உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனத்துக்கு மாநாட்டில் விருது

                தமிழில் சிறந்த மென்பொருளை தயாரித்ததற்காக, பனேசியா டிரீம் வீவர்ஸ் மென்பொருள் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருதை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

               உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இவ்விருதை முதல்வர் வழங்கினார். விருதுடன் ரூ. 1 லட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் க. அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, ஆ. ராசா, தயாநிதி மாறன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி, மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன், கோவை மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர். 

www.pdsoftware.in/

Read more »

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 619 பேரின் மதிப்பெண் மாற்றம்

            எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 619 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் கிடைத்து, திருத்தப்பட்ட ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

          திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறையின் இணையதளம்  மூலம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.மறு கூட்டல்-மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்களின் சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர் அதிகாரிகளிடம்  தமிழக தேர்வுத் துறை சனிக்கிழமை வழங்கியது. இதையடுத்து திருத்தப்பட்ட ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இன்று கலந்தாய்வு தொடக்கம்: 

                மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர், அனைத்துப் பிரிவினரில் 200-க்கு 200 முதல் 200-க்கு 199.5 வரை கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள 80 மாணவர்களுக்கு முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது. மருத்துவப் பரிசோதனை காரணமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்திலும், அனைத்துப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்திலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.மதிப்பெண் மாற்றம் காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் மாற்றம் பெற்றவர்களில் ஒரு மாணவர் மட்டும் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.  

                 சிறப்பிடம் பெற்ற 15 பேருக்கு...: இந்தக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 பெற்று மொத்தம் 13 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 200-க்கு 199.75 பெற்ற இரண்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய அனுமதிக் கடிதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வழங்குகிறார். 

திருத்தப்பட்ட பி.இ. ரேங்க் பட்டியல்: 

                  மறு கூட்டல்-மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்களுக்கு திருத்தப்பட்ட பி.இ. ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.ann​auniv.edu மூலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Read more »

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை


கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் பேசுகிறார் முதல்வர் மு.கருணாநிதி. உடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முக
           தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
 
                கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி 15 அறிவிப்புகள், புதிய திட்டங்களை வெளியிட்டார். அவையாவன:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 நிலங்களாகப்  பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை. இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காக்கவும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010-ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.
 
இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு:
 
             இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடிஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. 
 
                 மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி 2006-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக  மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 
 
அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு... 
 
              தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது  வழங்கப்படும்.தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி. 
 
செம்மொழி மாநாடுகள் தொடரும் 
 
                உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 
 
கோவை மாநகரில் ரூ.100 கோடியில் பாலம் 
 
                  கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்கள் உள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே குறுக்குச் சாலை, நூறடிச் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை கடக்கக் கூடிய சந்திப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரிய மேம்பாலம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என்று நிறைவு விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார்.

Read more »

பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு 180 மாணவர்கள் அழைப்பு

                தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான 2010-11-ம் ஆண்டு பி.இ. கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

           சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 180 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 இடங்களும், மற்ற பொறியியல் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

                 விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்காக கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருந்து 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். விளையாட்டுப் பிரிவின் கீழ், ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் மட்டுமே சேர முடியும் என்றார். விளையாட்டுப் பிரிவின் கீழ், 2010-11-ம் ஆண்டு மொத்தம் 4,139 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர், அதில் 3,817 பேர் தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

ஐசிசி தலைவராக சரத்பவார் ஜூலை 1-ல் பதவியேற்கிறார்


              சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மத்திய அமைச்சர் சரத்பவார் ஜூலை 1-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் ஜக்மோகன் டால்மியாவுக்குப் பின்னர் அந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது இந்தியராகிறார் சரத்பவார்.தற்போது ஐசிசி தலைவராக உள்ள டேவிட் மோர்கனின் இரண்டாண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது.. ஐசிசி வருடாந்திர கூட்டம் நாளை தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைவர் பொறுப்பை டேவிட் மோர்கனிடமிருந்து சரத்பவார் பெறுவார் என ஐசிசி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.ஐசிசி துணைத் தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டை நியமிப்பது குறித்தும் ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

Read more »

சுயநிதிப் பள்ளிகள் கல்விக் கட்டணம்: நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை கல்விச் செயலருக்குக் கிடைக்கவில்லை

கடலூர்:

                  தமிழகத்தில் சுயநிதிப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு அளித்த அறிக்கை, கல்வித் துறை செயலருக்குக் கிடைக்கவில்லை என்ற விவரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

                 தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, சுய நிதிப் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு சுயநிதிப் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை அளித்து உள்ளது. இந்த விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

                நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட, கல்வி நிறுவனங்கள் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக, ஏராளமாகப் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதை எதிர்த்துப் பல போராட்டங்களும் நடந்து உள்ளன. இந்த நிலையில் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு, அரசு கல்வித்துறைச் செயலருக்கு அனுப்பிய அறிக்கை விவரம் வேண்டி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் 7-6-2010ல் மனு அனுப்பி இருந்தார். 

              இந்த மனுவுக்குப் பதில் அளித்து கல்வித்துறை சார்புச் செயலர் 17-6-2010ல் நிஜாமுதீனுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் இருந்து அறிக்கை ஏதும் பெறப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் தங்கள் மனு, தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவின் தனி அலுவலருக்கு, தகவல் வழங்கும் பொருட்டு மாற்றப்பட்டு உள்ளது என்றும் கடிதத்தில் சார்புச் செயலர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலரிடம் இந்த அறிக்கை இல்லாத நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிஜாமுதீன் சனிக்கிழமை செய்திக் குறிப்பு ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வயிற்றுப்போக்கு: அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம்:

             சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்கினால் அதிகளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா நோயாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

               சிதம்பரம் நகரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அருகாமையில் உள்ள கோப்பாடி, முள்ளங்குடி, மெய்யாத்தூர், தெம்மூர், நாஞ்சலூர், நந்திமங்கலம், சிவாயம், தவிர்த்தாம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு பல நோயாளிகள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி பெற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, 

                   பருவநிலை மாற்றம், சீதோஷ்ண நிலை மாற்றம், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உள்ளுரில் தயாரிக்கப்படும் தரமற்ற குளிர்பானங்கள் ஆகியவற்றால் இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். எனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கிராமங்களில் குளோரின் கலந்த குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம் : விளை நிலமாகும் அபாயம்

பண்ருட்டி: 

                   ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசு மற்றும் கலெக்டர் என்னதான் கூப்பாடு போட்டாலும் விவசாயிகள் ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் அவலம் தொடர்கிறது. பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் 62.17 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ளது. 

                 இதன் மூலம் 1,000 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனால் இந்த ஏரியில் ஐந்து ஏக்கர் பரப்பளவை தவிர மற்ற இடங்கள் முழுவதும் ஆக் கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நெல், சவுக்கை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.கடந்த மழையின் போது ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடையும் என்பதால் ஏரிக் கரையை உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றினர். 

                 ஆனால் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு அதிகாரிகள் கரைகள் சேதப்படுத்தியது குறித்தே மழைநீர் சேகரிப்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியாமல் போனது. இதே நிலை பண்ருட்டி தாலுகா முழுவதும் உள்ள நத்தம், சிறுகிராமம், சிறுவத்தூர், எலந்தம்பட்டு, பூங்குணம், எல்.என்.புரம், பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை, கண்டரக்கோட்டை ஏரி, புலவனூர் உள்ளிட்ட 28 ஏரிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விளை நிலங்கள் பயிரிட்டு வருகின்றனர்.
 
                     ஒவ்வொரு விவசாய குறைகேட்பு கூட்டத்தின் போதும் விவசாயிகள் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என ஒருபுறம் கூறினாலும், அதே விவசாயிகள் இருக்கும் ஏரிகளை ஒன்று கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடுவதும் புரியாத புதிராக உள்ளது.

Read more »

வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களில் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: டி.ஆர்.ஓ., எச்சரிக்கை

சிதம்பரம்: 

               காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என காஸ் ஏஜன்சிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் தற்போது வட்ட அளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிதம்பரம் தாசில்தார் அலுவலககத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது. வட்ட வழங்கல் தாசில்தார் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், காஸ் நிறுவனத்தினர், நுகர்வோர் குழும செயலாளர் அப்பாவு உள்ளிட்ட பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குறிப்பிட்ட காலத் திற்குள் காஸ் சிலிண்டர் கிடைப்பதில்லை, வீட்டு உபயோக சிலிண் டர் ஓட்டல், டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் பணம் கேட்கின்றனர் என பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், 

                   "சிதம்பரம் வட்ட அளவில் காஸ் நுகர்வோர்கள் பிரச்னை தொடர்பாக மாதத்தில் கடைசி சனிக்கிழமை குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். காஸ் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் களிடம் கனிவுடன் பேசினாலும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறினாலும் நுகர் வோர் முழு திருப்தி அடைந்து விடுவார்கள். காஸ் எப்போது கிடைக்கும் என் றால், தெளிவாக பதில் கூறுங்கள், கூடுமான வரை காலதாமதம் செய்யக் கூடாது. காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது. நுகர் வோருக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்வது குறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவித்தால் வசதியாக இருக்கும். ஓட்டல்கள், விடுதிகளில் வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி யாரேனும் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் அதே செயலில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என பேசினார்.

Read more »

சின்னாபின்னமான சித்தூர் சாலைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பண்ருட்டி: 

               பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் மெகா பள்ளங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

                   கடலூர் - சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல் லூர் வரையிலான 13 கி.மீ., சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஐல்லிகள் பெயர்ந்து கந்தல் சாலையாக மாறியுள்ளது.பண்ருட்டி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு வந்த ஜல்லிகள், தார் பாரல்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் சாலை அகலப்படுத்தும் பணிகள் செய்யும் காண்ட் ராக்டர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வருமானத்தை தேடிக் கொண்டனர்.

                         நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட எல்லையில் பண்ருட்டி - முத்துகிருஷ்ணாபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருவதால் பண்ருட்டி- வீரப்பெருமாநல்லூர் வரையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை "பேட்ஜ் ஒர்க்' கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் வரையிலான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மின் இணைப்பு

கடலூர்: 

              ஆதிதிராவிட ஏழை விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;

               மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின் இணைப்பு தாட்கோ மூலம் வழங்கப்பட உள் ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப் பதுடன் அவரது பெயரில் பட்டா வைத்திருக்க வேண்டும். மின் இணைப்பு கேட்டு கிணறு அல்லது ஆழ்குழாய் அமைத்து மின் வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகள் உடைய ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப் பத்துடன் போட்டோ, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, ரேஷன் கார்டு, நில உரிமைப் பத் திரம், சிட்டா, அடங்கல், வரை படம் மற்றும் மின்வாரியத்தில் பதிவு செய்துள்ளதற்கான ரசீது ஆகியவற்றின் நகலை இணைத்து வரும் 30ம் தேதிக்குள் கடலூரில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப் பிற்கான வைப்புத் தொகையை தாட்கோ மூலம் செலுத்தப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு வாழ்த்து

திட்டக்குடி: 

              கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக் கப்பட்டது

.இது குறித்து கடலூர் மாவட்ட உடல் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

                  கோவையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டினை நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் சிம்மசந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக இரவு, பகலாக உழைத்து வரும் கலெக்டர் சீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.மேலும், இன்று (28ம் தேதி) காலை 10 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

Read more »

புதிய பென்ஷன் மசோதா திரும்ப பெற வலியுறுத்தல்

கடலூர்: 

               மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி அமைப்புகளின் பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொன்னுசாமி, சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். 

                      மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் துரைராஜ், காசிநாதன் ஆகியோர் மின் வாரியத்தின் செயல்பாடு, அரசின் நிலையை விளக்கி பேசினர். கூட்டத்தில், புதிய பென்ஷன் மசோதாவை வாபஸ் பெற வேண்டும். மின் வாரியத்தில் தற்போது பெற்று வரும் பென்ஷனை தனியாரிடம் கொடுக்காமல், அரசு துறையில் உள்ள எரிசக்தி துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பென்ஷனர்கள் இறந்தால் 25 ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அடையள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Read more »

எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவுகடலூரில் இரங்கல் கூட்டம்

கடலூர்: 

              தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங் அலுவலகம் நேருபவனில் நடந்தது.

               கடலூர் முதுநகர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில காங்., செயலாளர் உக்கடம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், சுப்ரமணியன், அழகப்பன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், ஜெகன், மங்கலட்சுமி, உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு காங்., சட்டபேரவை தலைவர் சுதர்சனம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மவுனம் அனுஷ்டிக்கப் பட்டது.

விருத்தாசலம்:

                   இளைஞர் காங்., சார்பில் காமராஜர் மாளிகையில் இரங்கல் கூட்டம் நடந்தது. தொகுதி தலைவர் இளையராஜா தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து காங்., கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. நிர்வாகிகள் சேதுபதி, ஜெயராமன், ராஜிவ்காந்தி, நீதிராஜன், முத்துகுமார், தாமரைச்செல்வி மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் சங்க காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read more »

செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு

கிள்ளை: 

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்\னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும். 

                     பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது.  இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

Read more »

மானிய விலையில் வேளாண் கருவிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திட்டக்குடி,: 

               பின்தங்கிய மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட இந்திய தேசிய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, தமிழக முதல் வர் கருணாநிதி, வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

                நல்லூர் மற்றும் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு ஏராளமான சிறு, குறு விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி ஜீவனம் செய்து வருகின்றனர். அண்மைக் காலமாக காலம் தவறிய பருவமழை, போதிய மழை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயப் பணி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்யவோ, விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமலும் கடுமையாக பாதிப்படைகின்றனர். பின்தங்கிய பகுதியிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்கி விவசாயம் தழைக்க மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுசத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்: 

               பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 7வது மாநாடு கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாவாடை வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ஞானக்கண் செல்லப்பா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய துணைத் தலைவர்கள் சம்சுதீன், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகனசுந்தரம் 2 ஆண்டு வேலை அறிக்கையினையும், பொருளாளர் கதிர்வேல் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்து பேசினார்.

               மாநாட்டில் ராமசாமி தலைவராகவும், மோகனசுந்தரம் செயலாளராகவும், பாவாடை பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிறப்பித்த அரசாணையில் ஆண், பெண், பாகுபாட்டுடன் உள்ள முரண்பாடுகளை நீக்கி கல்வி தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்துவது. 10, 20 ஆண்டுகள் பணிமுடித்த அமைப்பாளர்களுக்கு பணி மூப்பு ஊதியம் வழங்குவது போல சமையலர் உதவியளர்களுக்கும், பணி மூப்பு ஊதியம் வழங்கிட அரசை கேட்டுக் கொள்வது. பணிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க அரசு பிறப்பித்த அரசாணை ஏட்டளவிலேயே உள்ளது. இதை அமல்படுத்தி வாரிசு பணிக் காக காத்திருப்போருக்கு மேலும் தாமதப்படுத்தாமல் பணி வழங்கிட அரசு மற்றும் கலெக்டரை கேட்டுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

கடமைக்கென நடக்கும் சாலை பணிவண்டிப்பாளையத்தில் மக்கள் அவதி

கடலூர்: 

                கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் "பேட்ஜ் ஒர்க்' செய்வதற்காக கடமைக்கென ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் லைன் புதைக்கும் பணிகள் முடிந்து பள்ளத்தில் "கான்கிரீட்' போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இச்சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங் கள் செல்ல தகுதியற்றதாக உள்ளது.

                 இச்சாலை வழியாக வண்டிப்பாளையம், வடுகப்பாளையம், புருகீஸ்பேட்டை, கேப்பர் மலை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் பஸ், ஆட்டோக்கள், இருசக்கர வாகனாங்களில் கடலூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சாலையில் உள்ள "மெகா சைஸ்' பள்ளங்களை சரி செய் வதற்காக "பேட்ஜ் ஒர்க்' பணி தற்போது நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் கடமைக்கென வெறும் கருங்கல் ஜல்லிகள் மட்டுமே கொட்டப்பட்டு பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலையில் வாகனங்கள் செல்லும் போது பள்ளத்தில் கொட்டப்பட்ட ஜல்லிகள் சிதறி சாலை முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதுடன் பழுதடைகின்றன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி வண்டிப்பாளையம் சாலையை விரைவில் சரி செய்ய வேண்டும்.

Read more »

சிறுபாக்கம், மங்களூர் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்: 

                மங்களூர், சிறுபாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் 7,000 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மருத்துவமனை, கூட்டுறவு நிலவள வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கனரா வங்கி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலகம் உள் ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினசரி 66 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

               இந்நிலையில் மங்களூர் பஸ் நிறுத்தம் அருகிலேயே கடைவீதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. வெளியூர் பயணிகள், உள்ளூர் கிராமவாசிகள் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் போது குடிப்பிரியர்களின் ஆபாச பேச்சு, கேலி, கிண்டலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதேப்போல் சிறுபாக்கம் ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் வடபுறம் டாஸ்மாக் கடை அருகிலும் இந்தநிலை நீடிக்கிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரு இடங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: 

                 பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பள்ளி வாசல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தீன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முகமது முனீர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி,: 

             திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாளை (29ம் தேதி) அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 
இதுகுறித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் விடுத்துள்ள அறிக்கை: 

                   திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியில் மைனாரிட்டி தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை கண்டித் தும், விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நாளை (29ம் தேதி) காலை 10 மணிக்கு திட்டக்குடி பஸ் நிலையத் தில் கண்டன ஆர்ப்பாடம் நடக்கிறது. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செம்மலை கண்டன உரையாற்றுகிறார்.மங்களூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி வரவேற்கிறார். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், எம்.எல்.ஏ., செல்விராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், உள் ளாட்சி பிரதிநிதிகள், வெலிங்டன் பாசன விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை

கடலூர் : 

           மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கை:

                      நாடு முழுவதும் ஏற்கனவே விலைவாசி விண் ணுயர உயர்ந்ததால் நாட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மீண் டும் பெட்ரோல், டீசல் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணெய் கம்பெனி முதலாளிகளுக்கு சாதகமாக விலையை உயர்த்துவது என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டு மக்களை ஏமாற்றவும் திசை திருப்புவதாகவும் நாடகமாடி விட்டு தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. சமையல் காஸ் விலை 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

Read more »

சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரும் பணி

கிள்ளை : 

                 சிதம்பரம் அருகே 19 லட்சம் ரூபாய் செலவில் கான்சாகிப் வாய்க்கால் ஆழப்படுத்தி தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நக்கரவந்தன்குடியில் இருந்து பொன்னந்திட்டு வரை 20 வருவாய் ஊராட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் மூலம் இந்த பகுதியில் 9,994 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டதில் இருந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

                  அதனால் மேட்டுப் பகுதியில் உள்ளவர்கள் "தை' பட்டத்திலும், பள்ளக்கையில் இருப்பவர்கள் "நவரை' சாகுபடியையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால் கான்சாகிப் வாய்க்கால் இருபக்க கரையும் தூர்ந்து புதர்மண்டி, ஆகாயத் தாமரை செடி மண்டி கிடந்ததால் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நீர் வழி நடை பயணம் மேற்கொண்ட அப் போதை கலெக்டர் ராஜேந் திர ரத்னுவிடம் சிதம்பரம் கிழக்குப் பகுதி விவசாயிகள் கான்சாகிப் வாய்க்கால் பகுதியை வெட்டி கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளை தூர்வாரும் பணி மூலம் 56 பணிகளுக்கு 2 கோடியே 50 லட் சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

                   இதில் ஒன்றான சிதம்பரம் அடுத்த திருவக்குளம் கலுங்கு மேட் டில் இருந்து நக்கரவந் தன்குடி, பின்னத்தூர், நஞ்சைமகத்துவாழ்க்கை வழியாக காரைக்காட்டு சாவடி வெள்ளாற்று (லாக்கு) வரை 11 கி.மீ., தூரம் 19 லட்சம் ரூபாய் செலவில் கான் சாகிப் வாய்க்காலை ஆழப்படுத்தி இரு பக்கம் உள்ள கரைகளை உயர்த் தும் பணி துவங்கியது. இதனால் விவசாயத்திற்கு தட்டுப்பாடில்லாமல் தண் ணீர் கிடைப்பதுடன், மழைக் காலங்களில் சிதம்பரம் பகுதியில் தேங் கும் தண்ணீர் எளிதில் வடிய வாய்ப்பாக இருக்கும்.

Read more »

திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ., முடிவு


திட்டக்குடி : 

               திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட் டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளைக் கூட்டம் நடந்தது. முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் பிச்சமுத்து, மருதமுத்து, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வட்ட துணை செயலாளர்கள் முருகையன், சின்னதுரை, விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினர். கூட்டத்தில் ஆதமங்கலம் - சாத்தமங்கலம் பாலக்கரை வரையிலான பழுதடைந்த சாலையை விரைவில் டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும்.

                   ஆதமங்கலம்- தொளார், ஆவினங்குடி வரையிலான 20 ஆண்டுகளுக்கு மேலான பழுதடைந்த சாலை, திட்டக்குடி - நாவலூர் வழியாக செல்லும் தடம் எண்- 4 அரசு பஸ்சினை கூடுதலாக இருமுறை இயக்க வேண்டும். ஆதமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள வீட்டு மனைப் பட்டாவுக்கான தெருவை அளந்து மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5ல் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

கடலூர் : 

                  பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

                   சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி மகள் பிரியா (12), மற்றும் கீர்த்திகாவும் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் ஐந்து அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்து அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதில் பிரியா இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கீர்த்திகா கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

இறகுப் பந்து போட்டி: 80 அணிகள் பங்கேற்பு

கடலூர் : 

              கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப் பந்து போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. கடலூர் இறகுப் பந்து நண்பர்கள் கழகம் சார்பில் ஆண்கள் இரட்டையர் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் இரண்டு நாள் போட்டி துவக்க விழா நேற்று காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.

                   நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். பாலசேகரன், முத்துக்குமரன், தாயுமானவன் வாழ்த்துரை வழங்கினர். இரட்டையர் பிரிவில் 50 அணிகளும், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 30 அணிகளும் பங் கேற்றன.போட்டிகளை முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சக்கரை துவக்கி வைத்தார். நிகழ்ச் சியில் ஆசைத்தம்பி, வரதன், சுதாகர், ஓம்பிரகாஷ், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டிகள் இன்றும் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று இரவு 7 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

Read more »

கடலூர் துறைமுகத்தில் 20 டன் சுந்தம் மீன் கொள்முதல்

கடலூர் : 

             நாகப்பட்டினத்திலிருந்து கடலூர் துறைமுகத்திற்கு வந்த விசைப்படகிலிருந்து 20 டன் சுந்தம் மீன் கொள்முதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய சென்னை மீன்பிடி விசைப் படகு நேற்று கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கு மீன் வியாபாரி ஒருவர் மொத்தமாக விசைப்படகில் உள்ள மீன்களை கொள்முதல் செய்வதற்கு முயன்றார். அப்போது துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சு வார்த்தைக்குப் பின் 20 டன் சுந்தம் மீன்களை ஒருவரே கொள்முதல் செய்து, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தார். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மற்றொரு படகில் சென்ற கடலூர் அடுத்த சோனங்குப்பம் மீனவர்கள் வலையில் 100 கிலோ எடையுள்ள புள்ளி திருக்கை மீன் பிடிபட்டது. திருக்கை மீனை வியாபாரிகள் கிலோ 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்து பதப்படுத்தி, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்தனர்.

Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: வேலை உறுதி திட்டம் ஒத்தி வைப்பு

கடலூர் : 

              கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. இன்று நிறைவடைய உள்ள இவ்விழாவிற்கு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மாநாட்டுக்கு செல்ல ஏதுவாக கிராமங்களில் நடைபெறும் தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் 5 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் 28ம் தேதி முதல் வழக்கம் போல் வேலை உறுதி திட்டப் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Read more »

கடலூரில் வரும் 3ம் தேதி மூலிகை பயிற்சி துவக்கம்

கடலூர் : 

                மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.மத்திய அரசின் கதர் கிராம தொழில் ஆணையம் நடத்தும் மூலிகை தொழிற் பயிற்சி வரும் ஜூலை 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இப்பயிற்சியில் மூலிகைகள் கொண்டு பல்வேறு மருந்துகள், அழகு சாதன பொருட்கள், ஹெர்பல், ஹேர் ஆயில், ஹெர்பல் ஷாம்பு, வலி தைலம், சூரணங்கள், லேகியங்கள், ஹேர்பல் டை ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது, அதனை சந்தை படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.

                      10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சிக்கு பின் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க 15 முதல் 35 சதவீத மானியத்துடன் கடனுதவி பெறலாம். பயிற்சி குறித்த விவரங்களுக்கு மூலிகை தொழில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவியை 93676-22256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Read more »

கடலூர் கலெக்டருக்கு பெற்றோர் நன்றி

கடலூர் : 

              நல்லூர் நகர் ஏழை சிறுவனுக்கு கண் நீர்பை அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உதவிய கலெக்டருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர். விருத்தாசலம் தாலுகா நல்லூர் ஒன்றியம் நகர் பஞ்சாயத்தில் இலவச தொலைக் காட்சி வழங்கும் விழாவில் கூலித் தொழிலாளி மகன் 5ம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணன் கலெக்டர் சீத்தாராமனிடம் கண்ணில் நீர் வடிவதாக மனு கொடுத்தான். உடனே கலெக்டர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதையொட்டி சிறுவனுக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் முன்னிலையில் கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து அடைப்பை நீக்கினார்.அதனால் மகிழ்ச்சியடைந்த மாணவனின் பெற் றோர் கடந்த 21ம் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப் பாளர் ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டியில் டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., மறியல்: 38 பேர் கைது

பண்ருட்டி : 

                 பண்ருட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ.,வினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று காலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார். மறியலில் நகர செயலாளர் மோகன், முன்னாள் நகர செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 38 பேர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Read more »

பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1.5 லட்சம் சேதம்

திட்டக்குடி : 

                பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள் ஜோதி. இவரது கூரை வீட்டில் நேற்று முன் தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த சுப்ரமணியன் வீடும் தீப்பிடித்தது.தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உணவு தானியங்கள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Read more »

“Education Department yet to get panel report on fee structure”

CUDDALORE: 

            The School Education Department has claimed that it is yet to receive the report of Justice Govindarajan Committee on school fee structure. The information officer of the department has said this in a letter to a consumer forum here.

            General secretary of the Consumer Confederation-Tamil Nadu M. Nizamudeen told reporters that invoking the provisions of the Right to Information Act on June 7, he had requested the Education Department to make available a copy of Justice Govindarajan Committee report for which he also paid the prescribed fees. But, designated Information Officer S. Vedarathinam, in his reply dated June 17, had observed that the Education Department was yet to receive the committee report. However, the official had promised to forward the letter to the Special Officer to the committee.

              Mr. Nizamudeen said that parents and students had already staged demonstrations in various parts of the State protesting the collection of higher fees than what was prescribed in the committee report. This prompted the government to come out with a response that it would derecognise the schools that failed to adhere to the recommendations.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior