உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

நெய்வேலியில் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் : மின் வினியோகம் இன்று பாதிக்கும்?





நெய்வேலி : 

                என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்வதால், இன்று முதல் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 232 தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை, நிலுவைத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இழுபறி நீடித்து வருகிறது.

                 ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டுமென, அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச.,வினர் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. தொழிற் சங்கத்தினர், கடந்த மே 31ல் வேலை நிறுத்தத்திற் கான அறிவிப்பு நோட்டீசை நிர்வாகத்திடம் கொடுத்தனர். சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் ஜூன் 30ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சு வார்த்தைக்கு நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டதால், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, தொழிலாளர் நல கமிஷனர் ஜெகன்நாத ராவ் அன்றைய தினமே நெய்வேலிக்கு வந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி., நிர்வாக குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் முடிவு எட்டப்படாததால், கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் காலவரையற்ற போராட்டம் துவங்குவதாக தொ.மு.ச., பொதுச் செயலர் கோபாலன், தொழிலாளர்கள் மத்தியில் அறிவித்தார்.

                   நேற்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில், சென்னையில் மண்டல தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனவே, நான்காவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி.,யின் முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட், முதல் அனல் மின் நிலையவிரிவாக்கத்தில் 420 மெகாவாட், இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 1,470 மெகாவாட் என மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

                  முதல் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 600 மெகாவாட் மின்சாரமும் முழுமையாக தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. என்.எல்.சி.,யின் மொத்த மின் உற்பத்தியான 2,490 மெகாவாட் மின்சாரத்தில், முதன் அனல் மின்நிலையத்தின் 600 மெகாவாட் மின்சாரம் போக மீதமுள்ள 1,890 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தென்னிந்திய மின் தொகுப்பு எனப்படும், "கிரிட்' வாயிலாக தென்னிந்திய மாநிலங் களாக தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சதவீத அடிப்படையில் வழங்கப் படுகிறது.

                   தமிழகத்தை பொறுத்தவரை என்.எல்.சி.,யின் முதல் அனல் மின் நிலைய உற்பத்தி 600 மெகாவாட் மற்றும் "கிரிட்' வாயிலாக பெறப்படும் 500 மெகாவாட் என மொத்தம் 1,100 மெகாவாட் மின்சாரம், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது என்.எல்.சி.,யில் இன்று நான்காம் நாளாக தொடரும் வேலைநிறுத்தம் காரணமாக, முதல் அனல் மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி பிரிவு முழுமையாக மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை. முதல் அனல் மின் நிலையத்தில் மீதமுள்ள மின் உற்பத்தி பிரிவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால், என்.எல்.சி., வாயிலாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் மின் உற்பத்தியில் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, தமிழக முதல்வர், என்.எல்.சி., வேலை நிறுத்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தாவிட்டால், தமிழகம் இருளில் மூழ்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.


Read more »

கடலூர் மீது கரிசனம் காட்டும் ரயில்வே துறை ?


திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் முடிவடையாத பயணிகள் நடைப்பாலம்.
 
கடலூர்:

           தமிழகத்தில் தொன்மை வாய்ந்த நகரங்களில் ஒன்றான கடலூர், தென்னக ரயில்வேயால் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வருகிறது.  திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ரயில்வே அதிகாரிகளின் வாக்குறுதி தொடர்ந்து காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. 

                       200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதையில் அமைந்து இருக்கும் நகரம் கடலூர். ஆங்கிலேயர்கள் வருகையின் போது தமிழகத்தின் தலைநகரமாகவே சிறிதுகாலம் கடலூர் விளங்கி இருக்கிறது. சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதையில், 122 கி.மீ. நீளம் விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டம் நிறைவேற 2007 முதல் 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 23-4-2010 அன்று விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், கடலூர் மாவட்ட மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு வசதியாகச் செல்ல வேண்டும் என்ற பயணக் கனவு நிறைவேறும் என்று காத்து இருந்தனர். 

              ஆனால் இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியதும்தான், இலவு காத்தக் கிளிகளாக்கப் பட்டனர் கடலூர் மக்கள் என்பது தெரிய வந்தது. கடலூர் மாவட்டத்தில் எதையும் போராடிப் பெறும் சரியான அரசில் தலைமை இல்லை என்பதைப் புரிந்து கொண்ட தென்னக ரயில்வே, தொன்மை நகராம் கடலூரை முற்றிலும் புறக்கணிப்பதை உணர முடிந்தது. விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் இரு பயணிகள் ரயிலைத் தவிர, மற்ற ரயில்களால் கடலூர் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது இயக்கப்பட்ட ஒரே ஒரு பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலும், அகலப் பாதையாக்கப்பட்டதும், கடலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருப்பாப்புலியூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காது என்ற அறிவிப்பு கடலூர் மக்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

               திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்திய போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், ஜூலை மாதம் வெளியாகும் கால அட்டவணையில், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர். புதிய ரயில்வே கால அட்டவணையும் வெளியாகி விட்டது. ஆனால் கடலூர் மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. ரயில்வே அதிகாரிகளின் வாக்குறுதி காற்றில் கரைந்து விட்டது. 

              வாரம் ஒருமுறை இயக்கப்படும் வாராணசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் இருமுறை இயக்கப்படும் சென்னை- மதுரை எக்ஸ்பிரஸ், கடலூருக்கு நள்ளிரவில் வரும் சென்னை- நாகூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் கடலூர் மக்களுக்கு பெரிதாகப் பயன் ஏதும் இல்லை.  எனினும் எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருப்பதி- மதுரை எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விழுப்புரத்தை விட்டால் மாயவரத்தில்தான் நிற்கும் என்று, தென்னக ரயில்வே அறிவித்து இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் அதிருப்திக்குள்ளாக்கியது. 

               சென்னை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கு முக்கியக் காரணமே, பக்தர்கள் அந்தப் பாதையில் அமைந்து இருக்கும் புகழ்மிக்க புராதனக் கோயில்களை தரிசிப்பதற்காகத்தான். அந்த வகையில் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலையும், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலையும், தென்னக ரயில்வே புறக்கணிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை என்கிறார்கள் சைவ, வைணவ பக்தர்கள். ÷எனவே கடலூர் மாவட்ட மக்கள் பிற நகரங்களுக்கு, குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல இன்னமும், மக்களை மாக்களாகவும், புளி மூட்டைகளாகவும் அடைத்துச் செல்லும் பஸ்களைத்தான் நம்ப வேண்டும் என்பது எத்தனை வேதனையான விஷயம்?

              மேலும் திருப்பாப்புலியூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில், ரயில் பாதைகளை பயணிகள் கடந்து செல்லும் நடைப் பாலங்கள் அமைக்கும் பணி, ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டும் இன்னமும் முடிக்கப்படவில்லை. திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களை நிறுத்தி வைக்கும் லூப் லைன் வசதிகூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற ரயில் நிலையங்களிலும் பல பணிகள் முடிவடையாமல் இருப்பதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு? 

                  மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

Read more »

மரத்தடி மகா ராஜாக்கள்... விருத்தாசலம் பள்ளி மாணவர்களின் அவலநிலை


வெட்டவெளியில் தொடக்கப் பள்ளி மாணவர்கள். மரத்தடியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தை அடுத்த கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான கட்டட வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. 

                இப் பள்ளி 1915-ம் ஆண்டு, 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பளவில் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இது நடுநிலைப் பள்ளியாகி, பின்னர் 1990-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் உயர்நிலைப் பள்ளிக்கென்று தனி இடம் இல்லாததால், தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களிலேயே  6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

             தற்போது 1-முதல் 5-ம் வகுப்பு வரை 177 மாணவர்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 465 ( 2010-2011 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் கடந்த ஆண்டு 6 முதல் 10 வரை படித்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 465) மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 650 மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. பள்ளியைச் சுற்றி கடந்த ஆண்டு மதில் சுவர் அமைக்கப்பட்டது. மதில்சுவர் அமைக்கப்பட்ட பள்ளியின் மேற்கு பகுதியில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ஒன்று உள்ளது. இது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

                        ஆனால் 3 வகுப்பறைகள் மட்டுமே கொண்ட இக்  கட்டடம் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாததாலும், மழைக் காலங்களில் அக் கட்டடத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாரியில் வெள்ளநீர் ஓடும் என்பதாலும், அனைத்து மாணவர்களையும் ஒரே வளாகத்திலேயே அமரவைத்துள்ளனர். இவ்வாறு 1 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை ஒரே வளாகத்தில் உள்ள கட்டடங்களில் உட்கார வைக்கின்றனர்.போதுமான கட்டட வசதி இல்லை என்பதால், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய வளாகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு சில வகுப்பையும், மரத்தடியிலும் நடத்துகின்றனர்.

                இதுபோல் சில உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது மரத்தடியில் பாடம் நடத்தக்கூடிய சூழல் இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்கினால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் சிமென்ட் ஓடாலான திறந்தவெளி கட்டடங்கள் உள்ளன. இது மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று கூறினாலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு அரசு, செயல்படுத்தி வரும் செயல்வழிக் கற்றல் முறைக்கு உரியதாக இந்த கட்டடங்கள் இல்லை. மேலும் உயர்நிலை மாணவர்களுக்கும் இந்த கட்டடத்தில் பாடம் நடத்துவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் தமிழக அரசு, கோ.ஆதனூர் உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனி வளாகத்தில் போதுமான வகுப்பறைகள் கொண்ட கட்டடங்களை ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவே இப்பள்ளியில் பயிலும் அனைத்து ஆசிரிய, மாணவ, மாணவிகளின் கோரிக்கையாகும்.

Read more »

சிதம்பரத்தில் குறிஞ்சிமலர்கள்


சிதம்பரம்:
 
            சிதம்பரம் மாரியப்பாநகரில் பேராசிரியர் ஒருவர் வீட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்கிறது. சிதம்பரம் மாரியப்பாநகர் முதல் தெற்கு குறுக்குத் தெருவில் வசிப்பவர் ஏ.காமாட்சிநாதன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பேராசிரியர் ஏ.காமாட்சிநாதன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு சென்றபோது அங்கு குறிஞ்சி மலர் செடிகளை வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் நட்டு பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்குவது கண்டு அவர் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளார். இவரது வீட்டில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தினமும் வந்து ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

Read more »

என்.எல்.சி. ஸ்டிரைக் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதரவு கேட்டு கடிதம்

நெய்வேலி:

               என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்துக்கு தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் கடிதம் அளித்துள்ளன.

         சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஜூலை 5-ல் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்க இயலும் என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். அதுவரை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் செல்வார்கள் எனவும் வெங்கடேசன் தெரிவித்தார். நிர்பந்தம் இல்லை. வழக்கம் போல் பணிக்கு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும் என நிர்வாகம் யாரையும் நிர்பந்திக்கவில்லை என என்எல்சி நிர்வாகத்துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச தலைவர் வி.ராமச்சந்திரன், பணிக்குச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் ஈடுபடுமாறு நிர்வாகம் நிர்பந்தித்து வருவதாகவும், இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்கள் பணிநேரம் முடிந்து வீடு திரும்பமுடியவில்லை என செய்தியாளர்களிடம் கூறினார். 

                இதையறிந்த நிர்வாகத்துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ், அவ்வாறு யாரையும் நிர்வாகம் நிர்பந்தப்படுத்தவில்லை. மாறாக அவரவர் பணி முடிந்து வழக்கம் போல் வீடு செல்கின்றனர் என்றார். இதுதொடர்பாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் கூறுகையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதுபோன்ற புகார்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 55 உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 55 பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 3) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.  

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 14-வது வார்டு மற்றும் புவனகிரி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர்கள் பதவி, அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியம் 16-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி, 48 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகள் ஆக மொத்தம் 55 பதவிகள் காலியாக உள்ளன.  இவற்றுக்கான வேட்பு மனுக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பெறப்படும். இன்று முதல் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 

               வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-7-2010 மாலை 3 மணி. மனுக்கள் பரிசீலனை 12-ம் தேதி காலை 11 மணி. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 14-7-2010 மாலை 3 மணி வரை. வாக்குப் பதிவு நடைபெறும் நாள் 22-7-2010 காலை 7 முதல் மாலை 5 மணி வரை. வாக்குகள் எண்ணிக்கை நாள் 24-7-2010.

Read more »

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் புது உத்தரவு

கடலூர்:

             வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, மொத்தமாக மனுக்களை வழங்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

             2010ம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து இருந்தார். 

கூட்டத்தில் கடலூர்  மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 

                 வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஒட்டு மொத்தமாக மனுக்கள் வழங்குவது தடை செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு உள்ளபடி, அனைத்து விவரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 1-1-2010ஐ அடிப்படையாகக் கொண்டு, வெளியிடப்பட்டு உள்ள புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை குறித்தும், 10-7-2010 மற்றும் 11-7-2010 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் குறித்தும் அரசியில் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

                மாவட்ட திமுக இலக்கிய அணிச் செயலாளர் நாராயணசாமி, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ப.ஜெகரட்சகன், காங்கிரஸ் கட்சி அலுவலகச் செயலாளர் பக்தவச்சலம், பாஜக மாவட்ட அமைப்பாளர் எழிலரசன், பாமக மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டர்.

Read more »

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி


சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6,7,8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா ஆய்வு மைய ஆசிரியை டி.சுடர்விழி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வி.முருகையன் நன்றி கூறினார்.

Read more »

மாணவி முதுகில் ரத்தம் நெல்லிக்குப்பத்தில் பீதி

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் தனியார் பள்ளி மாணவி முதுகில் ரத்தம் வந்ததால், மாணவ, மாணவியர் பீதியடைந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் மகள் பிரீத்தி (13), கென்னடி மகள் பிளமியா (13), சோழவல்லியைச் சேர்ந்த பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

            நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மூவருக்கும் முதுகில் தானாக வியர்வை போல் ரத்தம் வந்ததாகவும், கை, கால் வைக்கும் இடங்களில் ரத்தக்கறை படிந்ததாகவும் தகவல் பரவியது. பள்ளி ஆசிரியை, மூன்று மாணவியரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்தார். மாணவி பிரீத்தி முதுகில் வியர்வை போல் ரத்தம் வந்தது கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அனுப்பி வைத்தார். 

இது பற்றி ஆசிரியை கூறுகையில், 

               "பிரீத்திக்கு மட்டும் முதுகில் ரத்தம் வந்தது உண்மை. ஏதாவது நோய் காரணமாக ரத்தம் வந்திருக்கலாம்' என்றார். இந்நிலையில், கெட்ட ஆவியின் செயலால் தான் ரத்தம் வருவதாகக் கூறி மாணவியரை சாமியார்களிடமும், கிறிஸ்தவ பாதிரியார்களிடமும் பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாணவிகளைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். அந்த மாணவியர் மூவரும் நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை. இச்சம்பவத்தால் மாணவ, மாணவியர் பீதியடைந்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தி.மு.க.,- மா.கம்யூ., போஸ்டர் யுத்தம்: கட்சி மாறிய கவுன்சிலரால் பரபரப்பு


சிதம்பரம்: 

              தி.மு.க., கூட்டணி கட்சி களும், மா.கம்யூ.,வும் போட்டி போட்டு போஸ்டர் ஒட்டும் நிலையில் மா.கம்யூ., கவுன்சிலர் தி.மு.க., விற்கு தாவியது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில், குடிநீர் பிரச்னை தொடர்பாக நடந்த விவாதத்தின் போது பிரச்னை ஏற்பட்டு தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நாற்காலியை தூக்கி வீசியும், மைக் மற்றும் டியூப் லைட்டை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

                   இச்சம்பவத்தைக் கண் டித்து மா.கம்யூ., கடலூர் மாவட்ட குழு சார்பில் கண்டன போஸ்டர் ஒட் டப்பட்டது.இதனைத் தொடர்ந்து தி.மு.க., - காங்., உள் ளிட்ட கூட்டணி கட்சியினர், மா.கம்யூ., போஸ்டருக்கு பதிலடிக்கு கொடுக் கும் வகையில் அவர்கள் ஒட்டிய போஸ்டருக்கு அருகிலேயே "தலை விரித் தாடும் குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதி கேட்டு நகர் மன்றத்தில் குரல் கொடுத்து போராடினால் அதற்குப் பெயர் ஜனநாயக படுகொலையா, கொலைவெறி தாக்குதலா, வன்முறையா' என கேள்வி கேட்டு போட்டியாக போஸ்டர் ஒட்டினர். சிதம்பரத்தில் தி.மு.க.,- மா.கம்யூ., கட்சிகள் பதிலுக்கு பதில் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிதம்பரம் நகர மன்றத்தில் இருந்த ஒரே மா.கம்யூ., கவுன்சிலர் சந்திரசேகர் (17வது வார்டு) நேற்று காலை சிதம்பரம் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் தி.மு.க.,விற்கு தாவினார். தி.மு.க.,- மா.கம்யூ., இடையே போஸ்டர் யுத்தம் நடந்துவரும் நிலையில் கவுன்சிலரின் கட்சி தாவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வில் ஐக்கியம்: 

                   சிதம்பரம் நகராட்சியில் 4, 5, 17 ஆகிய மூன்று வார்டுகளை மா.கம்யூ., கைப்பற்றியது. இதில் 5வது வார்டில் வெற்றி பெற்ற பவுஜியா பேகம் நகர மன்ற தலைவரானார். கடந்த சில மாதங்களுக்கு முன் 4வது கவுன்சிலர் ராஜலட்சுமி டி.பி.ஐ.,யில் இணைந்தார். இருந்த ஒரே ஒரு கவுன்சிலர் சந்திரசேகர் (17வது வார்டு). அவரும் நேற்று தி.மு.க.,வில் ஐக்கியமாகி விட்டதால் சிதம்பரம் நகர மன்றத்தில் மா.கம்யூ., கவுன்சிலர் இல்லாமல் போக, தலைவர் மட்டுமே  தன்னந்தனியாக தவிக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டியில் ஐஸ்கிரீம் தயாரிக்க 5 டன் பலாப்பழம் கொள்முதல்

பண்ருட்டி:

               பண்ருட்டி பலாப்பழம் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்க மும்பை நிறுவனம் நேற்று பலாப்பழம் கொள்முதல் செய்தனர். மும்பையில் காமத்ஸ் அவர் டைம்ஸ் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மாம்பழம், அன்னாச்சி, ஆப்பிள், சப்போட்டா, தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பழங்கள் மூலம் இயற்கையான முறையில் 25 வகையான ஐஸ்கிரீம் தயாரித்து வருகிறது.

                மேலும் தற்போது கூடுதலாக பலாப்பழம் மூலம் கூழ் தயாரிக்கப்பட்டு ரசாயன, கலர் கலப்பு இல்லாத முற்றிலும் இயற்கை பழ ஐஸ்கிரீம் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி பலாப்பழத்திற்கு முக்கிய நகரமாக விளங்கும் பண்ருட்டியில் பலாப்பழம் கொள்முதல் செய்ய கம்பெனி நிர்வாக இயக்குனர் ரகுநந்தன் சீனுவாசகாமத், இயக்குனர் புஷ்பலதா காமத் ஆகியோர் பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ் மூலம் பண்ருட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா தோட்டங்களை நேற்று பார்வையிட்டு ஐந்து டன் பலாப் பழங்கள் கொள்முதல் செய்தனர்.

இதுகுறித்து உதவி வேளாண்மை இயக்குனர் ஹரிதாஸ் கூறுகையில்,

               "பழுத்த பலாச் சுளையில் இருந்து அல்வா, பலா ஜூஸ், ஐஸ்கிரீம், குல்பி மிட்டாய், பலாப்பழ வற்றல், பலாப் புட்டு, பலா ஒயின், ஜாம் ஆகியவை தயாரிக்கலாம். ஆனால் பலாப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்துவதால் பலா விவசாயிகள் மேலும் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தொழில் முனைவோர்கள் பலாப்பழம் மூலம் ஜூஸ் உள்ளிட்டவைகள் தயாரிக்க முன்வரவேண்டும்' என்றார்.

Read more »

கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் கொள்ளையை தடுக்க "டயனமிக்' அலாரம்

பரங்கிப்பேட்டை: 

              தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் திருட்டு, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது மர்ம கும்பல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகை அடகு கடை, நகை கடைகளில் கைவரிசையை காட்டி வருகிறது. அதனை தொடர்ந்து போலீசார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அதிகாரிகள், நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தி அலாரம் வைப்பதற்கான ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

                 இதன் தொடர்ச்சியாக பரங்கிப் பேட்டை, பு.முட்லூர், பூவாலை, கிள்ளை, தில்லைவிடங்கன் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.மர்ம கும்பல் கூட்டுறவு வங்கியில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டால் பொதுமக்கள் கூடும் அளவிற்கு அலாரம் அடிக்கும். மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் "ரிங்' ஒலிக்கும். போனை எடுத்தால் எந்த வங்கியில் கொள்ளை சம்பவம் நடக்கிறதோ அந்த வங்கியின் பெயரை குறிப்பிட்டு "வங்கியில் கொள்ளை நடக்கிறது. உடன் வரவும் என "வாய்ஸ்' மூலம் கொள்ளை தகவல் தெரிவிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு ஊழியர்களுக்கு போனில் இதே தகவலை தெரிவிக்கும். இதனைத் தொடர்ந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டு வருகிறது.

Read more »

எஸ்.ஐ., போட்டித் தேர்வு கடலூரில் இன்று துவக்கம்

கடலூர்,: 

              கடலூரில் சப் இன்ஸ் பெக்டர் தேர்வுக்கான 2 நாள் எழுத்துத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகத்தில் சப் இன்ஸ் பெக்டர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு இன்று முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. கடலூர் மாவட்டத்திற்கான தேர்வு மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இத்தேர்வில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றி வரும் போலீசாரில் 45 பெண் போலீஸ் உட்பட 205 பேர் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் 2,420 பேர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்வையொட்டி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர்கள் , 35 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 150 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Read more »

வாடிக்கையாளர் சேவைதான் வங்கியின் சொத்து: ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர்

கடலூர்: 

            சேவையும் மதிப்பும் தான் வங்கியின் சொத்தாக விளங்குகிறது என ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் சுரேஷ் ஜான்சன் பேசினார். கடலூர் ஸ்டேட் பாங்க்கில் வங்கியின் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மண்டல ஸ்டேட் பாங்க் மேலாளர் சுரேஷ் ஜான்சன் தலைமை தாங்கினார். கடலூர் கிளை மேலாளர்கள் முதுநகர் செல்லதுரை, திருப்பாதிரிப்புலியூர் வேணுகோபால் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

               கடலூர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டிரஸ்டி சுந்தரம், செயலாளர் கணபதி, பொருளாளர் மகாவீர்மல், டிரஸ்டி அருணாசலம், அரிமா திருமலை, சீனுவாசன், தயா மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி முதல்வர் வானதி, சிறப்பாசிரியர் ரமேஷ் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தயா பள்ளி மாணவர்கள் பயன் டுத்துவதற்கான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடலூர் ஸ்டேட் பாங்க் சார்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மண்டல மேலாளர் சுரேஷ் ஜான்சன் வழங்கி பேசியதாவது:

                 ஸ்டேட் பாங் க் கடந்த 200 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது. இந்த வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆயிரம் கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய தவறு கூட சரி செய்து மாலை 6 மணியானாலும் வாடிக்கையாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என வங்கி மேலாளர் அறிவித்துள்ளார். இந்த சேவை தான் வங்கியை இன்னும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் உலக அளவில் ஸ்டேட் பாங்க் சிறந்த வங்கியாக 2வது முறையாக தேர்வு செய்யப்பட் டுள்ளது. சேவையும் மதிப்பும் தான் வங்கியின் சொத்தாக விளங்குகிறது என பேசினார்.

Read more »

உடற்கல்வி ஆசிரியர் கழக மாநிலஉயர் மட்டக் குழு சிறப்பு கூட்டம்

சிதம்பரம்:

                  தமிழக வேலை இல்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக் குழு சிறப்பு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் முன்னிலை வகித்தார். 

                 கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். 85 சதவீதம் உடற்கல்வி பட்டதாரிகள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வேலையை எதிர் பார்த்துள்ளனர். எனவே கல்லூரிகளில் தற்போது ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களை தமிழிலும் நடத்த அரசு கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. செயற்குழு உறுப்பினர் கள் கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் பங்கேற்றனர்.

Read more »

பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

கடலூர்: 

              பொது வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நடந்தது. 

கடலூர்: 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

                  "வரும் 5ம் தேதி அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள், பஸ்கள், ரயில்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விழுப்புரம்: 

கலெக்டர் பழனிசாமி பேசுகையில், 

                "தேவையின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஏதேனும் அசம் பாவிதங்கள் நடந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 222656, காவல் துறை கட்டுப் பாட்டு அறை 04146 - 222172, 222174 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடலோர காவல் படைக்கு நவீன ரோந்து படகுஎஸ்.பி., முகமது அனிபா துவக்கி வைத்தார்

கடலூர்: 

            கடலூர் மாவட்டத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோந்து படகு நேற்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக கூடுதல் போலீசார், கூடுதல் ரோந்து படகுகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க, கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை மற்றும் உள்ளூர் போலீஸ் என உயர் அதிகாரிகள் அளவிலான ஒத்திகைகள் நடத்தப் பட்டு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு வருகிறது.
 
                 கடலூர் கடலோர காவல் படையில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், 14 போலீசார் பணியில் உள்ளனர். கடலோர பாதுகாப்பு பணிக்கென கடலூர் துறை முகத்திலிருந்து படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோந்து படகு வழங்கப்பட்டது. இந்த ரோந்து படகை தமிழக கடலோர பாதுகாப்பு படை குழுமத்தின் எஸ்.பி., முகமது அனிபா நேற்று பார்வையிட்டு ரோந்து பணியை துவக்கிவைத்து டி.எஸ்.பி., சின்னசாமி, இன்ஸ்பெக்டர் வசந்தன், சப் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோருடன் ரோந்து சென்றார்.படகை முன்னாள் ராணுவ வீரரும் தற்போதைய கடலோர காவல் படை தொழில் நுட்ப உதவி ஆய்வாளருமான குணசேகரன் செலுத்தினார். இந்த அதிநவீன ரோந்து படகில் 275 திறன் கொண்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்துப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் வரும் படகு மற்றும் கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சுழலும் விளக்கு, சுழன்று தாக்கும் வகையில் துப்பாக்கி பொருத்தும் ஸ்டேன் என அதிநவீனமாக வடிவமைக்கப்பட் டுள்ளது. கடலூர் பகுதியில் மேலும் 510 திறன் கொண்ட பெரிய அளவிலான ரோந்து படகு விரைவில் வழங்கப்படவுள்ளது.

Read more »

கடலூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்


குறிஞ்சிப்பாடி; 

                கடலூர் மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் அவசர செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி எம். எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். 

             துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் பணிகளுக்கான முகாம் பற்றிய விவரங்களை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கிளைகள் தோறும் நிர்வாகிகள் கூட்டத்தினை கூட்டி புதிய வரைவு வாக்காளர் பட்டியல்களை ஒவ்வொரு வீடாக சென்று சரிபார்த்து வாக்காளர் சேர்க்கை நீக்குதல் மற்றும் புகைப்படம் போன்ற திருத்தங்களை விரைந்து முடிக்க வேண் டும்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர் விபரங்களை மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ஊராட்சி தலைவரை தாக்கியவரை கைது செய்ய கிராம மக்கள் கோரிக்கை

கடலூர்; 

              கடலூர் அருகே ஊராட்சி தலைவரை மிரட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சுய உதவிக் குழுவினர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர்.

இது குறித்து அரிசிபெரியாங்குப்பம், எம்.புதூர், குமாரப்பேட்டை, மாவடிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து கொடுத்துள்ள மனு:

               கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சியின் தலைவர். இவரை எதிர்த்து அதே ஊரைச் சேர்ந்த ஆரங்கி என்பர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஊராட்சி தலைவர் அருள் நாதனை முன்விரோதம் காரணமாக தாக்கி லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக ஊராட்சி தலைவர் அருள்நாதன் போலீசில் புகார் செய்துள்ளார். ஆரங்கி கள்ளச்சாரயம் விற்பது கட்டப் பஞ்சாயத்து என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே ஊராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற ஆரங்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புறக்கணிப்பு கலெக்டரிடம் முறையிட கிராம மக்கள் முடிவு

திட்டக்குடி ; 

             திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட தீர்மானித்தனர்.

              திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் ஊராட்சியில் சாத்தநத்தம் கிராமம் இணைந்துள்ளது. இங்குள்ள இரண்டு வார்டுகளிலும் 2,000க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை 1வது வார்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அய்யனார் கோவில் பஞ்சாயத்து சாலையை சீரமைக்கும் பணிக்காக மண் வெட்டி, கூடை, தண்ணீர், உணவு பாத்தித்துடன் ஆதமங்கலம் சென்றனர். ஆனால் பனிரெண்டு நாட்களுக்குப் பின் வேலை தரப்படும் என ஊராட்சி தலைவர் அவர்களை திருப்பி அனுப்பினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏமாற்றத்துடன் அங்குள்ள பெருமாள் கோவில் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து சாத்தநத்தம் கிராம மக்கள் கூறுகையில், 

                 "ஆதமங்கலம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக பணிக்காக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங் கப்படும் தொகையை செலவிட, ஆதமங்கலம் கிராம மக்களுக்கு மட் டுமே பணிகள் வழங்கப் பட்டு பணம் பிடித்தம் செய்ய இருக்கின்றனர்' என தெரிவித்தனர்.மேலும், மண் சார்ந்த பணிகளில் கிராம மக்களுக்கு வழங்கப்படும் தொகையை ஊராட்சி தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், சாத்தநத்தம் கிராம மக்களுக்கு பணிகள் வழங் காதது குறித்து கலெக்டர், மாவட்ட திட்ட அலுவலரிடம் நேரில் முறையிட தீர்மானித்தனர்.

Read more »

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்; 

             முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைந்து பணியில் நியமிக்கும் மாறு கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது. 

இது குறித்து வேலையில்லா முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

               தமிகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது.ஆனால் பல்வேறு குளறுபடியால் தகுதி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆசிரியர் நியமனத்தில் உள்ள குளறுபடியை நீக்கி தகுதியானர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுடன், தமிழ்நாட்டில் தமிழ்ப் பட்டம் பெற்று வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்பு

நெல்லிக்குப்பம்: 

                நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் வராததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவித்தனர். நெல்லிக்குப்பம் வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வஜீர்கான் தெருவில் உள்ளது. ஆனால் ஆர்.ஐ., வசந்தி மற்றும் உதவியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. நேற்று பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்காக ஜாதி, வருமான சான்றிதழ் பெற வந்த 50க்கும் மேற்பட்டோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அலுவலக கதவில் மாலை மூன்று மணிக்கு வருவாய் ஆய் வாளரை சந்திக்கலாம் என நிரந்தரமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் மட்டுமே உள்ள நிலையில் வருவாய் ஆய்வாளர் எந்த நேரத்திலும் வருவதில்லை. தினமும் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டும் அலுவலகத்துக்கு வந்தாலே அன்றைக்கு வரும் மனுக்களுக்கு கையெழுத்து போட்டு விடலாம். காரணம் கூறுவதை விட மக்களின் சிரமத்தை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

Read more »

சிதம்பரத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம்; 

              சிதம்பரத்தில் மா.கம்யூ., அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் விவாதத்தின் போது தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நாற்காலியை வீசியும், மைக் மற்றும் பல்புகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து மா.கம்யூ., - அ.தி. மு.க., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தனசேகர், மூசா, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருள்மொழித்தேவன், செல்வி ராமஜெயம், நகர செயலாளர் சுந்தர், ம.தி.மு.க., நகர செயலாளர் சீனுவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Read more »

தேசிய லீக் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கோர்ட்டில் ஆஜர்

கடலூர்; 

                தேசிய லீக் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.

              காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம். கோர்ட் டில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர். 

                இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால்பேட்டை வந்து, என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தாக்கியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணைக்காக இருவரும் 2ம் தேதி கோர்ட் டில் ஆஜராக உத்தரவிட்டார்.அதன்படி இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ் பெக்டர் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கின் நகல் வழங்கிய நீதிபதி சண்முகநாதன், வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Read more »

பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி இரு ஆசிரியைகள் "வெறியாட்டம்'

 

பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தையை பிரம்பால் அடித்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முஸ்தபா பராக். இவரது மகள் தன்சிராபெல்லா (3). கடந்த 20 நாட்களுக்கு முன், 2,800 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி பண்ருட்டி தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தனர்.

               பள்ளியில் குழந்தை நேற்று முன்தினம் குறும்பு செய்ததால் ஆசிரியை, பிரம்பால் அடித்துள்ளார். அதன் பிறகும் குழந்தை குறும்பு செய்யவே பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியையும் தன்சிராபெல்லாவை பிரம்பால் அடித்தார். மதியம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த குழந்தையை பெற்றோர் விசாரித்ததில், ஆசிரியை பிரம்பால் அடித்தது தெரியவந்தது. உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்படி தழும்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து தங்களது உறவினர்களுடன் பள்ளி முன் திரண்டனர். குழந்தையை தாக்கியது குறித்து விளக்கம் கேட்டு முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் உரிய பதில் கூறாமல் டி.சி., கொடுத்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் அதை அங்கேயே கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior