உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

ரயில்வே பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள்

புதுடில்லி : 
              வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே போல், சரக்கு கட்டணத்திலும் மாற்றம் இல்லை. காலியாக உள்ள ரயில்வே இடங்களில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டுதல், ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகளில் வீடு, ஆளில்லா லெவல் கிராசிங்குகளை ஒழிக்க மெகா திட்டம், இ-டிக்கெட் சர்வீஸ் கட்டணத்தில் வெட்டு, ஒரே ஆண்டில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய ரயில் பாதை திட்டம் என, ஏராளமான சலுகைகளையும் அறிவித்தார் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. புற்றுநோய் சிகிச்சைக்கு இலவச பயணம், சினிமா தொழிலாளர்களுக்கு கட்டண சலுகை போன்றவையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

                   மத்திய அரசின் 2010-11ம் ஆண்டுக்கான, ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். பொருளாதார கண்ணோட்டம் மட்டுமல்லாது, சமூக கண்ணோட்டத்துடனும் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக கூறிய அவரின் உரையில், பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே நீடிக்கும். தற்போது இ-டிக்கெட் முறையில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டில், பதிவு கட்டணம் என தனியாக வசூல் செய்யப்படுகிறது. இரண்டாம் வகுப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.15 ஆக இருப்பது 10 ரூபாயாகவும், "ஏசி' வகுப்பு பதிவுக் கட்டணம் 40லிருந்து 20 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக 52 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக் கான ரயில்வே வாரிய தேர்வு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக 94 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் நிலையங்களாக உயர்த்தப்படுகின்றன. 10 ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக மாற்றப் படுகின்றன. 93 இடங்களில் பல்முனை வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ்கள் கட்டப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளே இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படும். இதற்கான மெகா திட்டம் செயல்படுத்தப்படும்.
வீடு: 

             மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்கீழ் அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் வீடு கட்டித்தரப்படும். சிறப்பு சரக்கு போக்குவரத்து ரயில் இயக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவர். சினிமா படப்பிடிப்புக்கு செல்லும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 75 சதவீதமும், "ஏசி' வகுப்பில் 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளது. புற்றுநோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக சென்றால், அவர்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் 3வது "ஏசி' வகுப்பில், இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுடன் துணைக்கு செல்லும் ஒருவரும் கட்டணமின்றி பயணிக்கலாம். பத்திரிகையாளர்களின் மனைவியருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, மனைவி இல்லாமல் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் 18 வயது வரை உள்ள உறவினர்களுக்கும் 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படும். உள்ளூர் தேவைகளுக்காக அனுப்பப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு சரக்கு கட்டணம் ஒரு பெட்டிக்கு ரூ.100 வரை தள்ளுபடி செய்யப்படும். 

         இதுவரை போடப்பட்ட ரயில் பட்ஜெட்களிலேயே அதிக அளவு திட்ட மதிப்பீடாக ரூ.41 ஆயிரத்து 426 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு ரூ.4,441 கோடியும், பயணிகள் வசதிகளுக்கு என ரூ. 1,302 கோடியும், மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.1,001 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய ரயில் பாதைகள் அமைத்தல், துறைமுகங்களுக்கான ரயில்பாதை, உற்பத்தி நடவடிக்கைகள், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, பொதுத்துறை, தனியார் பங்களிப்பு மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

* பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை.

* புதிய ரயில் பாதைகளுக்கான ஒதுக்கீடு 1,302 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு 923 கோடி ரூபாய்.

* 120 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 117 ரயில்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் இயக்கப்படும். அகல ரயில் பாதை இல்லாததால், மூன்று ரயில்களை மட்டும் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

* 52 நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களும் மற்றும் 28 பயணிகள் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும்.

* 12 ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப் பட்டுள்ளது. 21 ரயில்கள் நீட்டிக்கப் பட்டுள்ளன.

* ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுவதால், பெண்கள், சீருடை அணிந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

* இரண்டு அடுக்கு பெட்டி: டில்லி மற்றும் கோல்கட்டாவில் இருந்து இயக்கப்படும் தலா இரு ரயில்களில், இரண்டு அடுக்கு பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.

* 94 ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் நிலையங்களாக மேம்படுத்தப்படும். மேலும் 10 ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றப்படும்.

* ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் அனைத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.

* இ-டிக்கெட்களுக்கான சேவை கட்டணம் குறைக்கப்படும். தூங்கும் வசதி பெட்டிகளுக்கு வாங்கும் இ-டிக்கெட் சர்வீஸ் கட்டணம் 10 ரூபாய் குறையும். "ஏசி' வகுப்பு இ-டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் குறையும் .

* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் அளவில் டிக்கெட் மையங்கள் திறக்கப்படும்.

* புற்றுநோயாளிகளுக்கும், அவர்களுடன் பாதுகாவலாய் பயணிக்கும் ஒரு நபருக்கும் 100 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கட்டண சலுகை.

* மூத்த குடிமக்கள் மற்றும் பெண் பயணிகளுக்கு உதவுவதற்காக, நவீன லக்கேஜ் டிராலிகள் அறிமுகப்படுத் தப்படும். இந்த டிராலிகளை, சீருடை அணிந்த உதவியாளர் கள் தள்ளிச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

* பயணிகளுக்கு சுத்தமான குடி தண்ணீரை மலிவான விலையில் வழங்க, ஆறு பாட்டிலிங் நிறுவனங்கள் துவக்கப்படும்.

* பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில்வே போலீஸ் படையில், 12 கம்பெனி பெண் போலீஸ் படையினர் உருவாக்கப்படும். இந்தப் படையினர், "மகிளா வாகினி' என அழைக்கப்படுவர். இதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

* உள்ளூர் மொழி: ரயில்வே வாரிய தேர்வுகளில் பங்கேற்கும் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

* மேலும், ரயில்வே வாரிய தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இனி உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கும்.

* உணவு தானியங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான கெரசின் போன்றவற்றுக்கு, சரக்கு கட்டணத்தில் சலுகை தரப்படும்.

* ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வீடுகள் கட்டித் தரப்படும்.

* ரயில்வே ஊழியர்களுக்காக 522 மருத்துவமனைகள், 50 கேந்திரியா வித்யாலயாக்கள், 10 உறைவிடப் பள்ளிகள், மாதிரி கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் போன்றவை துவக்கப்படும். உபரியாக உள்ள ரயில்வே நிலங்களில் இவை துவக்கப்படும்.

* 2010-11ம் நிதியாண்டில், 94.4 கோடி டன் அளவுக்கு சரக்கு போக்குவரத்தை நடத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் மாற்றி அமைக்கப் பட்ட இலக்கை விட 5.4 கோடி டன் அதிகம்.

* புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடு, தற்போதுள்ள 2,848 கோடிரூபாயிலிருந்து 4,411 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* பொருளாதார மந்த நிலை நிலவினாலும், நடப்பு நிதியாண்டில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து இலக்கு நிர்ணயித்ததை விட 80 லட்சம் டன் அதிகரித்துள்ளது.

* சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனப்படுத்தப்படும் மற்றும் புதிய பிரிவு ஒன்று துவக்கப்படும்.

* உ.பி., ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான பணிகள், ஒரு ஆண்டிற்குள் துவக்கப்படும்.

* ரயில்வே பாதுகாப்புப் படையில் முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கப்படுவர்.

* அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரையும், வடக்கு அந்தமானின் திக்லிபூரையும் இணைக்கும் வகையில், அங்கு முதல் ரயில் பாதை அமைக்கப்படும்.

* டில்லி, செகந்திராபாத், கோல்கட்டா, சென்னை மற்றும் மும்பையில், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு தரப்படும்.

* ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா என்ற திட்டம், போர்ட்டர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்காக துவக்கப்படும்.

* செகந்திராபாத், பர்த்தாமன், கவுகாத்தி, புவனேஸ்வர் மற்றும் ஹால்டியாவில் சரக்கு பெட்டிகள் தொழிற் சாலை துவக்கப்படும்.
* சிக்கன நடவடிக்கை மூலம் 2,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது.

* ஒரு ரூபாய் வரவில் ஊழியர் செலவு 34 பைசா: உலகின் மிகப் பெரிய போக்குவரத்துத் துறையான இந்தியன் ரயில்வேயில், வருமானத்தில் கிடைக்கும் ஒரு ரூபாயில் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளாக 34 பைசா ஒதுக்கப்படுகிறது. 

மத்திய ரயில்வேயின் 2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

* வருமானம்: *ரயில்வேயின் மொத்த வருமானத்தில் ஒரு ரூபாயில், 66 பைசா சரக்குப் போக்குவரத்தின் மூலம் கிடைக்கிறது. அதில் நிலக்கரி மூலம் 24 ஆயிரத்து 319 கோடி ரூபாயும்; சிமென்ட் மூலம் 5,600 கோடி ரூபாயும்; தானியங்கள் மூலம் 3,698 கோடி ரூபாயும்; உரங்கள் வகையில் 3,506 கோடி ரூபாயும்; பெட்ரோலியப் பொருட்கள் மூலம் 3,472 கோடி ரூபாயும்; கன்டெய்னர் சேவை மூலம் 3,025 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது.

* பயணிகள் கட்டணம் மூலம் ஒரு ரூபாயில் 27 பைசா வருமானம் கிடைக்கிறது.

* சரக்கு போக்குவரத்து அதிகரிப்பால், 2010-11ல், சரக்குப் போக்குவரத்து மூலம் 62 ஆயிரத்து 489 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது கடந்த நிதியாண்டை விட 6.4 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் இந்த வருமானம் 58 ஆயிரத்து 715 கோடி ரூபாயாக இருந்தது.

* பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பால் 2010-11ல் 26 ஆயிரத்து 126 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது கடந்த நிதியாண்டை விட 8.6 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் இந்த வருமானம் 24 ஆயிரத்து 57 கோடி ரூபாயாக இருந்தது.

* செலவு: * ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்கு ஒரு ரூபாயில் 34 பைசா செலவழிக்கப்படுகிறது.

* ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக 13 பைசா செலவாகிறது.

* எரிபொருளுக்காக மொத்த வருமானத்தில் 17 சதவீதம் செலவாகிறது.

* பங்கு ஆதாய தொகைக்காக 8 சதவீதம்; அரசுக்கு வழங்கப்படும் பங்காக 6 பைசா; குத்தகைச் செலவுகளுக்காக 4 பைசா; மூலதனப் பங்காக 4 பைசா வீதம் செலவாகிறது.

* ரயில்வேயின் வளர்ச்சி நிதிக்காக 2 பைசா செலவழிக்கப்படுகிறது.

* 52 நீண்ட தூர ரயில்களும் புதிதாக வருது: "இந்தியாவில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில், மேலும் 10 ரயில் நிலையங்கள், உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்' என, மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அம்பாலா, போல்பூர், எர்ணாகுளம், ஜம்மு, சூரத் உட்பட 10 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன. அதே போன்று சங்கனாச்சேரி, கூடூர், கொச்சுவேலி, ஜாம்நகர், சுல்தான்பூர், திருவாரூர், வயலார், ஹிம்மத் நகர், ஜக்தீஸ்பூர் உட்பட 94 ரயில் நிலையங்கள் மாதிரி (ஆதர்ஷ்) ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன. மகளிர் சிறப்பு ரயில்கள், "மாத்ரபூமி சிறப்பு ரயில்' என பெயர் மாற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், முன்பதிவு இல்லாத மூன்று, "கரம்பூமி' ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாமர மக்களுக்கு பயன்படும் ரயில்கள் இவை. ஹவுரா - காட்பாடி, புவனேஸ்வர் வழியாக புதுச்சேரி எக்ஸ்பிரஸ், ஹல்தியா - சென்னை எக்ஸ்பிரஸ்(வாரம்), மதுரை - ஓசூர் வழியாக நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வாரம்), மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை ), பன்வல் வழியாக, புனே - எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் (வாரம் இருமுறை), சேலம் வழியாக, கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரம் மூன்று முறை), மதுரை - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை) உட்பட 52 புதிய நீண்ட தூர ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* காமன்வெல்த் போட்டிக்காக சிறப்பு ரயில்: "இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதன் அடையாளமாக, அதற்கென, "சிறப்பு கண்காட்சி ரயில்' நாடு முழுவதும் இயக்கப்படும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது: டில்லியில், வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகளை இந்தியா நடத்துவதன் அடையாளமாகவும், இது குறித்த தகவல்களை பரப்பவும், "காமன்வெல்த் கண்காட்சி ரயில்' துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக, சென்னை, செகந்திராபாத், டில்லி மற்றும் மும்பை உட்பட ஐந்து இடங்களில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விளையாட்டு வீரர்களுக்கு, ரயில்வேயில் அதிகளவு வேலை வாய்ப்பு சலுகைகள் அளிக்கப்படும். இவ்வாறு மம்தா கூறினார்.

அகலப்பாதை மாற்றம் எங்கே? 2010ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் 

அகலப் பாதை மாற்ற திட்டங்கள்:

* தஞ்சை - விழுப்புரம் பாதையில் உள்ள கடலூர் - சீர்காழி பகுதி

* வேலூர் - விழுப்புரம் * தென்காசி - விருதுநகர்

2010-11ம் ஆண்டுக்குள் நிறைவேறும் மாற்ற திட்டங்கள்

* திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு பாதையில் உள்ள திண்டுக்கல் - பழநி பகுதி.

2010ம் ஆண்டுக்குள் நிறைவேறும் புதிய ரயில்தடம்

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி

2010-11ம் ஆண்டுக்குள் நிறைவேறும் புதிய ரயில்தடம்:

*சேலம் - நாமக்கல் * நாகூர் - காரைக்கால்

இந்த புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் தடம்: எதுவும் இல்லை. ஆனால், நீடாமங்கலம் - மன்னார் குடி பாதை அமைக்கும் பணி எடுத்துக்கொள்ளப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புதிய ரயில்கள்

புறநகர் ரயில்கள்

* சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை - சென்னை கடற்கரை,

* சென்னை கடற்கரை - திருத்தணி - சென்னை சென்ட்ரல்,

* சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்.

* வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் வரையிலான பாதை வரும் 2012ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற திட்டம்.

நீண்டதூர ரயில்கள் அறிமுகம்

1. அவுரா - காட்பாடி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ். வழி புவனேஸ்வர் (வாரம் ஒருமுறை)

2. நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை) வழி மதுரை - ஓசூர்

3. மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் ( வாரம் ஒரு முறை)

4. கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ( வாரம் மூன்று முறை) வழி சேலம்.

5.மதுரை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ( வாரம் இரு முறை)

6. ஹால்தியா - சென்னை( வாரம் ஒரு முறை)

பயணிகள் ரயில்

திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர்

மயிலாடுதுறை - தஞ்சாவூர் பாசஞ்சர்

கோவை - பொள்ளாச்சி பாசஞ்சர்

புனித யாத்திரை ரயில்கள்

1. அவுரா - சென்னை - புதுச்சேரி - மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - பெங்களூரு - சென்னை - அவுரா.

2. போபால் - துவாரகா - காஞ்சிபுரம் - ராமேஸ்வரம் - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - கொச்சி - போபால்.

3. மதுரை - சென்னை - கோபர்கன் - மந்திராலயம் - சென்னை - மதுரை.

4. மதுரை - ஈரோடு - புனே - உஜ்ஜயினி - வேரவேல் - நாசிக் - ஐதராபாத் - சென்னை - மதுரை.

5. மதுரை - சென்னை - ஜெய்ப்பூர் - டில்லி - மதுரா - பிருந்தாவன் - அலகாபாத் - வாரணாசி - கயா - சென்னை - மதுரை.

6.மதுரை - வாரணாசி - கயா - பாட்னாசாகிப் - அலகாபாத் - அரித்துவார் - சண்டிகார் - குருஷேத்ரா - அமிர்தசரஸ் - டில்லி - மதுரை.

7.மதுரை - மைசூரு - கோவா - மும்பை - அவுரங்காபாத் - ஐதராபாத் - மதுரை.

Read more »

சச்சின் சாதனை


 


சச்சின் சாதனை:

           சச்சின், ஒருநாள் அரங்கில் 195 ரன்கள் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்தார். தவிர, இச்சாதனை படைக்கும் முதல் வீரர் இவர் தான்.

Read more »

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் தேர்வு பட்டியலை கலெக்டர் ஆய்வு


பண்ருட்டி : 

             பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தேர்வு செய்த பயனாளிகள் குறித்து கலெக்டர் சீத்தாராமன்  நேரில் ஆய்வு செய்தார்.
 
                    கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில்  ஒரு கிராமம் தேர்வு செய்து கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கூரைவீடுகள் கணக் கெடுப்பு பணி நடந்து வருகிறது.   பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில்  மணப்பாக்கம் ஊராட்சி  தேர்வு செய்யப் பட்டு   கூரைவீடுகள் பட்டியல் மக்கள் நலப்பணியாளர் கள், வி.ஏ.ஓ., ஊராட்சி உதவியாளர்கள் குழுவினரால் தயார் செய்யப் பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலை கலெக்டர் சீத் தாராமன் ஆய்வு செய்தார். இதில் பண்ருட்டி தாசில் தார் பாபு, பி.டி.ஓ.,க்கள் கல்யாண்குமார், ரீட்டா,  ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி,  துணைத் தலைவர் ராகவன் பங்கேற்றனர்.
 
பின்னர் கலெக்டர் சீத் தாராமன் கூறியதாவது: 

                        கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்து கூரைவீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி முதற்கட்டமாக மக்கள் நலப்பணியாளர், வி.ஏ.ஓ.,உதவியாளர் அடங்கிய குழுவினர் தயார் செய்தனர். இதனை ஆய்வு செய்துள்ளோம். இங்கு  கூரை வீடுகள் அரசு விதிமுறைப்படி தயார் செய்துள்ளனர்.  மாவட்டம் முழுவதும் 13 ஊராட்சியில் கூரைவீடுகள் பட்டியல் பணி முடிந்தது. பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்குவது குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு நேரில் வந்து  முடிவு செய்வோம் என்றார்.

Read more »

கலைமாமணி, தமிழ்மாமணி விருது கேள்விக்குறி! விருதாளர்கள் தேர்வு பணி முடக்கம்

                 கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் இந்தாண்டு காலத்தோடு வழங்கப்படுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. புதுச்சேரி அரசின் கலை பண் பாட்டுத் துறை சார்பில் தமிழறிஞர்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் தமிழ்மாமணி, புதுச்சேரி கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
            இதுவரை  95 பேருக்கு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளுக்கான பரிசுத் தொகையும் கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. தமிழ்மாமணி விருதுக்கு 3 சவரன் தங்க நாணயம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, கலைமாமணி விருதுக்கு 2 சவரன் தங்க நாணயம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
 
            இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான இரு குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி தேர்வு செய்யும். கலைமாமணி தேர்வுக் குழுவின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்வுக் குழு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான இந்த குழுவில் கலை மற்றும் பண்பாடு சிறப்பு செயலர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
 
             மேலும், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களான சித்தன் (எ)ராதாகிருஷ்ணன் (இலக்கியம்), பட்டாபிராமன்(இசை), முருகன் (நடனம்), காரை சுப்பையா (நாடகம்), முனுசாமி (சிற்பம்), கேசவசாமி (நாட்டுப்புற கலைகள்) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவின் உறுப்பினர் செயலராக கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் செயல்படுவார்.
 
              ஏற்கனவே இருந்த தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிந்து, 4 மாதங்களுக்கு பிறகு காலதாமதமாக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு பிறகு தேர்வுக் குழு கூடி, வந்துள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து விருதாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.இதுமட்டுமல்லாமல், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க நாணயங் களை முறைப்படி டெண்டர் வைத்த பிறகே வாங்க முடியும். இந்த நடைமுறைக்கு ஒரு மாத காலம் தேவைப் படும்.மேலும், அமைச்சக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட் டத்தாலும் விருதாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முடங்கி உள்ளன.
 
                    இதுபோன்ற காரணங்களால் கடந்த ஆண்டுக்கான (2008-09) கலைமாமணி விருதுகள் காலத்தோடு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்மாமணி விருதுக்கான தேர்வுக் குழு தற்போது செயல் பாட்டில்  உள்ளது.  இருந்தபோதும் கலைமாமணி விருதுடன் சேர்த்தே வழங் கப்படும் என்பதால் தமிழ்மாமணி விருது வழங்குவதும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

ஜெ., பிறந்த நாள் விழாவையொட்டி 600க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

கடலூர் : 

                ஜெ., பிறந்த நாளையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
                  கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாளையொட்டி கடலூர்  பாடலீஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், தேவநாத சுவாமி கோவில் களில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் செய்தனர். கடலூர் டவுன்ஹால், ரோட்டரி ஹால், அரசு மருத்துவமனை, விருத்தாசலம் மற்றும் நெய்வேலியில் நடந்த ரத்ததான முகாமை மாவட்ட செயலாளர் சம்பத் துவக்கி வைத்தார். இதில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிகளில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமரசாமி, நகர செயலாளர் குமரன், இளைஞரணி தலைவர் மாதவன், இலக்கிய அணி செயலாளர் நத்தம் கோபு, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன், சரவணன், ரவீந்திரன், முருகுமணி மற்றும் ஜெகன் லெட்சுமி நாராயணன், தமிழ்ச்செல்வன், ஜெ., பேரவை சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சிவசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் நிதியுதவி

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.
 
                நிகழ்ச்சிக்கு இன்ஜினியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் வாசு, எழுத்தர் பாபு முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சேர்மன் கெய்க் வாட்பாபு 121 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ஆராயிரம் வீதம் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Read more »

விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திட்டக்குடி : 

                திட்டக்குடி அருகே அபாயகர வளைவில் விபத்தினை எதிர்நோக்கி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
 
                   திட்டக்குடி- தொழுதூர் சாலையில் இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ஆபத்தான வளைவு உள் ளது. இங்கு அமைக்கப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்திலான தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், வாகனங்கள் மோதியதாலும் சிதைந்து பயனற்று கிடக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத் துகள் அடிக்கடி நடக்கிறது. அண்மையில் பெய்த கனமழையால் அபாயகர வளைவில் அமைந்துள்ள வடிகால் முற்றிலும் தண் ணீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கியதால் பயிர்களை காப்பாற்றவும், வெள்ளாற்றுக்கு தண்ணீரை திருப்பி விடவும் பொக்லைன் இயந்திரம் கொண்டு வடிகாலை வெட்டி அகலப்படுத்தினர். இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது. எனவே அபாயகர வளைவில் தடுப்பு கட்டை அமைக்கவும், மண் அரிமானத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க் கின்றனர்.

Read more »

சிதம்பரத்தில் நாளை வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரத்தில் நாளை (26ம் தேதி) அரசின் வருமுன்காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                        தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (26ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை நடக்கிறது. முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இருதயநோய், புற்றுநோய், கண், காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம் மற்றும் குடல்நோய், குழந்தைகள் நலம், பெண்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றிக்கு அண்ணாமலைப் பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். ரத்த அழுத்தம் , இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர், சளி, ரத்தம் கிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருது பெற்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா

விருத்தாசலம் : 

                புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் வளரும் தமிழ் கலைஞர் விருது பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
               பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் தமிழ் கலைத்திறன் வளர்ச்சி போட்டி தஞ்சாவூரில் நடந்தது. இதில் 13 மாவட்டங்களில் இருந்து 40 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி 12ம் வகுப்பு மாணவன் செல்வமணி பேச்சு, கவிதை, குறள் ஒப்பித்தல் ஆகிய மூன்று போட்டிகளில் முதலிடத்தை பெற்றார். மேலும் மாறுவேடப் போட்டியில் 2ம் இடத்தையும், தனிநடிப்பு போட்டியில் 3ம் இடத்தையும் பெற்றார். பல பரிசுகள் பெற்ற மாணவன் செல்வமணிக்கு பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் வளரும் தமிழ் கலைஞர் விருது வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்று விருது வாங்கிய மாணவன் செல்வமணிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அதிசயராஜன் தலைமை தாங்கி செல்வமணியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ரவீந்திரநாதன், பால்அருள்குமார், ஆசிரியர்கள் அன்புசெல்வி, அன்பழகன், ராதாகிருஷ்ணன், ஆல்பர்ட் உடனிருந்தனர்.

Read more »

மிலாடி நபியையொட்டி மதுபான கடைகள் மூட உத்தரவு

கடலூர் : 

               மிலாடி நபியையொட்டி வரும் 27ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   வரும் 27ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி (மிலாடி நபி) அன்றைய தினம் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற் பார்வையாளர்கள் அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  இதனை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தால் கடை மேற் பார்வையாளர் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

மாணவிக்கு தையல் மிஷின்

கடலூர் : 

                   தையல் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கெஜலட்சுமிக்கு கடலூர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் தங்கராஜ் தையல் மிஷின் வழங்கினார். தமிழ்நாடு நலவாரியம் சார்பில் 2008ம் ஆண்டு தையல் அரசுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்நிலை மாணவி கெஜலட்சுமிக்கு பரிசளிப்பு விழா கடலூர் தொழிலாளர் நல மையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கடலூர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் தங்கராஜ், கெஜலட்சுமிக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

Read more »

மத்திய கலால் வரி தின விழா


புதுச்சேரி : 

                          புதுச்சேரியில் மத்திய கலால் வரி தின விழா நேற்று நடந்தது. ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கலால் துறை கமிஷனர் ராவ் வரவேற்றார். முதன்மை விருந்தினரான வருமான வரித்துறை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். இவர், கடந்தாண்டு அதிக கலால் வரி மற்றும் சேவை வரி செலுத்திய 5 பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களான கடலூர் பி.எஸ். என்.எல்., ஹிந்துஸ்தான் யுனிலீவர்,  இயற்கை எண்ணெய் வாயு, விப்ரோ மற்றும் லாவண்யா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு "சன்மான்' விருது வழங்கினார்.
 
                      சிறந்த சேவை புரிந்து ஜனாதிபதி விருது பெற்றமைக்காக புதுச்சேரி கலால் துறை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் கவுரவிக்கப்பட்டார். மேலும், கலால் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் உற்பத்தியாளர்கள், வணிக பிரதிநிதிகள், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் குருநாதன் நன்றி கூறினார். புதுச்சேரி மத்திய கலால் மற்றும் சேவை வரி ஆணையம் நடப்பு நிதியாண்டில் இதுவரை 288 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கலால் துறையின் பங்கு 168 கோடி ரூபாய், சேவை வரியின் பங்கு 120 கோடி ரூபாய் ஆகும்.

Read more »

மதுக்கடைகளை வரும் 27ம் தேதி மூட உத்தரவு

புதுச்சேரி : 

             மிலாது நபி தினத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என கலால் துறை அறிவித்துள்ளது. 

புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

             புதுச்சேரியில் மிலாது நபி தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில் உள்ள கள்ளு, சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் உணவகங் கள் மூடப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more »

மத்திய பட்ஜெட் குறித்து குழு விவாதம்

காலாப்பட்டு : 

                  புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை துறை கருத்தரங்க அறையில் பொருளாதார துறை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் 2010 -11 குறித்த முன்னோட்டம், குழு விவாதம் நடந்தது.
 
                  பேராசிரியர் இப்ராகிம் வரவேற்றார். பல்கலைக்கழக பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் பட்ஜெட் தயாரிப்பது குறித்து பேசுகையில், "வரவு செலவு நிதிநிலை அறிக்கையில் நிதி பற்றாக் குறையை போக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடலாம். உயர்ந்துள்ள விலைவாசியை போக்க நிதி பற் றாக்குறை, பண புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் பொருட்களின் விலையை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது. விவசாய துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் வரவு செலவு நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், சுற்றுலா துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்றார். சிறப்பு விருந்தினராக சிவகொழுந்து தொழில்துறை சார்பில் கலந்து கொண்டார். புதுச்சேரி சிறு தொழில் கூட்டமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் கனகசபை, பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் அறவாணன், பாரதிதாசன் மகளிர் கல்லூரி பொருளாதார துறை தலைவர் பிச்சுமணி,புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் சிவசங்கரன் பங்கேற்று பேசினர். அமைப்பு செயலாளர் பேராசிரியர் முத்தையன் நன்றி கூறினார். 

Read more »

புதுச்சத்திரத்திற்கு புதிய பஸ்: கலெக்டரிடம் கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

               சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் அரசு டவுன் பஸ் பழுதாகி விடுவதால் புதிய பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
                    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, சாத்தப்பாடி, வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம் வழியாக புதுச்சத்திரத்திற்கு அரசு டவுன் பஸ் செல்கிறது.  பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் காலை, மாலை வேலைகளில் அதிகளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல இந்த பஸ்சை விட்டால் வேறு பஸ் இந்த வழியாக கிடையாது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு மேல் கூட சரியாக இயங்குவது கிடையாது. இதனால் பழுதடைந்த பஸ்சை மாற்றி புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கொசு மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு பயிற்சி

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
 
                 மங்களூர் ஒன்றிய வளாகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை ஒழிக்கும் பயிற்சி முகாம் நேற்று  நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் புஷ்பராஜ், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கண்ணன் வரவேற்றார். டாக்டர்கள் மகேஸ் வரி, பிரேம்நாத் ஆகியோர் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், தடுப்பு வழிகள் குறித்து பயிற்சியளித்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

Read more »

மானிய விலையில் இடுபொருட்கள் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

திட்டக்குடி : 

         மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

              மங்களூர், திட்டக்குடி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையத்தில்  டி-9 உளுந்து, டி.எம்.வி- 2 மணிலா சான்று பெற்ற விதைகள், அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள், அஸாடிராக்ஷன், பயோலெப் போன்ற  தாவர பூச்சிக்கொல்லிகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் ஜிப்சம் ஆகியவை இருப்பு வைக்கப் பட்டு 50 சதவீத மானிய விலையில் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

Read more »

பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

நெய்வேலி : 

                    நெய்வேலியில் பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
                       என்.எல்.சி., நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து இறந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களின் 40 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி  நெய்வேலி டவுன்ஷிப்,  தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்தது. தொ. மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் கோபாலன், நகர செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பேரவைத் தலைவர் குப்புசாமி மற்றும் பேரவை செயலாளர் சண்முகம் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகளை வழங்கினர். தொ.மு.ச., பொருளாளர் ரகுராமன், அலுவலக செயலாளர் காத்தவராயன், நகர தலைவர் சிவந்தான்செட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு நுகர்வோர் சங்கம் கோரிக்கை

பண்ருட்டி : 

                  பண்ருட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் விற்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
                 பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற் குழு கூட்டம் நடந்தது.  சங்க தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். செல்வராஜ், கலியபெருமாள்,ஜோசப்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விழுப்புரம்-மாயிலாடுதுறை ரயில் இயங்கும் முன் பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷன் சாலையை சீரமைக்க வேண்டும். நகரில் உள்ள ஓட்டல், டீக்கடை, இரவு நேர டிபன் கடைகளில் உணவு பண்டங்களை  சுகாதாரமற்ற முறையில் விற்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

நெல்லிக்குப்பம் : 

               செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங் கும் விழா நடந்தது.
 
             நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சேவை மையத்தில் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். அலுவலர் சந்திரராசு முன்னிலை வகித்தார். செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு களை எடுக்கும் கோனாவீடர், மார்க்கர் கருவி, யூரியா, பொட்டாஷ், சூடோமோனாஸ் ஆகிய மூன்றாயிரம் மதிப்புள்ள பொருட்களை இணை இயக்குனர் இளங்கோவன் வழங்கினார். உதவி அலுவலர்கள் ராமதாஸ், மணியரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கடலூர் : 

                எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம் வரும் 27ம் தேதி பண்ருட்டியில் நடக்கிறது.
 
              பண்ருட்டி வட்டத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் வரும் 27ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. எரிவாயு நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிலிண்டர் பெறுவது தொடர்பாக தங்களது குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more »

வடிகால் பாலம் கட்டும் பணி துவக்கம்

சிதம்பரம் : 

                சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் 33 லட்சம் செலவில் வடிகால் பாலம் கட்டும் பணி துவங்கியது.
 
                   சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வடிகால் பாலம் இல்லாமல் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுனால் வடிகால் பாலம் கட்ட அந்த வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் நகராட்சி சார்பில் 33 லட்சம் செலவில் வடிகால் பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளதையடுத்து சேர்மன் பவுஜியாபேகம், இன்ஜினியர் மாரியப்பன், கவுன்சிலர் வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.

Read more »

மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்


பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டையில் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணியை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் துவக்கி வைத்தார்.
 
                  கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் நடவடிக் கைளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங் குவதற்கு புகைப்படும் எடுக்கும் பணி துவங்கியது. ஆரியநாட்டு சலங்குகார தெருவில் புகைப்படம் எடுக்கும் பணியை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  கிராம தலைவர் பரமசிவம், உள் நாட்டு மீனவர் சங்க தலைவர் சுப்ரமணியன், நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராமதாஸ், சுப்ரமணி, மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். 

Read more »

தொழிற் பயிற்சி முடித்த 15 பேருக்கு சான்றிதழ்

நெய்வேலி  : 

                    என்.எல்.சி., க்கு நிலம் மற்றும் வீடுகள் கொடுத்தவர்களுக்கு நிறுவனம் வழங்கி வரும் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த 15 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
                 என்.எல்.சி.,யின் சுரங்கப்பணிகளுக்காக தங்கள் வீடு மற்றும் நிலங்களை கொடுத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் செய்து பணம் சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள நிறுவனம் பல்வேறு தொழில் பயிற்சிகளை என்.எல்.சி., பயிற்சி வளாகத்தில் வழங்கி வருகிறது. 26வது குழுவிற்கு கனரக வாகனங்களை இயக் குதல், பராமரித்தல் மற்றும் பழுது நீக்குதல் போன்ற 15 நாள் பயிற்சியினை நிலம் மற்றும் வீடுகளை கொடுத்த 15 பேருக்கு அளிக்கப்பட் டது. இந்த பயிற்சியின் நிறைவு நாளில் என். எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் கந்தசாமி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நில எடுப்புத்துறை பொது மேலாளர் ராமலிங்கம், தலைமை மேலாளர்கள் ஸ்ரீதர், ஆனந்தன் மற்றும் வீரசிகாமணி, ஜோதி முகமது கலந்து கொண்டனர்.

Read more »

திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


திட்டக்குடி : 

             திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
 
             திட்டக்குடி நகர மற்றும் மங்களூர் ஒன்றிய இளைஞர் காங்., சார்பில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலா ளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நெடுஞ் செழியன், துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில சேவா தள அமைப்பாளர் அன்பரசு முன்னிலை வகித்தனர். தனவேல் வரவேற்றார். எம்.பி., கிருஷ் ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி விளக்கி பேசினர். கூட்டத்தில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் ராஜ்குமார், சங்கர்லால், வர்த்தக பிரிவு சண்முகம், வக்கீல் பிரிவு இளஞ்செழியன், மனிதநேய பிரிவு சடையப்பன், டி.சி.டி.யு., முத்துக்குமார், மங்களூர் வட்டார தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பழனியாண்டி நன்றி கூறினார்.

Read more »

சேத்தியாத்தோப்பில் மகளிர் விழிப்புணர்வு


சேத்தியத்தோப்பு : 

             சேத்தியாத்தோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
               சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மகளிர் ஆலோசனைக்கு குழு மற்றும் சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சுப்ரீம் அரிமா சங்கத்தலைவர் முடிகொண்டான், வடலூர் மனித உரிமை நுகர்வோர் தலைவர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சுப்ரீம் அரிமா சங்க செயலாளர் பொற்செல்வி ஆகியோர் மகளிர் விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினர். ஏட்டு மோகனசுந்தரி நன்றி கூறினார்.

Read more »

தட்பவெப்ப மாற்றம் விழிப்புணர்வு

விருத்தாசலம் : 

                    பழையப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தட்பவெப்ப மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
 
                    விருத்தாசலம் அடுத்த பழையப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தட்பவெப்ப மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொடக் கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மோகன் ராஜ் முன் னிலை வகித்தார். ஆசிரியர் வின்சென்ட் ஆரோன் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விளைவுகள் குறித்தும், இவைகளை தடுக்க உலகநாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களிடம் பேசினார். ஆசிரியர்கள் சாலமன், நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மருந்தாளுனர் பட்டயப் படிப்பு பதிவுகளை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அழைப்பு

கடலூர் : 

                         கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மருத்தாளுனர் பட்டயப்படிப்பு  பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
                        தமிழகரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகத் தால் மருந்தாளுனர் பணி இடங்களை நிரப்புவதற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணி இடத்திற்கு எஸ்.எஸ். எல்.சி., தேர்ச்சி பொது தகுதியும், மருந்தாளுனர் பட்டயப்படிப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும்  தாழ்த்தப் பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது 1-7-2009  அன்று 18 வயதும், அதிபட்ச வயது வரம்பு இல்லை. ஆனால் அனைத்து முற்பட்ட வகுப்பினருக்கு 18 வயது முதல் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். 

                            எனவே மேற்கண்ட தகுதியுடன் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16-2-2010 ம் தேதி வரை பதிவு செய்துள்ள மனு தாரர்கள், தங்கள் பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 25ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் வந்து தங்கள் பதிவுகளை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நூல் வெளியீடு

கடலூர் : 

               குறிஞ்சிப்பாடி வேலாயுதம்  மேல் நிலைப் பள்ளியில்  நூல் வெளியீட்டு விழா நடந்தது.
 
             நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பள்ளி குழு தலைவர் பிரேமா முன்னிலை வகித்தார். செயலாளர்  செல்வராஜ் வரவேற்றார். வணிக சிந்தனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. பள்ளியில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது. எழுத்தாளர் சிவஸ்ரீ, ராஜ், கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா

கடலூர் : 

                     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா  நடந்தது.
 
                       கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் தமிழாழி பொற்கைவேந்தன் வரவேற்றார். கடலூர் நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன், முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில் முனைவர் கருணாகரன், பேராசிரியர் நடராஜன், ரெஜினா ராஜ்குமார், கவுன்சிலர்கள் கோவலன், கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சண்முகம் உள்ளபட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் அர்த்தநாரி நன்றி கூறினார்.

Read more »

பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி

கடலூர் : 

             பண்ருட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கவேண்டும் என்கிற  கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: 

                  பண்ருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கும் கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். தேவையின் அடிப்படையில் இக்கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

Read more »

கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்த விளக்கக் கூட்டம்

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.
 
                விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., கலியபெருமாள் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் வரவேற்றார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கர் கொசு ஒழிக்கும் முறைகள் குறித்தும், எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்து பேசினார். சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முரளி, வீரமணி, நாட்டுதுரை, பாலகிருஷ்ணன் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ., பிறந்த நாள்

கடலூர் : 

                       மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சிப்காட்டில் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
 
                  தொழிற் சங்க இணை செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கி, இனிப்புகள் வழங்கினார். டான் பாக் தொழிற் ங்க தலைவர் மோகன், பொருளாளர் அரசு, துணைச் செயலாளர் உதயகுமார், ராஜேந்திரன், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தங்களிக்குப்பம் கிளை கழகம் சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கிளை செயலாளர் சுப்புராயிலு தலைமை தாங்கினார். மேலவை பிரதிநதி சுப்பையன் முன்னிலை வகித்தார். அன்பழகன், சீனிவாசன், முத்துகிருஷ் ணன், கண்ணப்பன்  பங்கேற்றனர்.

Read more »

நிராமணி ஊராட்சியில் டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு

சிறுபாக்கம் : 

                நல்லூர் ஒன்றியத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் நிராமணி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து டி.ஆர்.ஓ., நடராஜன் நிராமணி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் குடிசை வீடுகளில் வசிப்போர் எண் ணிக்கை, வீடுகளின் நிலை, பட்டா மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, ரேஷன் கார்டு, மின் இணைப்பு ஆகியவை குறித்து இரண்டு மணி நேரம் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது, விருத் தாசலம் தாசில்தார் ஜெயராமன், நல்லூர் ஒன்றிய ஆணையர்கள் ரவிசங்கர்நாத், சந்திரகாசன், பொறியாளர் சுப்பிரமணியன்  உடனிருந்தனர்.

Read more »

குளத்தில் கழிவு நீர் தேக்கம்: கொசு தொல்லையால் அவதி

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
 
                  நெல்லிக்குப்பம் நகராட்சி அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்ற வட்டாரத்தில் இருந்த வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து குளத்தை மூடியுள்ளது. குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொசு உற்பத்தியை தடுத்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், குளத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கடலூர் : 

              வடலூர் அருகே இளம் பெண்ணிடம்  கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
                  வடலூர் அடுத்த கோட்டக்கரையைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் சுகன்யா (18). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனது சித்தப்பா வீட்டில் தங்கி அருகில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு போகும் போது இந்திரா நகர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வெங்கடேசன் (24) கிண்டல் செய்து வந்துள்ளார். சுகன்யா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என மிரட்டி மானபங்கப்படுத்தியுள்ளார். வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.

Read more »

ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் : 

                  நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லிக்குப்பம் தமிழ்நாடு மின் ஊழியர் சங்கத்தினர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் விளக்கவுரை ஆற்றினார். முருகன், சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், செல்லதுரை, ரமேஷ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பெண் எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கடலூர் : 

                       சரியாக விசாரிக்காமல் பெண்களை தாக்கிய, சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
 
                        கடலூர் 6வது வார்டு மஞ்சக்குப்பம் வில்வநகரில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் இருந்து கழிவு நீர் கால்வாயை அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் பணியை மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் கழிவு நீர் மூலம் துர்நாற்றம் வீசுவதால் திரவுபதி அம்மன் கோவில் தெருவினர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்தனர். இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் துர்கா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சப் இன்ஸ்பெக்டர் துர்காவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் சரியாக விசாரிக்காமல் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior