உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

சென்னை பல்கலை. இளங்கலை உடனடி தேர்வு முடிவு வெளியீடு

            சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை பட்ட உடனடித் தேர்வு முடிவுகளும், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற இணைய தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பார்க்க முடியும். குறிப்பிட்ட சில தனியார் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதலே முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

கடலூரில் சூறாவளி: 250 ஏக்கரில் வாழை சேதம்


 
கடலூர்:
 
          கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
 
         தென்மேற்கு பருவக் காற்றினால் கடலூரில் சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இரு நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இரு நாள்களாக மழையுடன் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியதால், வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
 
           கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், நடுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 2.5 லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
இது குறித்து ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் வாழை விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில்,
 
            "இரு நாள்களில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. அனைத்து வாழை மரங்களும் பூக்கள் உதிர்ந்து காய்கள் முற்றும் நிலையில் இருந்தன. இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு வர வேண்டிய வாழை மகசூல் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது' என்றார். 
 
இது குறித்து வேளாண் துறையில் கூறியது
 
             "தோட்டக் கலைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறார்கள். அரசு விதிகளுக்கு உள்பட்டு சேதம் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Read more »

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் விரைவில் கணினி மயம்: அமைச்சர் கோ.சி. மணி


தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு தலைவர் யு.சி.
 
சென்னை:

         அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் வரும் மார்ச் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். 

          தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. கனிணி மென்பொருளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி, நபார்டு தலைவர் யு.சி. சாரங்கியிடம் ஒப்படைத்தார். 

இதைத் தொடர்ந்து அமைச்சர்  கூறியது: 

             கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்கி, அதன் செயல் திறனை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வணிக வங்கிகளுடன் சம நிலையில் போட்டியிடவும், மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு, 2007-ம் ஆண்டு மென்பொருள் உருவாக்கப்பட்டது. இப்போது 1,032 மத்திய மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில், 1,001 கிளைகளில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் | 38 லட்சம் செலவில் பொதுவான மென்பொருள் உருவாக்கி, தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 522 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

               இதை இந்தியா முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் (நபார்டு) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளும் கணினிமயமாகும் என்றார் கோ.சி. மணி. நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரண்சிங், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யதீந்திர நாத் ஸ்வைன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மின் ஆளுமை மயமாகிறது அரசு வேலைவாய்ப்புத் துறை

சென்னை:

          தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை விரைவில் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) மயமாக்கப்பட உள்ளது.  

           செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் ஆன்லைனில், பதிவு செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது.

            இதற்காக வட்டார அளவில் அந்தந்த பள்ளிக் கூடங்களுக்கே அலுவலர்கள் சென்று சான்றிதழ்களை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. எனினும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் கூடுதலாக பல்வேறு உயர் கல்வி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், அதற்கான சான்றிதழ்களை உடனடியாக பதிவு செய்து, பதிவு மூப்பு பெற ஆர்வம் காட்டுகின்றனர்.  இதுதவிர, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையை புதுப்பிக்கவும் ஏராளமானோர் தினமும் குவிகின்றனர். 

              இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. வேலைதேடுவோர் 62 லட்சம் பேர்: வேலைவாய்ப்புத் துறையின் உயிர்ப் பதிவேட்டின்படி, இப்போது பதிவு செய்து, காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சத்தை எட்டியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சான்றிதழ் பதிவு உள்பட 95 சதவீத பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மின் ஆளுமை முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டது.

             "எம்பவர்' (அதிகாரம் அளித்தல்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு |2.75 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.  எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் "லினெக்ஸ்' மென்பொருள் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மின் ஆளுமை முறையில்  ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாள்களில், இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வைரஸ் பாதிப்பு இல்லை: "லினெக்ஸ்' மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் வைரஸ் தாக்குதலால் கணினியில் உள்ள பல்வேறு ஆவணப் பதிவு விவரங்கள் எதுவும் பாதிக்கப்படாது.

            இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள கணினியில் தொகுக்கப்பட்டுள்ள பதிவேட்டு விவரங்கள் அனைத்தும் மின்ஆளுமை முறைக்கு "லினெக்ஸ்' மென்பொருள் உதவியுடன் விரைவில் மாற்றப்பட உள்ளது.  2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பெரும்பாலான அலுவலர்களுக்கு நவீன கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மின்ஆளுமை திட்டப் பணிகள் நிறைவடைந்த பின், தனி "சர்வர்' மற்றும் இணையதள தொடர்பு மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

ஆன்லைனில் பதிவு செய்யலாம்: 

           இதன்பின் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை "ஸ்கேனர்' சாதனம் மூலம் பிரதி எடுத்து, வேலைவாய்ப்புத் துறையின் புதிய இணையதளத்தைப் பயன்படுத்தி "ஆன்லைன்' மூலம் பதிவு செய்யலாம். இதன்பின் 6 நாள்கள் செல்லுபடியாகும் வகையில் தற்காலிகமான அடையாள எண் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவில் ஏதேனும் குறை இருந்தால் 6 நாள்களுக்குள் திருத்தம் ("எடிட்' வசதி மூலம்) செய்து கொள்ளலாம். 6 நாள்களுக்குள் வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்த சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர். இதன்பின் தங்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக நிரந்தரப் பதிவு அட்டையை "பிரிண்டர்' சாதனம் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

போலிகளுக்கு வாய்ப்பு இல்லை: 

            கல்வித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழ் எண் குறித்த விவரங்களும் தொகுக்கப்படும் என்பதால் எந்த விதமான முறைகேடு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. ரேஷன் அட்டை உள்ளிட்ட இருப்பிடச் சான்றுகளை சமர்ப்பித்து, வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. "ஆன்லைன்' முறையில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையையும் புதுப்பித்துக் கொள்ளலாம். 

வேலை தருவோரும் பயன்படுத்தலாம்...

                வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான, தகுதியுள்ள பணியாளர்களின் பட்டியலைப் பெற இயலும். மாற்றுத் திறனாளிகள், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர், தொழிற்படிப்பில் தேர்ச்சி பெற்றோர், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த திட்டம் மூலம் எளிதில் பயன் பெறலாம்.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், 240 அலுவலர்களுக்கு முதல்கட்டமாக எல்காட் நிறுவனம் கணினி பயிற்சி அளித்துள்ளது. இதையடுத்து  எம்பவர்' மின் ஆளுமை திட்டத்தை வேலைவாய்ப்புத் துறையில், அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

Read more »

சிதம்பரம் நகரில் வீதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு


சிதம்பரம் தெற்குரத வீதியில் சாலையோரம் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள்.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் சாலையோரம் வணிக நிறுவனங்களினால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு நடக்கும் நிலை உள்ளது.

            சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் குறிப்பாக சிதம்பரம் மேலரத வீதி, தெற்குரத வீதி, கமலீஸ்வரன் கோயில் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரங்களில் சாலையோரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

           இந்த குப்பை மற்றும் கழிவுகளை நகராட்சியினர் காலை 10 மணி வரை அள்ளுவதில்லை. இதனால் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மூக்கில் துணியை கட்டிக் கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அக்குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் முழுமையாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் வீதிகளில் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. 

                   குறிப்பாக சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள வணிக வளாக நிறுவனம் மற்றும் ஹோட்டல்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிப்போன காய்கறிகள், பழங்கள் கொட்டப்படுகின்றன. வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் அவர்களது இடத்திலேயே குப்பைத் தொட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும். அக்குப்பைகளை நகராட்சி லாரி மூலம் எடுத்துச்செல்வது என்ற விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

           எனவே வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் கழிவு மற்றும் குப்பைகளை அவர்களது இடத்திலேயே தொட்டியில் வைத்து நகராட்சி குப்பை லாரி வரும் போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற நகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.சாலையோரம் குப்பைகளை கொட்டினால் அந்நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பெ.மாரியப்பனிடம் கூறியது,

                   பிளாஸ்டிக் கழிவுகளை மற்றும் குப்பைகளை கொட்டும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பைகளை அதிகாலையில் அள்ளமுடியவில்லை என தெரிவித்தார்.

Read more »

கடலூர் அஞ்சல் நிலையத்தில் இயல்புப் பணிகள் பாதிப்பு

கடலூர்:

          கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டதால், இயல்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

            கடலூரில் பல கிளை அஞ்சல் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.   இதனால் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையத்தில், பதிவுத் தபால், மணியார்டர், விரைவு அஞ்சல், அஞ்சலக சேமிப்பு, சிறு சேமிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக, பெரும்பாலான நாள்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கவுண்டர்கள் அமைந்து இருக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் அப்படியொரு வசதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, பல நேரங்களில் வெப்பக் காற்றால் தகிக்கும் நிலை உள்ளது.

           திங்கள்கிழமைகளில் மக்கள் அஞ்சல் நிலையத்துக்குள் சென்று வெளிவருவதே சிரமமான காரியம்.  இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், இந்த அஞ்சல் நிலையத்தில் திங்கள்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் படிவங்களைப் பெறுவதற்காக முண்டி அடித்துக் கொண்டு, அஞ்சல் நிலைத்துக்குள் செல்வதும், பலரை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளிவருவதுமான நிலை, பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

           இதனால் அஞ்சல் நிலையத்துக்கு இயல்பான பணிகளுக்கு வந்த பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் கவுண்டர்கள் பக்கம் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பான பணிகள் நடைபெற்றதாகவே தெரியவில்லை. அஞ்சல் தலைக்களைக் கூட வாங்க முடியாமல் பலர் திரும்பிச் சென்றனர். விண்ணப்பப் படிவங்களை வாங்க வருவோரின் வாகனங்களை, அஞ்சல் நிலையத்தின் முகப்பில் தாறுமாறாக நிறுத்தி விட்டதால், பலர் உள்ளேயே நுழைய முடியாமல் அவதிப்பட்டனர்.

                  அஞ்சல் நிலையங்களில் இத்தகைய விண்ணப்பப் படிவங்கள் விற்பனையை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதற்கென தனி கவுண்டர்களையும், ஊழியர்களையும் நியமித்து செயல்படுவதன் மூலமே, இயல்புப் பணிகள் பாதிக்கப் படாமல் இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து. அஞ்சல் நிலையத்தின் வடக்குப் பகுதி நுழைவு வாயில் உள்ள இடத்தை, இதற்கென ஏன் பயன்படுத்தக் கூடாது என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 

             தந்தி மணியார்டர் போன்ற அத்தியாவசிய சேவைகூட முடியவில்லை. பல்வேறு படிவங்கள் விநியோகத்தின்போதும் இதே நிலைதான் ஏற்படுகிறது. தலைமை அஞ்சல் நிலைய நிர்வாகம், இயல்பான பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.

இதுபற்றி அஞ்சல் நிலைய தலைமை அதிகாரி கூறுகையில்,

               கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் 4 கவுண்டர்களில் விநியோகிக்கப்படுகின்றன. படிவங்கள் விநியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கணினி மூலம் நடப்பதால், வேறு இடத்துக்கு மாற்றவும் முடியவில்லை.  எனவே 20-ம் தேதிவரை இதே நிலைதான் நீடிக்கும் என்றார்.

Read more »

கடலூரில் 750 பேருக்கு ரேஷன் அட்டை

கடலூர்:

            கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் 750 பேருக்கு, ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

             மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை கோருதல் உள்ளிட்ட 453 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டன.

                  இக்கூட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளைச் சேர்ந்த 750 பேருக்கு ரேஷன் அட்டைகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். எல்காட் நிறுவனத்தால் கடந்த வாரம் அச்சிடப்பட்ட ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். மகளிர் திட்டம் மூலம் கட்டுமானத் தொழில் பயிற்சி முடித்த 30 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

            சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒருவருக்கு காப்பீட்டுத் தொகையாக |50 ஆயிரம் வழங்கினார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெற்ற இணையதள கணினி தமிழ் வரைகலைப் போட்டியில் மாவட்ட ஆளவில் வெற்றி பெற்ற, பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர் ஆர்.சுதாகரன், புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவர் சபரிநாதன், திருவந்திபுரம் ஸ்ரீ வித்யா கலாகேந்திரம் பள்ளி மாணவர் கலைச்செல்வன் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.÷மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Read more »

2.47 கோடியில் கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் '

கடலூர்:

               கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்தில், ரயில்வே இலாகா தரப்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதாக, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

           கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் ரயில்வே இலாகா மேற்கொள்ள வேண்டிய பகுதிக்கு, டெண்டர் விடப்பட்டு இருப்பதாக மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி  மேலும் கூறியது: 

               ரயில்வே இலாகா சார்பில் நிறைவேற்றவேண்டிய பாலம் |2.47 கோடியில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் செப்டம்பர் 8-ம் தேதி பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படுவார். ரயில்வே இலாகா தரப்பில் கட்டப்படும் பகுதி, 2.75 மீட்டர் உயரமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் இருக்கும். இருவழி போக்குவரத்து வசதி கொண்டதாக அமையும் இச்சுரங்கப் பாதை, முன்னரே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பாக இருக்கும். அதைக் கொண்டு வந்து பொருத்தி 6 மாதங்களுக்குள் கட்டுமானப் பணி முடிவடையும். சுரங்கப்பாதை திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறைதான் இன்னமும் முடிவு செய்யாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கடலூர் சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

           சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு ரயில்வே இலாகா ஒப்புதல் அளித்து இருக்கிறது. விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கடலூர் திருப்பாப்புலியூரில் இருந்து விருத்தாசலம் வழியாக இயக்கவும், ரயில்வே இலாகா ஒப்புக் கொண்டு இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு, தலைமைப் பொறியாளர் அனுமதி அளித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் தெரிவித்தார். |7.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

             ரயில்வே சுரங்கப்பாதை தொடர்பாக கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நிஜாமுதீன் தலைமையில் சனிக்கிழமை மாலை நடந்தது. சுரங்கப் பாதைக்கு ரயில்வே தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிக்கு டெண்டர் விடப்பட்டதற்கு தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பதைத் திட்டத்துக்கு எதிராக சில சுயநல சக்திகள் செயல்பட்டு வருகின்றன. வரும் 15-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடாவிட்டல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுநல அமைப்புகளின பிரதிநிதிகள் வெண்புறா குமார், ரமேஷ், மணிவண்ணன், அருள்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் நகராட்சியில் 1,900 நாய்களுக்கு கருத்தடை

கடலூர்:

           கடலூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் 1,900 தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் அண்மையில் தொடங்கியது.

           கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தெருவுக்கு 10க்கும் குறையாமல் நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். நாய்க்கடிக்கு ஆளாகி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு மட்டும் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று, அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

           எனவே நாய்க்கடிப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நகராட்சிக் கூட்டங்களில் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனவே நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கடலூர் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து வந்து கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது கடலூரில் கருத்தடை செய்யாத நாய்கள் 1,900 இருப்பதாக கால்நடைத் துறை கணக்கெடுத்து அறிவித்து உள்ளது. அதன்படி 1,900 தெரு நாய்களுக்கும், தலா |445 செலவில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. 1-வது, 2-வது வார்டுகளில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடந்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமார் வெள்ளிக்கிழமை கூறியது:

                 கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய நாய் ஒன்றுக்கு |445 செலவிடப்படுகிறது. இதில் |60 வீதம், அறுவைச் சிகிச்சை செய்யும் கால்நடை மருத்துவருக்கு வழங்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு வரை கடலூரில் 1,926 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைத் தெருக்களில் செல்லாதவாறு, அவற்றின் உரிமையாளர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆணையர். நாய்களுக்கு கருத்தடை செய்வதை நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Read more »

எளிதில் சென்று வரக்கூடிய இடத்தில் உழவர் சந்தை அமைக்க கோரிக்கை

பண்ருட்டி:

           பண்ருட்டியில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

           பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. நகருக்கு ஒதுக்கு புறமாக உள்ளதால் தொடங்கிய நாள் முதல் இச்சந்தை செயல்படவில்லை.இந்நிலையில் ஜூன் மாதம் பண்ருட்டி நகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், உழவர் சந்தை செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பண்ருட்டி நகராட்சியில் கூட்டம் நடத்துமாறு வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறினார்.

           தனைத் தொடர்ந்து உழவர் சந்தை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கடலூர் சாலையில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகம், கும்பகோணம் சாலை மற்றும் பஸ் நிலையம் அருகே ஆகிய இடத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம், பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் ரயில்வேவுக்கு சொந்தமான இடம் இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் உழவர் சந்தையை அமைத்தால் சிறப்பாக செயல்படும் என கருத்து தெரிவித்தனர்.

           தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர் முருகேசன் தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உழவர் சந்தையை அமைக்க வாய்ப்பு உள்ளது, ரயில்வே இடம், சார்பு நீதி மன்றம், கோயில் இடம் ஆகியவற்றில் அமைப்பதற்கு சில நடைமுறைப் பணிகள் உள்ளதால் கால அவகாசம் ஆகும். இருப்பினும் இக்கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு சொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முருகேசன் கூறினார்.

                 கூட்டத்தில் நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) என்.தனவேல், அலுவலர் (வணிகம்) சுரேஷ், உழவர் சந்தை நிர்வாக இயக்குநர் வரதராஜன், வேளாண்மை உதவி இயக்குநர் ஹரிதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமலிங்கம், வியாபார சங்க செயல் செயலர் ராஜேந்திரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாஉதயகுமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுமதிசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:

            சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் டி கம்பெனி ஊர்க்காவல் படை அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

               விழாவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஷ்வின் எம்.கோட்னிஸ் பங்கேற்று திறந்து வைத்தார். சரக உதவி தளபதி பா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தளபதி ஆர்.கேதார்நாதன் தலைமை வகித்து வரவேற்றார். டிஎஸ்பி மா.மூவேந்தன், துணை வட்டார தளபதி ஜெயந்திரவிச்சந்திரன், ஊர்க்காவல் படை இணை அதிகாரி ஆர்.காமராஜ், கோட்டத் தளபதி ஆர்.கோவிந்தராஜ், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். கோட்ட உதவித் தளபதி ஏ.தண்டபாணி நன்றி கூறினார்.

Read more »

“Varsities should make students employable”



Annamalai University Vice-Chancellor M.Ramanathan addressing a training programme at Chidambaram on Monday. 
 
CUDDALORE: 

          The universities should not remain complacent with teaching and awarding degrees. They should also teach soft skills to the students to make them employable, said M.Ramanathan, Vice-Chancellor of Annamalai University.

           He was delivering the inaugural address at the “Teacher training programme in accounting and auditing for vocational teachers of southern region” jointly organised by the Department of Commerce, Annamalai University, and the National Council of Education Research and Training (NCERT), Bhopal, on the university premises at Chidamabram on Monday.

              Dr. Ramanathan said that in the case of medical courses it was not a problem because the curriculum was framed to combine education with hands-on experience that equipped the candidates either to take up jobs or to start private practice. The engineering and agricultural graduates too, to a certain extent, got exposure to job markets on the strength of their professional skills; whereas, the students of arts and science subjects were left to fend for themselves because they could not boast of having the required skills.

               Dr Ramanathan said that in this context the Annamalai University was doing well by teaching the students vocational skills and also conducting training programmes for teachers to handle the vocational subjects in an efficient manner. The university in collaboration with a private bank was also giving vocational training to the students for which he applauded the Department of Commerce. He further observed that the arts and science students, however, had a wider choice as they could land up in jobs in banks or schools or private concerns firms.
R.Chandramohan, programme director and Head, Department of Commerce, R.Muthuraj, programme coordinator, NCERT, and D.Selvaraju, Dean, Faculty of Arts, and H.Sankar, Professor in Commerce, spoke.

Read more »

Cash prizes for computer drawing competition winners

— Photo:C Venkatachalapathy

Cuddlore Collector P.Seetharaman giving away cash awards to a student who won the competition held in connection with the World Classical Tamil Conference in Cuddalore on Monday.

CUDDALORE:

           In the computer drawing competition, held in connection with the World Classical Tamil Conference, three students from different schools have bagged the district-level prices.

         District Collector P. Seetharaman gave away the certificates and cash prizes to the candidates on the sidelines of the Grievance Day session held here on Monday. The first prize of Rs. 3,000 was won by R.Sudhagaran of The New John Dewey School at Panruti; the second prize of Rs. 2,000 went to G. Sabarinathan of St Mary's Matriculation School at Panruti and third prize of Rs. 1,000 was bagged by M. Kalaiselvan of Sri Vidhya Kalakendram of Thiruvahindapuram. The competitions were held under the aegis of the Electronic Corporation of Tamil Nadu.

Read more »

First batch of candidates completes masonry training


CUDDALORE: 

         District Collector P.Seetharaman gave away certificates and certain implements to be used in construction to a first batch of 30 candidates who successfully completed the masonry training here on Monday.

          The Collector said that for the Kalaignar Housing Scheme, under which 21 lakh huts in the State would be converted into concrete houses in the next six years, it had been proposed to train a total of 500 candidates in masonry in the district under the Mahalir Thittam. For the purpose a sum of Rs 40 lakh had been sanctioned at the rate of Rs 8,000 per candidate. 

The amount would be spent as follows: 

             fees for the institution that imparts training – Rs 3,000 a candidate, a cash incentive of Rs 4,500 a candidate, at the rate of Rs 100 a day for 45 days, and, implements to be used in construction worth Rs 500 per candidates. The first batch was trained in the construction skills by M.K.Raman Institute at Valaiyamadevi from August 1 to 22, the Collector added.

Read more »

நரியன் ஓடை மண் கரையிலேயே கொட்டப்பட்ட அவலம்

நடுவீரப்பட்டு: 

          நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கரையில் மண் கொட்டியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

            நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடை ஆழப்படுத்தும் பணி நடந்தது. சி.என்.பாளையம் யாதவர் வீதி வழியாகத்தான் இந்த ஓடையில் இறங்கி சி.என்.பாளையம் நடுத்தெரு, யாதவர் தெரு, சொக்கநாதன் பேட்டை, காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் மற்றும் மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த ஓடையை தற்போது ஆழப்படுத்தி தோண்டப்பட்ட மண் அனைத்தையும் அங்கேயே கொட்டி கரையை மலை போல் உயர்த்தி விட்டனர். 

                    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மண் கரைந்து மீண்டும் ஓடைக்கே வரும் நிலை உள்ளது.மண் மேட்டை அகற்றி நடை பாதைக்கு வழி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண நிதி

கிள்ளை: 

             சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டையில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

             மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கு தடைக்கால நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் தமிழக அரசின் மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை 800 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அடுத்த டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் விழா நடந்தது. 

                    ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்காந்தி வரவேற்றார். மீன்வள ஆய்வாளர் நாபிராஜ், மேற்பார்வையாளர் புண்ணியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, மீன்வள உதவி இயக்குனர் இளம்பரிதி ஆகியோர் 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒருலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள் கருணாமூர்த்தி, அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

கடலூர்: 

             விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகள், விதைச் சான்று, மின் வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பொதுப்பணித்துறை (நீர் பாசனம்) துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

Read more »

கடலூரில் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர்:

        ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாமை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

            கடலூரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. 

           புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இந்த முகாமை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்து, தனது கண்களை பரிசோதித்துக் கொண்டார். டாக்டர் பல்லவி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் முகாமில் பங்கேற்ற 140 போலீசாரின் கண்களை பரிசோதித்தனர். அவர்களில் 25 பேருக்கு பார்வையில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து கண்ணாடி அணிய அறிவுறுத்தினர். முகாம் ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி., காமராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

முகாமை துவக்கி வைத்த எஸ்.பி., கூறுகையில், "

               விரைவில் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் டிரைவர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும்' என்றார்.

Read more »

கடலூர் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு மானியவிலையில் விதை நெல்

கடலூர்: 

          கடலூர் வட்டாரத்தில் மானிய விலையில் சம்பா பருவ விதை நெல் வினியோகம் செய்யப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

           ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா பருவத்திற்கான சான்று பெற்ற நெல் ரக விதைகள் பொன் மணி, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, பி.பி.டி.5204, ஏ.டி.டி.39. உயர் விளைச்சல் கலப்பின ரகமான கே.ஆர்.எச். 2 ஆகிய ரகங்கள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகின்றன.ஒரு கிலோ விதை நெல் 5 ரூபாய் மானியம் வீதம் வழங்கப்படுகிறது. 

          கடலூர் வட்டாரத்திலுள்ள கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம் பாக்கம், வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் ரக சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன. விவசாயிகள் மானிய விலையில் அரசின் சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்திறன் பயிற்சி முகாம்

விருத்தாசலம்: 

           விருத்தாசலத்தில் ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பல்திறன் பயிற்சி முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் ராஜாமணி ராமு தலைமை தாங்கினார். 

            பி.டி.ஓ., க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். எக்ஸ்னோரா நிறுவன இயக்குனர் நிர்மல் பல்வேறு நாடுகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், மன வித்தை, அற்புத வளிமண்டல பயணம், அதிசய வான்மண்டலம், மனத்தடை, ஏழாவது அறிவு குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ராமலிங்கம், கலைச் செல்வி, பக்கிரிசாமி, ராமலிங்கம், குணசேகரன் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே இரு தரப்பினர் மோதல் 58 பேர் மீது வழக்குப் பதிவு

திட்டக்குடி: 

           திட்டக்குடி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 58 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

              திட்டக்குடி அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களை கடந்த 4ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் (22), மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்தனர். நேற்று முன்தினம் தொளார் காலனியில் ஆனந்தராஜை (21) கைது செய்யச் சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் வேன் கண்ணாடி உடைந்து சப் இன்ஸ்பெக்டர் பழனி காயமடைந்தார். இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கியவர் கள் என 58 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Read more »

விருத்தாசலம் அருகே கோஷ்டி மோதல்: 12 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: 

          கோவில் திருவிழாவில் ரசிகர் மன்ற போர்டு வைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

              விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் இரு நடிகர்களின் ரசிகர் மன்றம் சார்பில் போர்டு வைப்பதில் மூர்த்தி மகன் சுப்ரமணியன் (22) கோஷ்டிக்கும், பழனி மகன் சிலம்பரசன் (20) கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில் சுப்ரமணியன், முனியன், சிலம்பரசன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து பாண்டிதுரை, சிலம்பரசன், முனியன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பண்ருட்டியில் குண்டும் குழியுமான சாலைவாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,: 

             பண்ருட்டியில் குண்டும் குழியுமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

            பண்ருட்டி இந்திராகாந்தி சாலை வழியாக பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி, கும்பகோணம் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் வடிகால் வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மேலும் இச்சாலையைஅதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாவது நேர்கிறது. இவ்வழியே செல்லும் லட்சுமிபதி நகர், மேலப் பாளையம் உள்ளிட்ட நகரை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி பகுதியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி: 

           பண்ருட்டி பகுதியில் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

           கடலூர் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பாலு (53), ஸ்ரீதர் (22), பரந்தாமன் (42) உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றும் செட்டப்பட்டறை, போலீஸ் லைன், அருள்ஜோதி நகர், திருவதிகை ஆகிய பகுதிகளிலிருந்தும் பலர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். திடீர் வயிற்றுப் போக்கிற் கான காரணம் தெரியவில்லை.

            பண்ருட்டி நகரத்தை பொறுத்தமட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள் ளது. சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி மற்றும் ஒரு சில இடங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், முதல்நாள் பிடித்து வைத்த தண்ணீர் மறுநாள் துர்நாற்றம் வீசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

                  இதே போன்று திருவாமூர், சேமக்கோட்டை, கண்டரக் கோட்டை, மணம்தவிழ்ந்தபுத்தூர், எல்.என்.புரம், சிறுவத்தூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தங்கம் (24), செல்லம்மாள் (50), தனலட்சுமி (60) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 37 பெண்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior