உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூர் மாவட்ட பந்த் -90% :பொதுமக்கள் அவதி

              என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் 90% நடந்து வருகிறது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளன. 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்,  

                         நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                 இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இன்று பொது வேலை நிறுத்தம் செய்து ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளன. தொழிலாளர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதையடுத்து, இந்தப்பொது வேலை நிறுத்தத்தின் போது கடையடைப்பு செய்து ஆதரவு தருவது என்று எமது பேரவை முடிவு எடுத்துள்ளது’’ என்று அறிவித்தார்.

               இதையடுத்து இன்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பென்னாடம் , பன்ரூட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் அருளழகன் தனது ஆதரவாளர்களுடன் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்தார்.  போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்தவர்களை களைத்தனர்.

                 போலீஸ் பாதுகாப்புடன் அவ்வப்போது அரசு பேருந்துகள் இயங்குகின்றன.  இதனால் குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் ஊழியர்களும், பொதுமக்களூம் அவதிப்படுகின்றனர். 90% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று "பந்த்':முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு



கடலூர்:

                    எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் நேற்று மாலை போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                    இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் "பந்த்' அறிவித்துள்ளன. தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், "பந்த்' நடத்தினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், போராட்டத்தை முறியடிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

                        ஐ.ஜி., ரமேஷ் குடவாலா, டி.ஐ.ஜி., மாசானமுத்து ஆகியோர் மேற்பார்வையில் ஆறு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்தால் மக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்கும் பொருட்டும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் நேற்று மாலை போலீஸ் கொடி அணி வகுப்பு நடந்தது.

Read more »

"ஸ்லெட்' தேர்வு எப்போது? எதிர்பார்ப்பில் முதுகலைப் பட்டதாரிகள்

                    "ஸ்லெட்' தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுகலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.  கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.  

                 இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதலுடன் நடத்தப்படும்.  தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப் படிப்பும் மற்றும் அதுதொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 யு.ஜி.சி. புதிய விதிமுறை: 

                        இந்த நிலையில் 30-6-2010 அன்று யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறையில், கல்லூரி விரிவுரையாளருக்கான குறைந்தபட்ச தகுதியாக, முதுகலைப் பட்டப்படிப்பில் 55 சதவீத தேர்ச்சியும், "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயித்தது. மேலும் டாக்டர் பட்டம் (பி.எச்டி) பெற்றிருப்பவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து அறிவித்தது.  

              டாக்டர் பட்டம் முடிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும் என்பதால், கல்லூரி விரிவுரையாளர்கள் ஆக நினைக்கும் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர்.  

2 ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு இல்லை...:

                       "நெட்' தேர்வைக் காட்டிலும் எளிதாக இருக்கும் என்பதால், இவர்களில் பெரும்பாலானோர் "ஸ்லெட்' தேர்வையே எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக "ஸ்லெட்' தேர்வு நடத்தப்படவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் "ஸ்லெட்' தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் 14-12-2008 அன்று பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் விடுபட்ட 5 பாடங்களுக்கு மட்டும் 12-4-2009 அன்று "ஸ்லெட்' தேர்வு நடத்தப்பட்டது.   

Read more »

நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் கடலூர் செல்லங்குப்பம் சிமென்ட் சாலையால் மக்கள் அவதி


சிமெண்ட சாலை அமைக்க மணல் கொட்டப்பட்டு, 2 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாததால் மணற்சாலையாக மாறிய செல்லங்குப்பம் சாலை.
  
கடலூர்:

               நிதிப் பற்றாக்குறையால் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பணிகள் டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக கடலூர் நகரில் தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அதன்பிறகு செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சேதப்படுத்தப்பட்ட நகராட்சி சாலைகள் அனைத்தையும் செப்பனிட ரூ.  20 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

                 அண்மையில் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு ரூ.  1000 கோடி வழங்க தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் 131 சாலைப் பணிகளுக்கு ரூ.  15 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 40 சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.  10 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இதனால் திட்டமிட்டபடி அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. 

                   நிதி பற்றாக்குறையால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர் வார்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் வார்டு என்று பாகுபாடு பார்த்து பணிகளை வழங்கும் சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சில வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட சாலைப் பணிகள் பல, நிதி பற்றாக் குறையாலும், பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாலும் பாதியிலேயே நிற்கிறது. அத்தகைய பணிகளில் ஒன்றுதான் 34-வது வார்டு செல்லங்குப்பம் இணைப்புச் சாலை. ரூ.  12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 

                     சாலைகளின் ஓரங்களில் செங்கல் கட்டுமானம் எழுப்பி, சாலையில் ஆற்று மணல் கொட்டும் வேலை முடிவடைந்தது.  அதற்கு மேல் சிமென்ட் தளம் அமைக்கும் வேலை 2 மாதங்களாகியும் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

இதுகுறித்து நகராட்சி வார்டு உறுப்பினர் கூறியது 

                           "நகராட்சி பொது நிதியில் நடைபெற்றுள்ள இந்தப் பணிக்கு இதுவரை நகராட்சி நிதி தரவில்லை என்று ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இனி பணம் கிடைத்தால்தான் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ கூறினார்.  இதேபோல் மேலும் பல பணிகள், டெண்டர் விட்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக நகராட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். 

Read more »

பூஞ்சானக்கொல்லி மருந்து தயாரிக்கும் பண்ணை மகளிர்


பூஞ்சானக்கொல்லி மருந்து தயாரிக்கும் பண்ணை மகளிர்.
சிதம்பரம்:
 
              சிதம்பரம் அருகே பண்ணை மகளிர் சுய உதவிக் குழுவினர் புதிய முயற்சியாக வேளாண் பாசனத்துக்காக உயிர் பூஞ்சானக்கொல்லி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.  
 
                    மகளிர் சுய உதவிக் குழுவினர் சோப்பு, மெழுகுவர்த்தி, துணிமணிகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் டான்வா பண்ணை மகளிர் சுய உதவிக் குழுவினர் சற்று வித்தியாசமாக விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் உயிர் பூஞ்சானக்கொல்லி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.  
 
                  குறிப்பாக மண்ணுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சூடோமோனாஸ் புளூரன்ஸ் மற்றும் ரைக்கோடெர்மா விரிடி மருந்துகளை தயாரித்து வேளாண்துறை உதவியுடன் விற்பனை செய்து வருகின்றனர்.  இந்த பூச்சி மருந்துகள் தயாரிக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் வனஜா, பொருளர் லட்சுமி ஆகியோர் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பூஞ்சானக்கொல்லி மருந்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.  
 
                  தமிழகத்திலேயே முதல்முதலாக பண்ணை மகளிர் ரூ.  2.50 லட்சம் செலவில் மூலப்பொருள்கள் மற்றும் இயந்திரங்களை சென்னையில் கொள்முதல் செய்து தில்லைவிடங்கனில் ஒரு வீட்டில் ஆய்வுக்கூடம் அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த குழுவினருக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய வேளாண் துறை ரூ.  1.25 லட்சம் மானியம் வழங்கியுள்ளது. இந்த பூஞ்சானக்கொல்லி மருந்துகளால் நெல், வாழை, பருத்தி, கரும்பு, மணிலா, உளுந்து, பயிர், கேழ்வரகு, கம்பு, சோளம், தக்காளி, வெண்டை, உருளை மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர் பூஞ்சானக்கொல்லி மருந்து தயாரிக்கும் பண்ணை மகளிர்.  
 
                          மேலும் இந்த மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்வதால் அமோக விளைச்சல் கிடைப்பதால் விவசாயிகளிடையே இந்த பூஞ்சானக்கொல்லி மருந்துகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இலவசப் பயிற்சி

              மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். 

 இது தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநர் பி.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                    2011-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் கலந்துகொள்ள இருக்கும், அனைத்துத் தரப்பு மாணவ, மாணவியருக்கும் தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி தரப்பட உள்ளது.  பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.  மாணவ,மாணவியர் தங்களது பெயர்,கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானவரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களை வெள்ளைத் தாளில் பூர்த்திசெய்து அதனுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிலாசமிட்ட 10-க்கான அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளை இணைத்து 

முனைவர் பொ. செல்லத்துரை, 
இயக்குநர் மற்றும் ஐஏஎஸ், 
ஐபிஎஸ் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர், 
இளைஞர் நலத் துறை, 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 
பல்கலை. நகர், 
மதுரை-21 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 25.10.2010. நுழைவுத்தேர்வு நாள் 29.10.2010 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் இலவச தடுப்பூசி



   
                   பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, வேலூர், கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  
 
                 தென் மேற்குப் பருவமழை காரணமாக கடந்த மாதம் சென்னை, வேலூர், கடலூர், கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது.  அரசு மருத்துவமனைகளில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். எச்1என்1 வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 
 
 தடுப்பூசி மருந்து: 
 
                   சென்னை கிங் ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி பரிசோதனைக் கூடங்களில் கட்டண அடிப்படையில் தடுப்பூசி மருந்து போடும் பணி தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 
  
யாருக்கு இலவசம்? 
 
                  கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சொட்டு மருந்து (மூக்கில் விடுதல்) அல்லது தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சொட்டு மருந்து, தடுப்பூசி மருந்தை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற ரூ.15 கோடியை அரசு ஒதுக்கியது.  டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்து, சென்னை உள்பட மேலே குறிப்பிட்ட 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ஓரிரு நாளில் தடுப்பூசி மருந்து விநியோகம் நடைபெறும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
 ஓர் ஆண்டுவரை நோய் தடுப்பு சக்தி: 
 
              பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தின் ஆற்றல் ஓர் ஆண்டு வரை நீடித்து, உடலுக்கு நோய் தடுப்புச் சக்தியை அளிக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  
 
அறிகுறிகள் என்ன? 
 
                பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை, கோவை உள்பட அரசு மருத்துவமனைகளின் தனி சிகிச்சைப் பிரிவுகளில் ஒரு சிலர் மட்டுமே இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.  
 
                            இந்த அறிகுறிகள் தொடரும் நிலையில், தாமதிக்காமல் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

Read more »

என்.எல்.சி. போராட்டம்: தமிழக MPக்கள், MLAக்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க முடிவு

பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ.  கடலூரில் நேற்று அளித்த பேட்டி:


                         ’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. 

                 சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை  கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

                 இந்த போராட்டம் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் நடைபெறும். பால் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம். மருந்து கடைகள் திறந்து இருக்கும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவில்லை என்றால் மேற்கு வங்காளம், நந்திகிராமத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினை ஏற்படும்.  உயிருக்கு ஆபத்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, முறையாக பயிற்சி இல்லாத கிராமப்புற இளைஞர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துகிறது. முறையான பயிற்சி பெறாததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

                      பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்’’என்று தெரிவித்தார்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில்பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு


குறிஞ்சிப்பாடி

               குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவர் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எல்லப்பன்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து, நாட்டு பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்றுள்ளார். இவரது குடோனில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வெடி மருந்தை எடுப்பதற்காக மின் விளக்கின் சுவிட்சை போட்ட போது, பல்பு வெடித்தது. இதில் ஏற்பட்ட தீப்பொறியால் பட்டாசு குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.

                   இதில், குடோன் தரைமட்டமானது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இவ்விபத்தில் உரிமையாளர் சிவக்கொழுந்து அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு (23), சுப்ரமணியன் மகன் அப்பு என்கின்ற சரத்குமார் (23), கணபதி மகன்கள் தருண் (10), சந்தானம் (7) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பு என்கிற சரத்குமார், நேற்று அதிகாலை தருண் (10) இருவரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.அமைச்சர் ஆறுதல்: விபத்தில் இறந்த சிவக்கொழுந்தின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க, முதல்வர் நிவாரண நிதி உதவி வழங்க பரிந்துரை செய்தார்.

மோட்டார் கொட்டகையால் விபரீதம்:

                           வெடி விபத்தில் இறந்த சிவக்கொழுந்து பட்டாசு தயாரிக்க முறையாக லைசென்ஸ் பெற்றிருந்தும், தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டார் கொட்டகையை அனுமதியின்றி வெடிகளை இருப்பு வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். மோட்டார் கொட்டகை உள்ளே ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் அமைத்து, அதில் மருந்துகளை சேகரித்து வைத்திருந்தார். மோட்டார் கொட்டகை என்பதால் மின்சார உபகரணங்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாதுகாப்பற்ற நிலையில் வெடி மருந்தை வைத்திருந்ததால் இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளது.

Read more »

வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்க ரூ.92 லட்சம் செலவில் தடுப்பணை

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே நவாப்பேட்டை வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.

                     ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் தடுப்பணைக் கட்டாவிட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற் காலிக தடுப்பு அமைக்க திட்ட மதிப் பீடு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து கலெக் டர் சீத் தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

                 அதனைத் தொடர்ந்து 92 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணைக் கட்ட திட்டமிட்டனர். தற்போது 40 அடி ஆழம் உள்ள வெள்ளாற்றில் 600 மீட்டர் தொலைவில் பனைமரத்தை நட்டு மண் மூட்டை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து 6 ஆயிரம் பனைமரம் வாங்கி கிள்ளை ரயில் நிலையத் தில் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மழைகாலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை

சிதம்பரம் :

                   சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 853 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்கோரி தமிழ்நாடு வேலையில்லா உடற் கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ராமசாமி முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: 

                      சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் பல் வேறு வளர்ச்சித் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையில் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமணம் செய்யப்பட்ட நிலையில், மிக குறைந்த அதாவது 853 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இசை, ஓவியம், தையல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

                        பிற பாடங்களில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் உடற்கல்வி குறித்து வெளியிடப்படவில்லை. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வதில் அலட்சியம் : கடலூர் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம்


நெல்லிக்குப்பம் : 

                 பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பொருட்கள் வாங்க கடைக்குச் செல் லும் போது  துணிப்பை கொண்டு செல்வது வழக் கம். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி வாங்குவதற்னெ தனி துணிப் பையும், மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு ஓலையால் பின்னப்பட்ட "பரி'யும் வைத்திருப்பார்கள். மளிகை பொருட்களுக்கு 200 கிராம் முதல் 5 கிலோ வரை பேப்பர் கவர் பயன்படுத்தப்பட்டது. 

                  இவ்வாறு பயன்படுத்திய பேப்பர், பை உள் ளிட்ட குப்பைகள் மக்கி உரமானது. இதை வாங்க விவசாயிகளிடையே போட்டி நிலவியதால் நகராட்சிக்கும் வருமானம் கிடைத்தது. கால்நடைகள் வைத்திருப்பவர்களிடமும் விவசாயிகள் எரு வாங்குவார்கள். இயற்கை உரங் களை பயன்படுத்தியதால் மண் வளம் பாதுகாக்கப் பட்டு குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைத்தது. இதை கெடுக்க வந்ததுதான் "கேரி பேக்' (பிளாஸ் டிக் பைகள்) கலாசாரம். எண்ணெய் பாக்கெட் முதல் "டிஸ்போசல் கப்' வரை பிளாஸ்டிக் ஆதிக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது 100 மி.லி., எண்ணெய் வாங்கினால் கூட பிளாஸ்டிக் கவரில் கொடுக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பிளாஸ் டிக் பைகளே காணப்படுகிறது.

                      இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்குவதில்லை. மண் துகள்களை அடைத்துக் கொள்வதால் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல முடியாததால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நகராட்சி பகுதியில் சேரும் குப்பையில் பெரும் பகுதி பிளாஸ்டிக் பைகள் நிறைந்துள்ளதால் அவைகள் உரமாவது இல்லை. சேகரிக்கும் குப் பைகளை அங்காங்கே குவித்து தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் பைகள் அதிகளவு குப்பையுடன் கலந்து வருவதால் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வரப் பட்ட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத் தையும் செயல்படுத்த முடியவில்லை.
 
                        இயற்கை உரங்கள் கிடைக்காமல் அதிகளவு ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதித்து மகசூல் குறைகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றின. ஒரு சில உள்ளாட்சி அமைப்பு நிர் வாகிகள் மற் றும் அதிகாரிகள் தங்கள் பகுதி வியாபாரிகளை அழைத்து பிளாஸ்டிக் பைகளை பயன் பாட்டை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தனர். 

                       ஆனால் அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் வியாபாரிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டம் நடத்தி நாளிதழில் செய்தி வந்தவுடன் உயர் அதிகாரிகளிடம் காட்டுவதோடு தங்கள் பணி முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு விவசாய நிலங்களும் பயிர் செய்ய தகுதியில்லாமல் மாறும் நிலை ஏற்படும்.  இப்பிரச்னையை தீர்க்க பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் அபராதம் விதித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

Read more »

கடலூரில் சம்பா நடவு இலக்கு 2.3 லட்சம் ஏக்கர்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.3 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:

                 நெல் பயிரைப் பொறுத்தவரை, சொர்ணவாரி பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 11,974 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவைப் பருவத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8326 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. சம்பா பருவத்தில் 2.3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

                    செப்டம்பர் முடிய 38,153 ஹெக்டேரில் நடு முடிந்துள்ளது. செப்டம்பர் முடிய கரும்பு 33,642 ஹெக்டேர், கம்பு  2715 ஹெக்டேர், கேழ்வரகு 4459 ஹெக்டேர், மக்காச்சோளம் 12464 ஹெக்டேர், உளுந்து 945 ஹெக்டேர், மணிலா 3718 ஹெக்டேர் எள் 3446 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரியில் 44.9 அடி (மொத்த உயரம் 47.5அடி),கீழணையில் 7 அடி (9 அடி). வாலாஜா ஏரியில் 5.5 அடி (5.5 அடி), பெருமாள் ஏரியில் 5 அடி (6.5 அடி) உள்ளது.  வெலிங்டன் ஏரியில் தண்ணீர் இல்லை. விதைகளைப் பொறுத்தரை நெல் 498.38 டன்கள், தானிய வகைகள் 0.75 டன்கள், பயறுவகைகள் 72.73 டன்கள், மணிலா 5.32 டன்கள் இருப்பு உள்ளது. உரங்கள் தழைச்சத்து 904 டன்கள், மணிச்சத்து 1212 டன்கள், சாம்பல் சத்து 1970 டன்கள் இருப்பு உள்ளது.

                      உயிர் உரங்கள் 1,05,650 பொட்டலங்கள் இருப்பு உள்ளன. 2,28,200 பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கூட்டுறவு மூலம் செப்டம்பர் முடிய பயிர்க்கடன் குறுகிய காலக் கடன்கள் 107.99 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய காலக் கடன் 4.86 கோடி, இதர வேளாண் கடன்கள் 364.07 கோடி (மொத்தம் | 476.92 கோடி) வழங்கப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: 

                              வாலாஜா ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு என்.எல்.சி. 24 கோடி ஒதுக்கி இருக்கிறது. விரைவில் பணியைத் தொடங்க முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியில் 43 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. வீராணம் ஏரிக்கு லஸ்கர்களை நியமித்து, நீர் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பெண்ணாடம் சோமசுந்தரம்: 

                  பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு நடவுக்கு ஏக்கருக்கு | 3 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்து, இதுவரை வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சியர்: 

                  வேளாண் உதவி இயக்குநர் முன்னிலையில், சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

முட்லூர் விஜயகுமார்: 

                  டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் நீர் வழங்கியதற்கு நன்றி. நுண்ணுயிர் உரத்தின் விலையைக் குறைக்க வேண்டும்.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்: 

                 வீராணம் ஏரியில் நீர் மட்டத்தை 43 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. களங்கள் இல்லாத இடங்களில்,  அறுவடை காலங்களில் சாலைகளில் தானியங்களை உலர்த்த அனுமதிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்: 

                 தேவைப்படும் அனைத்து இடங்களிலும் களங்கள் அமைக்க நிதி வழங்கப்படும். விவசாயிகள் தெரிவிக்கலாம்.

வேணுகோபால்: 

                மக்காச்சோளத்துக்கு களை எடுக்க தகுந்த கோனோவீடர் கருவிகள் வேண்டும்.

மருத்தாசலம்: 

                வெலிங்டன் ஏரிக்கு கூடுதல் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

                      வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior