கனரா வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி தஸ்தாவேஜிகளையும் உடனே மீட்டு ஆசிரியர் இல்லம் கட்ட நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ., வை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தகுறவர் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்:

                  பழங்குடி மக்களின் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென தமிழ்நாடு குறவர் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

                    குறவர் இனம் உட்பட தலித்-பழங்குடி மக்களின் அரசியல் விழிப்புணர்வு வாழ்வுரிமை மாவட்ட மாநாடு கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் திருவாதிரை தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். மாநாட்டை மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். துணை சேர்மன் தாமரைச் செல்வன், மாநில துணைப்பொதுச் செயலாளர் தேவகலையழகன், பெருமாள், நாகை ராமலிங்கம், தேனி முருகேசன், ஈரோடு சண்முகம், திண்டுக்கல் ஸ்ரீராமி, திருச்சி தேவி, மகேந்திரன், விவேகானந்தன், புகழேந்தி பங்கேற்றனர்.
                     கூட்டத்தில் மத்திய அரசால் 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பழங்குடி மக்களின் வன உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். குறவர் பழங்குடி மக்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்று வழங்க மறுக் கும் போக்கை கைவிட்டு இனச்சான்று குறித்த இதர சமூகத்திற்கு பின்பற்றும் அதே நிலையை பின்பற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் முனுசாமி நன்றி கூறினார்.

Read more »

ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள்நல சங்கம் கடலூரில் துவங்கியது

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீசாருக்கு மட்டுமின்றி பணியிலிருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மன்றத்தை அணுகினால் ஆதரவாக குரல் கொடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் காசிநாதன் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

               சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக பாலுசாமி, செயலாளராக வடிவேல், இணை செயலாளராக பாலு, பொருளாளராக மணி, செய்தித் தொடர்பு அதிகாரியாக நூருல்லாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 60க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Read more »

சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி தலைவர்மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவு

கடலூர்:

           முறைகேடு புகார் சம்பவத்தை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மாயவேல், நிதி முறைகேடு செய்த புகாரை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். அதனை ரத்து செய்யக் கோரி மாயவேல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஊரக வளர்ச்சி துறை மற் றும் ஊராட்சி முதன்மை செயலர் அஷாக் வர்தன் ஷெட்டி பிறப்பித்த உத்தரவை ஏற்று, மாயவேலை சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி தலைவராக தொடர கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம்

கடலூர்: 

                      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா தோட்டப்பட்டு கிராமத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். சுந்தரமூர்த்தி, வக்கீல் அருணாசலம் வாழ்த்தி பேசினார்.

Read more »

சுத்துக்குளத்தில்நிகும்பலா யாகம்

கடலூர்:

            சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கடலூர் முதுநகர் சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை யொட்டி "நிகும்பலா யாகம்' நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் முத்துக்குமாரசாமி செய்திருந்தார்.

Read more »

சம்பா பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை

கிள்ளை: 

        சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை நடந்தது. பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்டத்தின் மூலம் களை பரிசோதனை முன்னோடி விவசாயி குலசேகர் வயலில் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது கதிர் முற்றிய நிலையில் நடந்த அறுவடை நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி தலைமை தாங்கினார். வேளாண் துணை துணை இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் தனசேகர், வேளாண் அலுவலர் விஜயா, விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

திருத்தப்பட்ட பதிவு சான்று பெறதொழிலாளர் துறை அழைப்பு

கடலூர்:

            திருத்தப்பட்ட போக்குவரத்து தொழிலாளர் சட்டம் பிரிவின் கீழ் பதிவுச் சான்று பெற மோட்டார் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்து தொழிலாளர் துறை ஆய்வாளர் கமலக்கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                மாவட்டத்தில் இயங்கி வரும் மோட் டார் போக்குவரத்து நிறுவனங்கள், லாரி, மினி பஸ், டாக்சி உரிமையாளர்கள் அனைவரும் அரசாணை எண்.183 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (எச்1) துறை நாள்: 22-12-09 மற்றும் தமிழ்நாடு அரசிதழ் நாள் 22-12-09ல் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் பிரிவு 1(4)ன் கீழ் பதிவு சான்று பெற வேண்டும்.இச்சான்று பெற தொழிலாளர் ஆய்வாளர், 60 சுப்புராயலு நகர், 2வது குறுக்குத் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் என்ற விலாசத்தில் தொடர்பு கொண்டு பதிவு சான்று பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more »

மாரியம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை

கடலூர்:

                  கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தை மாதம் கடைசி வெளிக்கிழமையையொட்டி கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் விளக் கேற்றி பூஜை செய்து அம்மனை வணங் கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடேசன், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Read more »

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தாமதம்:மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்பு

நடுவீரப்பட்டு:

               சி.என்.பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவ,மாணவிகளின் கல்வி தரம் பாதிப்படையும் நிலை உள்ளது. பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கடைவீதி மற்றும் மழவராயநல்லூர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரிய, ஆசிரியைகள் கடலூரிலிருந்து வேன் மூலம் மிகவும் தாமதமாக வருகின்றனர். வகுப்புக்கு செல்ல காலை 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.

             தனித்தனியாக பஸ்சில் வரும் போதாவது ஒரு சில ஆசிரியைகளை தவிர மற்றவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்தனர். ஆனால் வேன் வசதி ஏற்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியைகளும் தாமதமாக வருவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் காலை 11 மணி வரையில் மாணவர்கள் அதிகளவு ரோட்டு பகுதியில் சுற்றித்திரிகின்றனர். இதனால் கல்வித்தரம் குறைவதோடு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆசிரிய, ஆசிரியைகள் தாமதமாக வருவதை தவிர்க்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

Read more »

பாசன வாய்க்கால் ஆக்ரமிப்பு: உண்ணாவிரதம் இருக்க முடிவு

சேத்தியாத்தோப்பு:

                  வட்டத்தூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் பகுதியில் உள்ள தனிநபர் ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி 17ம் தேதி உண்ணாவிரதம் மேற் கொள்ள கிராம பொதுமக் கள் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து வட்டத்தூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

                காட்டுமன்னார்கோவில் தாலுகா வட்டத்தூரில் வீராணம் ஏரியின் மேற்கு கரையில் உள்ள பாசன வாய்க்கால் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை சில தனிநபர்கள் ஆக்ரமித்துள்ளனர். இதனால் அப்பகுதி நிலங்கள் பாசனம் பெற முடியாத நிலை உள்ளது.
               மேலும், வடிகால் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நாசமாகின்றன. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற கோரி பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லை. எனவே தனிநபர் ஆக்ரமிப்பை அகற்ற கோரி வரும் 17ம் தேதி காட்டுமன்னார்கோயில் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை:பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல்

பரங்கிப்பேட்டை:

          பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு வருவாய்துறை மூலம் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு முதல் தடவையாக சுமார் 2500 பயனாளிகளின் அடையாள அட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் வந்துள்ளது. அடையாள அட்டைகளை வார்டு வாரியாக பிரித்து கொடுக்காமல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த வார்டு கவுன்சிலர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் தேவைக்கு ஏற்ப எடுத்து சென்றுவிட்டனர்.

           இதனால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் கிடைக்காமல் உள்ளது. அடையாள அட்டைகளை எடுத்து சென்றவர்கள் விபரம் தெரியாத அட்டைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் தாங்களே வைத்துள்ளனர். இதனால் கஷ்டப் பட்டு புகைப்படம் எடுத்தும் அடையாள அட்டை கிடைக்கவில்லையே என புலம்பி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.

Read more »

கார் மோதிபெண் பலி

கடலூர்:

            புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் கார் மோதி இறந்தார். கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி சரோஜா (55). சொந்த வேலை காரணமாக புதுச்சத்திரம் சென்ற இவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப பஸ் ஏறுவதற்காக புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது சிதம்பரம் - கடலூர் நோக்கி வந்த இண்டிகா கார் கட்டுப் பாட்டைஇழந்து சரோஜா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

லாட்ஜில் 'ரூம்' போட்டு சூதாட்டம்:வருவாய் ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது

கடலூர்:

           விருத்தாசலம் லாட்ஜில் "ரூம்' போட்டு சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் இரவு ஓட்டல், லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு சப் இன்ஸ் பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முல்லை நகர் அன்பு லாட் ஜில் அறை எண்.17ல் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு சுற்றி வளைத்து பிடித்தனர்.

              விசாரணையில், விருத் தாசலம் திரு.வி.க., நகர் ஆசிரியர் தேவராஜன் (48), கடலூர் நகராட்சி வருவாய் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் (47), பூதாமூர் முருகன் (45), பழமலை (42), எம்.பரூர் கொளஞ்சி (43), அரியலூர் உடையார் பாளையம் செல்வகுமார் (35), கார்கூடல் முன்னாள் தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் குறிஞ்சி செல்வன் (40), சிறுபாக்கம் வெள்ளமுத்து(40) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை கைப்பற்றினர்.பிடிபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் லாட்ஜ் ஓனர் முகமது அனிபா, மேனேஜர் ஜாகீர் உசேன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

கணவன் திட்டியதால்மனைவி தற்கொலை

கடலூர்: 

         புதுப்பேட்டை அருகே கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற் கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அடுத்த வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காவேரி (35). சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் முருகன் தனது மனைவியிடம் குழந்தைகளை சரியாக வளர்க்கவில்லை, கெடுத்து விட்டாய் என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காவேரி கடந்த 12ம் தேதி இரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 14ம் தேதி காலை இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கம்பியால் தாக்கியதில்வாலிபர் படுகாயம்

ராமநத்தம்:

         கட்டுமான பணியில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார். ராமநத்தம் அடுத்த எழுத்தூரை சேர்ந்தவர் கள் துரைராஜ் (32), வரதராஜ் (38). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரது வீடு கட்டுமான பணியை பங்கிட்டு செய்து வந்தனர். இந்நிலையில் வரதராஜ் கூலிக்கு வேலை செய்வதாக துரைராஜ் கூறியுள்ளார்.அதில் ஏற்பட்ட தகராறில் துரைராஜ் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த வரதராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கடலூர்:

         கிள்ளையில் வயிற்று வலியால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார். கிள்ளை கள்ளிமேடு காலனியைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில்குமார் (23). இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வயிற்று வலி அதிகமாகவே வாழ்க்கையை வெறுத்த இவர் பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் மறு நாள் காலை இறந்தார்.கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior