உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதல் வீடு: முதல்வர் கருணாநிதி ஒப்படைத்தார்

சிதம்பரம் :  

                சிதம்பரம் அருகே, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீட்டை, முதல்வர் கருணாநிதி நேற்று பயனாளியிடம் ஒப்படைத்தார். திருவாரூர் செல்லும் வழியில், முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகையில் தங்கினார். 

                    நேற்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் புறப்பட்டார். அப்போது, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியான குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல் லம்படுகையில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். கடந்த மாதம் 2ம் தேதி, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீடு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். வீட்டை பயனாளி கணேசன் - கஸ்தூரி தம்பதியிடம் ஒப்படைத்து, "வீடு வசதியாக உள்ளதா' எனக் கேட்டார். 

                பின், கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்களை கலெக்டர் சீத்தாராமனிடம் கேட்டறிந்தார்.வல்லம்படுகை ஊராட்சியில் மொத்தம் 595 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு 82 வீடுகள் கட்டப்பட உள்ளன. வல்லம்படுகையில் 69, வேலக்குடியில் 13 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டும், 10 வீடுகள் முடியும் தருவாயிலும் உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து, 9.50 மணிக்கு வல்லம்படுகை வந்த முதல்வர், அங்கிருந்து 10.04க்கு புறப்பட்டு திருவாரூர் சென்றார். 

                 முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., ரவிக்குமார், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், குமராட்சி சேர்மன் மாமல்லன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் இருந்து புறப்பட்ட முதல்வருக்கு, வல்லம்படுகையில் மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

பயனாளிஉருக்கம்: 

                    துணை முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டு, முதல்வர் கையால் எனக்கு வீடு ஒப்படைக்கப்பட்டது, வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக் கியம். ஒவ்வொரு ஆண்டு வெள்ளத்தின் போதும் எனது கூரை வீடு பாதி மூழ்கி விடும். கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தேன்.  இனி எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போதுமான அளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரமாக வீடு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளது என்று, பயனாளி கணேசன் கூறினார்.

Read more »

சர்வதேச யோகா போட்டி கடலூர் மாணவிகளுக்கு தங்கம்




கடலூர்: 

                       சர்வதேச யோகாசனப் போட்டியில், கடலூர் சி.கே.பள்ளி மாணவியர் தங்கப் பதக்கம் வென்றனர். சர்வதேச யோகாசனக் குழுமம் மற்றும் இலங்கை யோகாசனக் குழுமம் சார்பில் உலக அளவிலான யோகாசனப் போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் நடந்தது. இதில், 13 நாடுகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்திய அணி சார்பில் பங்கேற்ற கடலூர் சி.கே.பள்ளி மாணவி மதுமிதா மூன்று தங்கப் பதக்கமும், கவிப்பிரியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.


Read more »

மதுரை காமராஜ் பல்கலையில் ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு: இந்தியாவில் முதன்முறையாக துவக்கம்

              


                 இந்திய பல்கலையில் முதன்முதலாக, மதுரை காமராஜ் பல்கலையில் ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பு துவக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.,) அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

                   கடந்த சில மாதங்களுக்கு முன், பல்கலை துணைவேந்தர் மற்றும் உயிரியல் துறை மூத்த பேராசிரியர்கள் இந்த ஆலோசனையை, மத்திய அரசின் உயிர்தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் முதன்மை குழுவிடம் தெரிவித்தனர். மதுரை காமராஜ் பல்கலையின் வசதியை கருத்தில் கொண்டு, ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்புக்கு அரசு 12 கோடி ரூபாயை வழங்கியது. இத்திட்டத்தை பேராசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்து நிர்வகிப்பார். இளநிலை (பி.எஸ்சி.,) படிப்பில் உயிரியல் சார்ந்த படிப்பை முடித்தவர்கள், முதுகலை படிப்பும் (எம்.எஸ்சி., ஜீனோமிக்ஸ் மற்றும் ஆராய்ச்சி படிப்பு) ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். 

                 இதற்கான முறையான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும். இப்படிப்பிற்கு பல்கலை சார்பில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி 24 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்படிப்பில் சேர்ந்த இரு ஆண்டுகள் கழித்து, மேற்படிப்பு அல்லது வேறு கல்வி நிறுவனங்களுக்கு அல்லது வேலைக்கு செல்ல விரும்பினால், அவர்கள் பல்கலையின் எம்.எஸ்சி., பட்டத்துடன் செல்லலாம். தரத்தில் முதலான 15 மாணவர்கள் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் பிஎச்.டி., படிக்க அனுமதிக்கப்படுவர். 

                     இக்கல்வி முறை வாயிலாக இளநிலை மாணவர்கள் ஐந்தாண்டுக்குள் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களை பெறலாம். இத்திட்டத்தின் மறுபகுதியாக மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப துறையில் ஜீனோமிக்ஸ் யுக்திகளை கையாண்டு, நவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பலவகை நோய்களுக்கு புதிய மருந்துகள், நோயை முன்னதாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும். இந்த ஆராய்ச்சிக்காக பல்கலை உயிரியல் துறையில் நவீன ஆய்வு வசதிகளை உருவாக்க, மத்திய அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது, என துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார்.

Read more »

அனந்தபுரி, நிஜாமுதின் ரயில்கள் கடலூர் வழியாக சென்றன

கடலூர்: 

                   திருச்சி அருகே நெல்லை விரைவு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து அனந்தபுரி, நிஜாமுதின் விரைவு ரயில்கள் கடலூர் வழியாகச் சென்றன. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை விரைவு ரயில் புறப்பட்டது. நேற்று அதிகாலை திருச்சி அடுத்த  வாலாடி அருகே ரயில் தடம் புரண்டது. 

                  இதனால் அந்த வழியே சென்னை செல்ல வேண்டிய அனந்தபுரி மற்றும் நிஜாமுதின் விரைவு ரயில்களை திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு திருப்பி விடப்பட்டன. அனந்தபுரி விரைவு ரயில் நேற்று காலை 7.50 மணிக்கும், நிஜாமுதின் விரைவு ரயில் காலை 8 மணிக்கும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றன.

Read more »

கடலூரில் வளர்ச்சிப்பணிகள்: முதல்வர் கேட்டறிந்தார்

கடலூர் : 

                   கடலூரில் ஓய்வெடுத்த முதல்வர் கருணாநிதி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார்.

                      திருவாரூர் மாவட்டத்தில்  நடக்கும் குடும்ப நிகழ்ச்சி மற்றும் மாலை நாகையில் நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் புறப்பட்டார்.  கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் மாவட்ட தி.மு.க., சார்பில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் முதல் வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், கடலூர் சேர்மன் தங்கராசு, ஒன்றிய செயலாளர் ஜெயபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு கடலூர் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

                 கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்த முதல்வர், பின் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் "கலைஞர் வீடு' வழங் கும் திட்டப் பணிகள் குறித்து விசாரித்தார். பின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த அவர் மாலை 6.50 மணிக்கு சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். இரவு 8 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் மாளிகையில் ஓய்வெடுக்க வந்த முதல்வர் கருணாநிதியை, பதிவாளர் ரத்தினசபாபதி வரவேற்றார்.

Read more »

ஆன்லைனில் மின் கட்டணம்: நவம்பரில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்

                 ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை, வரும் நவம்பரில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.  இந்த முறை மூலம் தமிழகத்தின் எந்தவொரு பகுதியில் இருந்தும், ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தலாம். 
 
                  தமிழ்நாடு வாரியத்தின் குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  சென்னையில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, அண்மையில் கோவைக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இப்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்கான இணையதள இணைப்பு பணிகளை, மின்சார வாரியம் செய்து வருகிறது.  
 
                    சென்னை, கோவையில் சுமார் 70 ஆயிரம் மின்சார நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகின்றனர். இதில் கோவையில் மட்டும் சுமார் 9 ஆயிரம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆன்லைன் மின் கட்டணம் செலுத்தும் முறை விரிவாக்கம் குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:  தமிழகத்தில் சுமார் 2.20 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளனர். 
 
                  இதில் 46 லட்சத்துக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் சென்னையில் உள்ளனர். தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கும் ஆன்லைன் சேவையை விரிவுப்படுத்தும் அதே சமயத்தில், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி கட்டணத்தைச் செலுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.  அஞ்சல் நிலையங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்தச் சேவையைப் பெறலாம். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.5 செலுத்த வேண்டும். இதில் சுமார் 200 பேர் வரைதான் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 
 
வரவேற்பு இல்லாத ஆன்லைன் சேவை: 
 
                  ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை இப்போது குறைவாக உள்ளது.  அதாவது ஐசிஐசிஐ, கனரா வங்கி, ஆக்சிஸ், இந்தியன் வங்கி என குறிப்பிட்ட வங்கிகளின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமே இப்போது கட்டணத்தைச் செலுத்த முடிகிறது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எந்த வங்கியின் கீழ் ஆன்லைன் சேவையில் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறித்த விவரங்கள், மின் நுகர்வோருக்கு தெரியாமல் உள்ளது. 
 
                    இதனால், ஆன்லைன் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆன்லைன் சேவை எதிர்பார்த்த அளவுக்கு மின் நுகர்வோரிடையை வரவேற்பைப் பெறவில்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.  
 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 
 
                      ""பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளையும், ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் திட்டத்தில் இணைக்க பேச்சு நடத்தி வருகிறோம்.  இப்படி பல வங்கிகளை அனுமதிக்கும்போது, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சென்னையில் 30 நாள்கள் கணக்கீடு மற்றும் பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இந்தச் சேவையில் கணக்கீடு நாளில் இருந்து, 20 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தச் சேவை நவம்பரில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

Read more »

நெய்வேலியில் அறிவியல் மையம் நிறுவ கோரிக்கை

நெய்வேலி:

              தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம்  சென்னை, திருச்சி, திருநெல்வேலி நகரங்களில் செயல்படும் அறிவியல் மையங்களைப் போன்று நெய்வேலி நகரிலும் அறிவியல் மையம் நிறுவவேண்டும் என்று நெய்வேலி கிளை அறிவியல் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

                தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை செயற்குழுக் கூட்டம் நெய்வேலி வட்டம் 18-ல் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள் வருமாறு:

                      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியரிடையே பேச்சு, பாட்டு, வினாடி-வினா, செயல்திறன் உள்ளிட்ட சிறப்புப் போட்டிகளை இம்மாதம் 24-ம் தேதி நடத்துவது, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கான துளிர் திறனறிதல் போட்டியை நவம்பர் 13-ல் நடத்தவது, இதுதொடர்பாக அந்தந்தப் பள்ளிகளில் மாணவர்கள் 10 செலுத்தி பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்துவது, துளிர் இல்லத் தொடக்க விழாவை என்எல்சி பெண்கள் மேநிலைப் பள்ளியில் இம்மாதம் 15-ம் தேதி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                        கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் சின்னப்பன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் தாமோதரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

Read more »

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் ; எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்:

               வீடுகளில் பிரசவம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு, அரசு ஆரம்ப சுதாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

               திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் 62 லட்சத்தில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  பன்னீர்செல்வம் பேசியது: 

                   பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதி கொண்டதாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 5 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இந்த சுகாதார நிலையம் செயல்படும். மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மருத்துவர்கள் தொண்டு உள்ளத்துடன் செயல்பட வேண்டும். 

                வீடுகளில் பிரசவம் நடைபெறுவதால் தாய்- சேய் மரணம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவித் திட்டத்தில் 2,07,507 பேருக்கு |1200 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது. பெண்ணாடம் பேரூராட்சியில் 4671 கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு உள்ளன. மங்களூர் ஒன்றியத்தில் இதுவரை 91,382 குடும்பங்களுக்கு கலர் டிவிக்களும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

                    ந    ல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த ஆண்டு 3.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். 8,265 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். நல்லூர் ஒன்றியத்தில் மகப்பேறு உதவித் திட்டத்தில் 5,922 பேருக்கு தலா 6 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர். கணபதிக்குறிச்சியில் 29.17 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், துணை இயக்குநர் ஆர்.மீரா, மங்களூர் எம்.எல்.ஏ. கு.செல்வம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                   விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகளுக்கு முன்பு இவ் வழியே 30 ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. தற்போது 15 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டாலும் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. 

                  இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், தற்போது கடலூர் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                     திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தனியார் பேருந்து தொழிற்சங்க செயலர் பண்டரிநாதன், குடியிருப்போர் நலச்சங்க பொதுச்செயலர் எம்.மருதவாணன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில பொறுப்பாளர் திருமார்பன், வெள்ளி கடற்கரை சிறுவணிக சங்கத் தலைவர் பரிதிவாணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் பகுதியில் மர்மக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சலா என மக்கள் அச்சம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பன்றிக்காய்ச்சலா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

                       சிதம்பரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிகம் பேர் மர்மக் காய்ச்சலால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 100க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மர்மக் காய்ச்சல் சிகிச்சைக்காக புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இல்லை என அங்குள்ள டாக்டர்கள் தெரிவிப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். 

                      தனியார் மருத்துவமனைகளில் |600க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                      மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் விழிப்புணர்வு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து ஆலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

மாணவிகளைக் கேலி செய்ததால் கடலூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல்

கடலூர்:

               மாணவிகளைக் கேலி செய்ததால் கடலூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. 

                இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள மீனவர் கிராமங்கள் சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை. ராசாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சிர்குக்குக் காத்து இருக்கும் அவ்வூர் மாணவிகளை, சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நாள்தோறும் கிண்டல் செய்து வந்தனராம். இதுகுறித்து மாணவிகள் புகார் செய்ததைத் தொடர்ந்து, கிண்டல் செய்யும் இளைஞர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டனர். எனவே ராசாப்பேட்டை இளைஞர்கள் சிலர் பஸ் நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். 

                மாணவிகளின் புகாருக்கு உள்ளான சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த கந்தன் (21) என்பவரை அவர்கள் பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. சொத்திக்குப்பத்தை சேர்ந்த சிலர் ராசாப்பேட்டைக்கு வந்து கந்தனை விடுவித்துச் சென்றனராம். இதற்கிடையே சொத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர்களை, ராசாப்பேட்டை கிராமத்தினர் சிறைபிடித்துச் சென்றுவிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் சண்டைக்குத் தயாரானார்கள். ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

                  அதற்குள் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் கடலூர் முதுநகர் போலீசார்  அங்கு விரைந்து சென்றனர். மோதல் தவிர்க்கப்பட்டது. எனினும் இரு கிராமங்களிலும் பதற்றம் நீடிக்கிறது. இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.÷இந்தச் சம்பவம் காரணமாக ராசாப்பேட்டையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 30 பேர் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்குச் செல்லவில்லை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior