உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

பூண்டு பற்றிய தாவரவியல் தகவல்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6mJEdl_kCWcPzV-vaPuLa2C4PnWGdC-J0VZpM2c4WIunfY_VRVf64__fi9kqO6RObPPyM1tUMhxb6DeC_eZ1Vx1PbNqNz_YOSYu0hh2j3fp4s4xXin_7L2V8TBdyKe7vBRMWWxsvl0QFq/s1600/DSC00135.JPG




பெயர்: பூண்டு

வேறு பெயர்கள் : வெள்ளைப்பூண்டு 

தாவரப்பெயர்: ALLIUM SATIVUM.

தாவரக்குடும்பம்: AMARYLLIDACEAE.   

பயன் தரும் பாகங்கள்: வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

5. பயன்கள்

          இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.
 
            எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.
 
         சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.
 
* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
 
* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
 
* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
 
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
 
* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.
 
* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
 
* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
 
* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
 
* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.
 
* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
 

Read more »

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு


கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள்.
கடலூர்:

         கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.  

              கடலூரில் 6 மாதங்களுக்கு முன்பு வரை மாட்டுவண்டி மணல் ரூ. 350 க்கும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைத்து வந்தது. மழை காலத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மணல் எடுப்பதில் சிரமம் இருப்பதால் அத்தகைய காலங்களில் மணல் விலை உயர்வது உண்டு. ஆனால் நல்ல கோடை காலத்தில் கடலூரில் மணல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, வீடு கட்டுவோரையும், ஒப்பந்ததாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  கடலூரில் தற்போது மாட்டு வண்டி மணல் ரூ. 1,000 ஆகவும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 8 ஆயிரமாகவும் உள்ளது. 

              சில தினங்களுக்கு முன் நெல்லிக்குப்பத்தை அடுத்த, பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.  இங்கு இருந்து கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் மணல் கிடைக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உள்ளது. பண்ருட்டியில் மாட்டு வண்டி மணல் விலை ரூ. 350 ஆகவும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரம் ஆகவும் உள்ளது. திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் டிராக்டர் இழுக்கும் டயர் வண்டி மணல், ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது. ஆனால் கடலூரில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்த விலை ஏற்றம் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.  

               கடலூரில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு ஆகியவை கடலூர் நகராட்சி வழியாக ஓடிக் கடலில் கலக்கின்றன. கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க, ஏனோ அனுமதிக்க வில்லை. மணல் விலை ஏற்றம் காரணமாக, கடலூர் கட்டுமானச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. மணல் விலை உயர்வால் நகராட்சி மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில், உப்பங்கழிப் பகுதிகளில் காணப்படும் உவர் மண்ணையும், ஆற்றங்கரைகளில் உள்ள தரம் குறைந்த மண்ணையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள்.  

                 இதனால் அரசுக் கட்டடங்கள் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் சாலைகளின் தரம் படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது. இத்தனை மோசமான மணலைக் கொண்டு கட்டப்படும் கடலூர் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளின் கட்டுமானங்கள் என்னவாகும் என்ற கவலையும் கடலூர் மக்களுக்குத் தோன்றி இருக்கிறது.  கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நத்தப்பட்டு பெண்ணை ஆற்றில் அள்ளப்படும் மணலுக்கு, மாட்டு வண்டிக்கு பொதுப்பணித்துறை வசூலிக்கும் கட்டணம் ரூ. 48 மட்டுமே. கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றுக் குவாரியில், மணல் அள்ளும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

              ஆனால் இந்த லாரிகளும், மாட்டு வண்டிகளும் கடலூர் மக்களிடம் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  நுகர்வோருக்கு ஏற்பட்டு இருக்கும் மணல் விலை ஏற்றத்தால், அரசுக்கு வருவாய் அதிகாரித்தால்கூட மக்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இடைத்தரகர்கள்தான் மணல் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள், மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள்.  மேலும் மணல் எடுத்து வரும் வழியில் உள்ள கிராமங்களில், செல்வாக்கு மிக்க நபர்கள் மாட்டு வண்டிகளிடம், கோயில் விழாக்களுக்காக என்று கூறி, ஒரு நடைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை வசூலிக்கிறார்கள். 

              அதற்கு ரூ. 20 க்கு ரசீதும் கொடுக்கிறார்கள். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில், பணம் செலுத்தி மணல் அள்ளுவோரிடம், இத்தகைய நபர்கள் பணம் வசூலிக்க அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை. 

 மணல் விலை ஏற்றம் குறித்து, லாரி உரிமையாளர் சங்கர் கூறுகையில், 

                பட்டாம் பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக குவாரி செயல்படுகிறது. இக்குவாரியை இடைத் தரகர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டு, மற்ற லாரிகளை உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து செல்லும் லாரிகள், ஒரு லோடு மணலுக்காக, 3 நாள்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  அப்பகுதித் தரகர்கள் பெருவாரியாக மணல் எடுத்து, தங்கள் சொந்த இடங்களில் கொட்டி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவே மணல் விலை உயர்வுக்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாட்டு வண்டிக்காரர்கள் விலை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.     




Read more »

வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு


தற்போது நீர் நிரம்பிய நிலையில் உள்ள வீராணம் ஏரி.
சிதம்பரம்:
 
         கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுப்பப்படுகிறது. 
 
             இந்நிலையில் ஏரியிலிருந்து பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீராணம் ஏரியிலிருந்து மண் எடுத்து, கொள்ளிடம் இடதுகரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றதாலும், அணைக்கரையில் உள்ள கீழணையில் பாலம் மற்றும் ஷட்டர் சீரமைக்கும் பணி நடைபெற்றதாலும் வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு ஏரி கடந்த 5 மாதங்களாக வறண்டு கிடந்தது. 
 
              இதனால் ஏரியிலிருந்து மார்ச் மாதம் முதல் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. தற்போது கீழணையிலிருந்து ஏரிக்கும், பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து வீராணம் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) நீர் உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாற்றின் வழியாக 1800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால் ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
 
             பின்னர் வீராணம்ஏரியில் உள்ள சேத்தியாத்தோப்பு பூர்த்தங்குடி நீர் வாங்கி நெடுமாடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டது.சென்னைக்கு குடிநீர் அனுப்பும் தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறுவை சாகுபடி பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி. இளங்கீரன் தெரிவித்தார்
 
 
 
 
 

Read more »

அண்ணாமலை செட்டியார் பரிசு பெற சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

            ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை பரிசு பெற மாற்றுத் திறனாளி சிறுவர், சிறுமியரின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளையின் கௌரவச் செயலாளர் ஆறு. ராமசாமி அறிவித்துள்ளார்.  

             குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசாக மாற்றுத் திறனாளி சிறுவர், சிறுமியருக்காக பாடுபட்டு வரும் சேவை நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு பரிசுக்குரிய சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும்.  செப்டம்பர் 6-ம் தேதி சென்னை ராணி சீதை அரங்கில் நடைபெறும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 அனுப்ப வேண்டிய முகவரி:  

செயலாளர்,
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை, 
ராணி சீதை மன்றம், 
603, அண்ணா சாலை, 
சென்னை -6.


Read more »

கடலூர் அருகே ரூ. 300 கோடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை: 14-ல் மக்களிடம் கருத்துக் கேட்பு

கடலூர்:

             கடலூர் அருகே ரூ. 300 கோடியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது. 

               குட் எர்த் ஷிப் பில்டிங் என்ற நிறுவனம் இத்தொழிற்சாலையத் தொடங்குகிறது. இது குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 14-ம் தேதி வேலங்கிராயன்பேட்டையில் நடக்க உள்ளது. கடலூரில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க, 2006-ம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. இதற்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. புதுக்குப்பம் - அன்னப்பம்பேட்டை இடையே அமைய இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

                ற்போது வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை அமைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதல் கட்டமாக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், ரூ. 300 கோடியில் இத்தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பின்னர் பெரிய அளவில் விரிவு படுத்த வாய்ப்பு உள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில், அலுவலர்கள் 200 பேருக்கும், தொழிலாளர்கள் 800 பேருக்கும், தொழிற்சாலை செயல்படத் தொடங்கியதும் 2 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

                  முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் இரும்பைப் பயன்படுத்தி, 2 புதிய கப்பல்களைக் தயாரிக்கும் திறன் கொண்டதாகவும், 2 கப்பல்களைப் பழுதுபார்க்கும் திறன் கொண்டதாகவும் இத்தொழிற்சாலை அமையும். வரும் ஆண்டுகளில் 5 லட்சம் டன் இரும்பைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக தொழிற்சாலைக்கு கடலில் 2 ஜெட்டிகள் கட்டப்படும். தொழிற்சாலை அமையும் பகுதியை 2007-லேயே சிறு துறைமுகம் பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.  

               புதிய தொழிற்சாலைக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், 14-ம் தேதி வேலங்கிராயன் பேட்டையில் நடைபெற இருக்கிறது. இத்தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இத்தொழிற்சாலை அமைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, மத்திய சுற்றச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கும், தமிழக அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம். நிஜாமுதீன் கருத்துக்ளை அனுப்பி உள்ளார்.   

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம். நிஜாமுதீன்  கூறியது: 

            கடலூர் அருகே அமைய இருக்கும் கப்பல் கட்டும் தளத்தால், இரும்பு வார்ப்படம், ரசாயன வர்ணங்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும். ஏற்கனவே கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால், கரையில் இருந்து 8 கி.மீ. தூரம் வரை, கடல் மாசுபட்டு மீன் வளம் அழிந்து விட்டது. சாட்டிலைட்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த சில ஆண்டுகளில் அக்கரை கோரி, தேவனாம்பட்டினம் மற்றும் தாழங்குடா பகுதிகளில் 1,000 மீட்டர் தூரம், கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

              புதுவை மாநிலம் வீராம்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைத்ததால், விழுப்புரம் மாவட்டக் கடலோர கிராமங்கள் பல, கடல் அரிப்புக்கு இலக்காகி இருப்பதே இதற்கு எடுத்துக் காட்டு. புதிய கப்பல் கட்டும் தளத்துக்காக மேலும் புதிய ஜெட்டிகள், நீர்வழிப்பாதைகள் அமையும் போது, கடல் அரிப்பு மேலும் அதிகமாகும். கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளையொட்டி ஏராளமான கப்பல்கள், கடலூர் மாவட்டக் கடல் பகுதியில் நுழைந்து அதிர்வுகளை ஏற்படுத்தி, மீன் வளத்தை வேறு பகுதிகளுக்கு நகரச் செய்துவிடும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிய வாய்ப்பு உள்ளது என்றார்.





Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தூத்துக்குடி எழுத்தாளர் சொ.பிரபாகரன் முதல் பரிசு

 


தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குகிறார் என்எல்சி ன்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி. சுரேந்தர்

நெய்வேலி:

             தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சொ.பிரபாகரன் எழுதிய "கண்ணாமூச்சி பிரார்த்தனை' எனும் சிறுகதைக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது. 

             பரிசு பெற்றவர்களின் சிறுகதைகள் ஜூலை 10-ம் தேதி முதல் தினமணி கதிரில் பிரசுரமாகின்றன.14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 9-ம் நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி. சுரேந்தர் மோகன் தலைமை வகித்து,தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பரிசு பெற்றோர் விவரம்: 

1-ம் பரிசு - சொ. பிரபாகரன், தூத்துக்குடி (கண்ணாமூச்சி பிரார்த்தனை). 

2-ம் பரிசு - ரமேஷ்கல்யாண், ஓசூர் (போன்சாய் மனங்கள்).

3-ம் பரிசு - சோ. சுப்புராஜ், சென்னை (குங்குமச்சிமிழ்). 

ஆறுதல் பரிசு பெற்றவர்கள்: 

ராசி. அழகப்பன் -  சென்னை, 

யாணன் - சென்னை, உஷாதீபன் - மதுரை, 

கி. ரவிக்குமார் - நெய்வேலி, மாரி - சென்னை.  

           பரிசு பெற்றவர்களின் கதைகள் தினமணி கதிரில் ஜூலை - 10 முதல் பிரசுரமாகும். 

சனிக்கிழமை நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் கே. பார்த்தசாரதி பேசுகையில், 

            "குழந்தைகளிடையே தற்போது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது. எழுதிப் பழகும் திறனும் குறைந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் கணினிக்குச் சென்று விடுகின்றனர்.  குழந்தைகளிடையே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் குறையவேண்டும். அப்போதுதான் அவர்கள் புத்தகங்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி அறிவை விரிவடையச் செய்யமுடியும். என்எல்சி நிறுவனம், நெய்வேலி புத்தகக் கண்காட்சி எனும் சிறப்பான பணியைச் செய்துவருகிறது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியன் ஓவர்சீஸ் வழங்க தயாராக இருக்கிறது' என்றார்.

நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பங்கேற்ற விழுப்புரம் சரக டிஐஜி வினித்தேவ் வான்கேடே பேசுகையில்,  

                "உலகின் ஒரு மூலையில் உள்ள எங்கோ ஒருவர் எழுதிய புத்தகத்தை நாம் படிக்கும் போது, அவர் நம் முன்னே இருந்து பேசுவதைப் போன்று இருக்கும். புத்தகத்தால் மட்டுமே அமைதியான முறையில் லட்சக்கணக்கானோர் மனதுக்குள் சென்று ஒரு கருத்தை பதியவைக்க முடியும். எனவே புத்தகத்தை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' என்றார்.நிகழ்ச்சியில் எழுத்தாளர் ச. பெரியண்ணன் பாராட்டப்பட்டார். ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் பதிப்பகத்தார் கெüரவிக்கப்பட்டனர். நடிகர் கிரேஸி மோகனின் நாடகம் கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றது.





Read more »

கடலூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:
            
             கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தோர் இறந்தால், அவர்களின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

இது குறித்து  மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

           ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இறந்தால், அன்னாரின் இறுதிச் சடங்கிற்காக, இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும். இதற்காகக் கடலூர் மாவட்டத்துக்கு 2011-2012 ம் ஆண்டுக்கு, அரசு ரூ. 8.44 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.   எனவே தகுதியான நபர்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரிடம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Read more »

தமிழ் சேனல்களை கட்டணமில்லா சேனலாக அறிவிக்க வலியுறுத்தல்

சிதம்பரம்:

              கடலூர் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது. 

             தலைவர் எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். ஆபரேட்டர்கள் முத்து, ராஜேஷ், இளஞ்செழியன், அசோக், ராஜசேகர், குமார், பட்டாபி, செந்தில்குமரன், சபா, பாலாஜி, பாபு, ஆதிநாராயணன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருகிற ஜூலை 18-ம் தேதி மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தை மாலைக் கட்டித்தெரு ஆறுமுகநாலலர் நிலையத்தில் நடத்துவது. அரசு கேபிள் டி.வி.யை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவராக உடுமலை கே.ராதாகிருஷ்ணனை நியமனம் செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.

               சன் டி.வி. குழும ஆதிக்கத்திலிருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் தமிழ் சேனல்கள் அனைத்தையும் கட்டணமில்லா இலவச சேனலாக அறிவிக்க வலியுறுத்துவது. அரசு கேபிள் டி.வி.க்கும் கேபிள் ஆபரேட்டர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை அறவே ஒழிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சிதம்பரம்:

          சிறுநீர் மற்றும் இதர மனிதக் கழிவுகள் மூலம் வேளாண்மைக்கு தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற்று பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

             துணைவேந்தர் எம். ராமநாதன் வேர் எவர் நீட் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் ஆகியோர் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஆய்வு திட்டத்திற்கு முதல் தவனையாக ரூ. 2 லட்சம் காசோலையை வேர் எவர் நீட் அமைப்பு வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் ஜே. வசந்தகுமார், வேர் எவர் நீட் இந்திய இயக்குநர் எஸ். பரமசிவம், பிளஸ் தொண்டு நிறுவனத் தலைவர் அந்தோணிசாமி, முதன்மை ஆராய்ச்சியாளரும், வேளாண் பொருளாதாரத்துறைத் தலைவருமான கு.ரா. சுந்தரவரதராஜன், இணை ஆராய்ச்சியாளர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். 

இத்திட்டம் குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: 

             அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத்துறையும், இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு நிறுவனமும் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன. இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்கு தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது. கடலூரில் உள்ள பிளஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என துணைவேந்தர் எம். ராமநாதன் தெரிவித்தார்.



Read more »

தமிழகத்தில் லஞ்சப் புகார்களுக்கு 9840983832

              லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

             இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர். சென்னை வேப்பேரி பகுதியில் திருமண ஊர்வலத்தை மறித்து லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர் பற்றி தினத்தந்தி படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.  இந்த செய்தியை படித்து பார்த்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நடுரோட்டில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட லஞ்ச சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

             அதோடு இதுபோல் லஞ்ச வேட்டை நடத்தும் போலீசார் பற்றி தகவல் தெரிவிக்க 9840983832 என்ற செல்போன் நம்பரையும் வெளியிட்டு, அந்த நம்பரில் பேசி லஞ்சம் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமும் புகார் கொடுக்கலாம் என்றும், அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கமிஷனர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டார்.

            இந்த அறிவிப்பு பற்றிய செய்தியையும் தினத்தந்தி செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தியை தினத்தந்தியில் படித்து பார்த்த பொது மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு பாராட்டு மழை பொழிந்து தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 
 
            செல்போன் மூலம் வரும் தகவல்களை பதிவு செய்ய 4 பெண் போலீசார் ஷிப்டு முறையில் பணியில் உள்ளனர். அவர்களால் தமிழகம் முழுவதும் இருந்து இது தொடர்பாக, பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களை பதிவு செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது. அவர்கள் பாத்ரூம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

             அந்த அளவுக்கு மக்களிடம் இருந்து, இடைவிடாமல் தொடர்ச்சியாக பாராட்டு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். பாராட்டு தெரிவிக்கும் பொது மக்கள் அனைவரும், இது போல் லஞ்ச போலீசார் பற்றி செல்போன் மூலம் புகார் தெரிவிக்கும் திட்டத்தை, சென்னையைப் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.ராமானுஜத்திற்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

               பொதுமக்கள் அனுப்பி உள்ள இந்த தகவல்கள் டி.ஜி.பி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. டி.ஜி.பி.ராமானுஜம் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
 
 
 

Read more »

2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் : அமைச்சர் புத்திசந்திரன்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/2f8020ae-2e39-4e7d-939b-f1476b912f99_S_secvpf.gif



           தமிழக உணவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் புத்திசந்திரன் நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டியில் உள்ள சிவில் சப்ளை குடோனுக்கு சென்று ஆய்வு செய்தார். 
ஆய்வு முடிந்ததும் அமைச்சர் புத்திசந்திரன்  கூறியது:-

           தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பதுக்குவோர் மற்றும் கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

            தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகள் 2 மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களில் 85 சதவீதம் பேருக்கு பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் எண்ணை கிடைக்காத 15 சதவீத பேர்களுக்கு டோக்கன் பெற்று அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.  மேற்கண்டவாறு அமைச்சர் புத்திசந்திரன் கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior