உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

பூட்டியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள்


தே.கோபுராபுரம் கிராமத்தில் எப்போதும் மூடியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம்.
விருத்தாசலம்:
 
                 கிராமப்புற மக்களின் நலனுக்காக பல கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் பல கிராமங்களில் பூட்டியே கிடக்கின்றன. இவை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஓர் அம்சமாக கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயமாக அரசு நூலகங்களை அமைத்து வருகிறது.அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், அனைத்து கிராமங்களுக்கும் தலா ரூ.3,80,000 முதல் ரூ.3,90,000 வரை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகிறது. பின்னர் அரசு சார்பில் தளவாட பொருள்கள் மற்றும் புத்தகங்களுக்காக ரூ.1,00,000 ஒதுக்கப்படுகிறது.இந்திய விடுதலை வீரர்களின் சிறப்புகள், விடுதலைப் போராட்ட வரலாற்றை கூறும் நூல்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அம்பேத்கர், பெரியார் பற்றிய நூல்கள் மற்றும் அவர்களது படைப்புகள், திருக்குறள் போன்ற அற இலக்கிய நூல்கள் நூலகத்துக்கு வழங்கப்படுகின்றன. அரசு நிர்வாகத் தேர்வுகளுக்கு பயன்படும் நூல்களும் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் உள்ளன. செய்தி நாளேடுகளும் நூலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அரசு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.இந் நூலகத்தைப் பராமரிக்கவும், நூல்களை பாதுகாக்கவும் அப் பகுதிகளில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.750 ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில் இத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இன்னும் சில நூலகத்தில் புத்தகங்களே வந்து சேரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. நூலகம் பூட்டியே கிடப்பதால் மாணவர்கள் மற்றும் நூல் வாசிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலை விருத்தாசலம், கம்மாபுரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது.ஓர் உதாரணம்விருத்தாசலம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 கிராமங்களில் இதுவரை 31 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2010 ஆண்டில் மேலும் 10 நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது. நூலகம் அமைக்கப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் நூலகம் மூடியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பயன்பாடின்றி கிடக்கும் நூலகங்கள் சிலவற்றில் சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.  கிராம ஊராட்சித் தலைவர்கள் நூலகங்களுக்கு முக்கியத்துவம் தராததும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நூலகப் பராமரிப்பு குறித்து ஊராட்சித் தலைவர்களிடம் கண்டிப்போடு அறிவுறுத்தாததும் இதற்கு முக்கியக் காரணம்.கருத்துப் புதையல்கள் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கிராமத்து மாணவர்கள் எளிதாகப் படித்து மகிழ உதவிய அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் மீது அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Read more »

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்காக கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள்

            பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் எளிதாக பதிவு செய்யும் வகையில், கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஆ.சு. ஜீவரத்தினம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பது:"

                          பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மண்டலத்தில் 12 இடங்களிலும், மதுரை மண்டலத்தில் 20 இடங்களிலும், திருச்சி மண்டலத்தில் 26 இடங்களிலும், கோவை மண்டலத்தில் 21 இடங்களிலும் புதிய வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் நடைபெறும்.கூடுதல் வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் குறித்த விவரங்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விரைவில் வெளியிடப்படும். எனவே, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் வீட்டுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புப் பதிவு மையத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகுதியையும் அங்கேயே பதிவு செய்யலாம்.இந்த வேலைவாய்ப்பு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்குச் செல்லும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் ஒன்றையும் எடுத்துச் செல்லவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Read more »

இன்று அட்சய திரிதியை


General India news in detail
                         லட்சுமி பிரார்த்தனை செய்யுங்க!: வாழ்வின் அடிப்படை தேவை பணம். பணம் இல்லாதவனை அவனுடைய மனைவி கூட விரும்பமாட்டாள் என்பது வள்ளுவர் வாக்கு. பணத்திற்காகவே நாம் நாளெல்லாம் அலைந்து திரிகிறோம். ஆனால், ஒரு சிலருக்கே பணம் சேர்க்கும் பாக்கியம் கிடைக்கிறது. பணத்தையும் பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் ஒருசமயம் தன் பதவியை இழந்து அவதியுற்றான். மீண்டும் பதவி பெற பாற்கடலில் கலசங் களை ஸ்தாபித்து விநாயகர், சூரியன், அக்னி, சிவன், திருமால், பார்வதி ஆகியோரை வழிபட்டான். அப்போது அவன் சொன்ன ஸ்லோகங்கள், பிரம்மனுக்கு விஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டதாகும்.

                            இந்த ஸ்லோகங்களை அட்சயதிரிதியை நன்னாளான இன்று நாமும் வீட்டில் சொன்னால் நிறைந்த செல்வத்தைப் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை. இந்த ஸ்லோகத்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் சொல்லிவர செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

                       * ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவளே! ஆயிரம் நிலவின் பிரகாசத்தைப் போன்ற முகம் கொண்ட தேவியே! இனிமை தருபவளே! உள்ளத்திற்கு உற்சாகம் தருபவளே! தங்கத்தைப் போல ஜொலிப்பவளே! ஒளி மிக்க பொன்னாலான ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களை அணிந்து தெய்வீகத் தன்மையுடன் திகழும் தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாசப் புன்னகை சிந்துபவளே! என்றும் மாறாத இளமை கொண்டவளே! உன்னை வணங்குபவர்களுக்கு சகல செல்வவளங்களையும் அள்ளித்தருபவளே! மகாலட்சுமித்தாயே! உன்னை வணங்குகிறேன்.

* சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படுபவளே! உலக உயிர்களுக் கெல்லாம் மகிழ்ச்சி அளிப்பவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப் பட்டு அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே! தாமரை மலரில் நீங்காமல் இருப்பவளே! உனக்குத் தூய்மையான கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். மிகப்புனிதமானதும், பாவங்களைப் போக்குவதுமான இக்கங்கைநீரை ஏற்று அருள்வாயாக. கங்கை நீருடன் இந்த பூக்கள், சந்தனம் ஆகியவற்றால் செய்யும் சங்காபிஷேகத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்வாயாக.

* அன்பிற்குரிய ஹரிக்கு மனைவி ஆக திகழ்பவளே! பெருமை மிக்கவளே! அழகூட்டும் நறுமண தைலங்களையும், வாசனைத் திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை உனக்கு அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமகளே! உனக்களிக்கும் நறுமணம் மிக்க சாம்பிராணிப்புகையை ஏற்றுக்கொண்டு அருள்புரிவாயாக.

                     * அழகிய வடிவம் கொண்டதும், ஒளிமிக்கதும், சகல உயிர்களுக்கும் கண்போன்றதுமான தீபச்சுடரை உனக்கு அர்ப்பணித்து மகிழ்கிறேன். அறுசுவை நிரம்பியதும், உடலுக்கு நலம் தருவதுமான நைவேத்யத்தை அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொண்டு அருள்புரியவேண்டும்.

                               இந்த வழிபாட்டு வாக்கியங்களைச் சொல்லும்போது அந்தந்த பொருட்களை லட்சுமிதேவிக்கு சமர்ப்பணம் செய்வது நல்லது.

Read more »

இறந்தவர் உடலை புதைப்பதில் போட்டா போட்டி இரு மீனவ கிராமங்களில் பதட்டம்: போலீஸ் குவிப்பு

கடலூர் : 

                 இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் இரு மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவியது.

                       கடலூர் அடுத்த சித்திரைப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி(50). இவர் கடந்த 25 ஆண்டாக தனது குடும்பத்துடன் சிங்காரத்தோப்பில் வசித்து வந்தார். கடந்த 10 நாளாக சித்திரைப் பேட்டையில் உள்ள தனது பெற்றோருடன் தங்கியிருந்த மணி நேற்று திடீரென இறந்தார். மணியின் உடலை சிங்காரத் தோப்பில் அடக்கம் செய்ய அவரது தம்பி ராமலிங்கம் ஏற்பாடு செய்தார். அதற்கு அவரது மகன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையறிந்த சிங்காரத்தோப்பு மீனவர்கள் 50 பேர் படகில் சித்திரைப் பேட்டைக்கு சென்றதால் இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இறந்த மணியின் உடலை சித்திரைப்பேட்டையில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அதனையேற்று சிங்காரத்தோப்பு மீனவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் சென்றனர். இருப்பினும் இரு கிராமத்திலும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை

விருத்தாசலம் : 

               விருத்தாசலத்தில் மின் மோட்டார் இணைத்து குடிநீரை உறிஞ்சினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார். விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவதாக புகார் வந்தன.

             ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய நகராட்சி கமிஷனர் திருவண்ணாமலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில், ஆய்வாளர் பாலமுருகன், எலக்ட்ரிஷியன் தண்டபாணி, ஓயர்மேன் பழனி, பிட்டர் ரங்கபாஷியம் ஆகியோர் வீரபாண்டியன் தெரு, அண்ணா தெரு, லூகாஸ் தெரு உள் ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து 30 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கமிஷனர் திருவண்ணாமலை கூறுகையில், 

                                       விருத்தாசலம் நகராட்சியில் காலை 2 மணி நேரம், மாலை 2 மணிநேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. இருந்தும் மின் மோட்டார் வைத்து குடி நீர் உறிஞ்சுவதால் அனைவருக்கும் குடிநீர் செல்வதில்லை. அனைவருக்கும் குடிநீர் செல்லும் வகையில் இந்த மின் மோட்டார் பறிமுதல் நடவடிக்கையை நகராட்சி எடுத்து வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகராட்சி விதிகளை மீறுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு வழங்குமா? மெட்ரிக் பள்ளி கட்டணம் குறித்து கருத்து

சிதம்பரம் : 

                     தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அரசே ஏற்றால் அரசின் கட்டண குறைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் எம்.எல்.சி., மற்றும் சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளா ளர் லட்சுமிகாந்தன் கூறினார்.

முன்னாள் எம்.எல்.சி., மற்றும் சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிகாந்தன் கூறியதாவது: 

                    கல்வி என்பது தேசிய முதலீடு. இதில் செலவிடப்படும் தொகை நாட்டின் அறிவு வளத்தை பெருக்கி சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவைக்கேற்ப கல்வி நிலையங்களை துவங்க அரசிடம் போதுமான நிதி வசதி இல்லாததால் தான் சுயநிதி கல்வி நிறுவனங்கள் துவக்க அரசு அனுமதி தருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் மெட்ரிக் மற்றும் நர்சரி பள் ளிகள் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இங்கு தரமான கல்வி பெறுகின்றனர். கல்வியுடன் ஒழுக்கம், கட் டுப்பாடு போதிப் பதால் நாளுக்கு நாள் த்தகைய பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு நேரடி வேலை, கட்டுமான பணி உள்ளிட்டவைகள் மூலம் பலருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து வசதிகளுடன் பள்ளி துவங்க தோராய மதிப்பின்படி இடம், கட்டடம், இதர வசதிகளுக் காக பள்ளிக்கு ( சிறிய பள்ளிகள் தவிர்த்து) ஒன்னரை கோடி வரை செலவாகிறது. அத்துடன் ஆண்டுக் காண்டு மாணவர்களின் எண் ணிக்கை அடிப்படையில் பராமரிப்பு, உபகரணங்கள், லேப், கம்ப் யூட்டர், கட்டட வசதி பெருக்குவது, கட்டட பராமரிப்பு, சீரமைப்பு, மேசை, நாற்காலி என செலவிடப்படுகிறது. அரசின் ஆறாவது ஊதியக்குழுவின் படி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கினால் ஆண்டு செலவுத்தொகை மேலும் கூடுதலாகும். அங்கீகாரம் மற்றும் அதிகார கெடுபிடியைத் தவிர வேறு எதுவும் இப்பள்ளிகளுக்கு செய்யாத அரசு, இப்பொழுது கட்டண நிர்ணயம் செய்து தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பிரச்னைகளை தந்திருக்கிறது.

பள்ளி நிர்வாகத்தை முடக்கவும், மெட்ரிக் பள்ளிகளின் வளர்ச்சியை தடுக்கவும் பெற்றோர், மாணவர்களுக்கிடையே குழப்பத்தை உருவாக் கவும், ஆசிரியர்களின் தற்போதை ஊதியம் குறையவுமே இக்குழு வழி செய்துள்ளது. பெற்றோர்களுக்கு உதவி செய்ய அரசு நினைத்தால் அவர்களின் கட்டண சுமையை குறைக்க, முதலில் பள்ளிகளின் சுமையை குறைக்க முன்வரவேண்டும்.

                      மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உதவிபெறும் தனியார் பள்ளியை போல அரசே ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகளின் மதிப் பீட்டின் அடிப்படையில் பள்ளிக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி துவங்கவும், வளர்ச்சி பணிகளுக்கும் நிர்வாகத்தால் வாங்கப் பட்ட கடனை திருப்பி செலுத்த தேவையான அடிப்படையில் சிறப்பு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இத்திட்டங்களை அமல்படுத்தினால் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு நன்மை கிடைக்கும். தற்போது கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகையும் குறைந்து பெற்றோர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் நிதிச்சுமையும் வெகுவாக குறையும். காரணம் ஊதியம் வழங்கவே அதிக பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு லட்சுமிகாந்தன் கூறினார்.

Read more »

கல்வியில் பின்தங்கும் வட மாவட்டங்கள் : அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

கடலூர் : 

                        தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு மிக அருகில் உள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்கள் பிளஸ் 2 தேர்வில் சற்று முன்னேறி இருப்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், இம்மாவட்டங்கள் முதலாவது இடத்தை பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

                                  கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 72.41 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடமான 30வது இடத்தையும், கடலூர் மாவட்டம் 74.46 சதவீம் பெற்று 29வது இடத்தையும் பிடித்தன. இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 78.79 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26வது இடத்தையும், விழுப்புரம் மாவட்டம் 76.87 சதவீதம் தேர்ச்சி பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்விரு மாவட்டங்களும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று சற்று முன்னேறியுள்ளன. கடலூர் மாவட்டம் 26வது இடத்திலும், விழுப்புரம் மாவட்டம் 29,, திருவண்ணாமலை 31, அரியலூர் 32வது இடத்தை பிடித்திருப்பதால் இதை பெரிய மாற்றமாக கருதிவிட முடியாது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்கள், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை இன்னும் பின்னோக்கியே உள்ளன. அண்மையில் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வியில் முயற்சி மேற்கொண்டு பின்தங்கிய மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து கடலூரில் பெரியளவில் கூட்டம் நடத்தினார். வரும் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்கள் அடிப்படை வசதி, பொருளாதாரம், விழிப்புணர்வு, நாகரீகம், கல்விக்கூடம் ஆகியவற்றில் முன்னேறி இருந்தாலும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. 

                பிற தென்மாவட்டங்களான விருதுநகர், ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் எவ்வாறு பணியாற்றுகின்றனர், அவர்களால் மட்டும் எப்படி முதலிடத்தை பிடிக்க முடிகிறது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் முன்னேற்றம் அடையாததற்கு யார் காரணம் என அரசு கண்டறிய வேண்டும். கல்வியில் கடைசி இடத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் போன்ற வடமாவட்டங்கள் முதலிடம் பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Read more »

44 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் சரிவு

கடலூர் : 

                    கடலூர் மாவட்டத்தில் 44 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சியை விட 44 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

                   விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 19 பள்ளிகளும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 25 பள்ளிகளும் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் கடலூர் கல்வி மாவட்டத்தில் 8 பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 159 பேரும், நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷின் பள்ளயில் 133, வடலூர் வள் ளலார் குருகுலம் பள்ளியில் 172, புவனகிரி அரசு பெண்கள் பள்ளியில் 137, கடலூர் நகராட்சி பள்ளியில் 111, புவனகிரி அரசு ஆண்கள் பள்ளியில் 102, குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் 101, சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியில் 167 பேர் தோல்வியடைந்துள்ளனர். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் 152, ஆண்கள் பள்ளியில் 176, காட்டுமன்னார் கோவில் அரசு மகளிர் பள்ளியில் 114 பேர் தோல் வியடைந்துள்ளனர்.

Read more »

கடலூர் : 

                    கடலூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் 153 மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 12 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பெயரும், அந்த பள் ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு: 

                       பரங்கிப்பேட்டை சேவா மந்திர் மேல் நிலைப்பள்ளி (158), பண் ருட்டி முத்தரையர் மேல்நிலைப் பள்ளி (156), கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி (62), புவனகிரி மங்கலம் மெட்ரிக் பள்ளி (52), கடலூர் சி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (50), குறிஞ் சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (33), புவனகிரி சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (33), கடலூர் நியூ மில்லேனியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (32), பெண்ணாடம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (23), ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (7), வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (5), நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (3).

Read more »

சிறுகிராமம் அரசு பள்ளி 96.36 சதவீதம் தேர்ச்சி


பண்ருட்டி :

                     கடலூர் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் சிறுகிராமம் பள்ளி 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 55 மாணவர்களில் 53 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதத்தில் 96.36 பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

                        பள்ளி அளவில் மாணவி விஜயலட்சுமி 1021ம், சுபாஷினி 987ம், தமிழரசி 977 மதிப்பெண்ணும் பெற்று முறையே மூன்று இடங்களை வென்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சக்திவேல் பாராட்டினர். 

மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் கூறியதாவது :- 

                     ஆசிரியர்கள் ஒத்துழைப்பு, மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கூடுதல் வகுப்புகள் மற்றும் ஆர்வம் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு 94 சதவீதம் தேர்ச்சி பெற்றோம். இந்த ஆண்டு 96 சதவீதம் பெற்றிருப்பது சாதனையாக கருதுகிறோம். இவ்வாறு சேதுராமன் கூறினார். 

அரசு மேல்நிலைப்பள்ளி: 

                    பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 535 மாணவ, மாணவிகளில் 378 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 71 ஆகும். கார்த்திகேயன் 1095ம், சதீஷ்குமார் 1034ம், செந்தில்குமார் 996ம் மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி பெற்றவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் பாராட்டினார்.

Read more »

பிளஸ் 2 தேர்வில் பார்வை இழந்த மாணவி சாதனை

குறிஞ்சிப்பாடி : 

                 பிளஸ் 2 தேர்வில் பார்வை இழந்த மாணவி 1013 மதிப் பெண் பெற்று சாதித்துள்ளார். வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் படித்த பார்வை இழந்த மாணவி சிவசெந்தமிழ் செல்வி 1013 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். மாணவர் சூரியா 1086, அருள் மொழி 1052 மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஜவகர்லால் கான் பாராட்டினர்.

Read more »

விபத்துக்களை குறைக்க அதிகாரிகள் ஆலோசனை

கடலூர் : 

                          சாலை பாதுகாப்பு மாதாந்திர கூட்டம் கடலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடந் தது. கோட்ட பொறியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் தாமரைச் செல்வன், நாகராஜ், சீனுவாசன், நடனசபாபதி, இளநிலை வரைவு அலுவலர் ரவி, போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், செல்வம், ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரி, சித்ரா, செல்வராஜ், கண்மணி, விநாயகமுருகன் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர் மாவட்ட சாலைகளில் விபத்துகளை குறைப்பது குறித்து கோட்ட பொறியாளர், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

Read more »

மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை


கடலூர் : 

                            பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த எஸ்.கே.பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் விஜயா (17). இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் மனமுடைந்த விஜயா பூச்சி மருந்தை குடித்தார். உடன் அவரை உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

                                 இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதே போன்று கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்தவர் ரகுபதி மகள் பிரியா (18). இவர் பிளஸ் 2 தேர்வில் 950 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதிய பிரியா மனமுடைந்து வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior