உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

கடலூர் - புதுச்சேரி எல்லை பிரச்சனை

கடலூர்:

              மாநில எல்லைப் பிரச்னைகளில், பிழைப்புக்கு வழியின்றி, கடலூர் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

                   மாவட்டத் தலைநகராக கடலூர் இருந்த போதிலும், கடலூர் மக்களுக்கு அருகே உள்ள பெருநகரம் புதுவைதான். விலை வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ, துணி மணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க, புதுவை சென்று வருவது என்பது கடலூர் மக்களுக்கு இயல்பான விஷயம். இதனால் தினமும் கடலூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புதுவை செல்கின்றனர். கடலூர்- புதுவை இடையே 22 கி.மீ. தூரத்துக்குள், பிரபல தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மதுபானங்கள் அருந்த வசதியான கவர்ச்சிகரமான புதுவை பார்கள் என்று எண்ணிலா வசதிகளை, கடலூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

                 காலை 8 மணிக்குள் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரம். கடலூரில் இருந்து புதுவை செல்ல 5 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.எனினும் ஒவ்வொரு பஸ்ஸிலும் அமர்ந்து செல்வோர் 56 பேர் என்றால், 70-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டே பயணிக்கும் பரிதாப நிலைதான் அதிகம். நெரிசல் மிகுந்த நேரத்தில் நின்று பயணிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகம். மூட்டையில் புளியை அடைப்பது போல் என்ற சொற்றொடர், கடலூர் - புதுவை பஸ்களில் பயணிக்கும் அப்பாவி மக்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

                கடலூரில் இருந்து புதுவை வரை 22 கி.மீ. தூரத்துக்குள் தமிழகப் பகுதியும் புதுவை பகுதியும் மாறிமாறி வருவதன் மூலம், இரு மாநில கிராமங்களும் பின்னிப் பிணைந்து கிடப்பதைப் பார்க்க முடியும். கிழக்குக் கடற்கரைச் சாலையில், தமிழக எல்லை எங்கே முடிகிறது?, புதுவை எங்கே தொடங்குகிறது? என்றே கண்டறிய முடியாத நிலை. ஆனால் கடலூர்- புதுவை பஸ்களில், கடலூரில் புறப்படும் போதே, புதுவை செல்வோர் மட்டும் பஸ்ஸில் இருக்கலாம், இடைப்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் பயணிக்க அனுமதியில்லை, இறங்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, ராணுவக் கட்டளை போல் நடத்துநரிடம் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். 

                 கடலூர்- புதுவை இடையே உள்ள பகுதிகளுக்கு, சாதாரண கடலூர் மக்கள் சென்று வருவதற்கு வேறு என்னதான் வாகன வசதி இருக்கிறது.ஆட்டோக்களையம் ஷேர் ஆட்டோக்களையும் விட்டால், கடலூர் மக்களுக்கு வேறு வழியில்லை.கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள முள்ளைடை வரை (புதுவை மாநிலம்) மட்டுமே கடலூரில் இருந்து ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுகின்றன. கடலூரில் வழங்கப்பட்டு இருக்கும் ஆட்டோ பெர்மிட்டில், மாவட்ட எல்லையில் இருந்து, 25 கி.மீ. தூரம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

                ஆனாலும் கடலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள புதுவை, அடுத்துள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம், கடலூரில் இருந்து 8 கி.மீ. தொலையில் உள்ள தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி, இங்கெல்லாம் செல்ல கடலூர் ஆட்டோக்களை புதுவைப் போலீஸôர் அனுமதிப்பது இல்லை.ஆனாலும் பிழைப்பு நடக்க வேண்டுமே. தினமும் 150 ஆட்டோக்கள், 50-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மட்டும் தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி சென்றுவர, புதுவை மாநில போலீஸôருக்கு மாதம் ரூ. 500 முதல் ரூ. 600 வரை, மாமூல் கொடுத்து வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.மாமூல் கொடுக்காமல் புதுவை சென்று, போலீஸôரிடம் சிக்கிக் கொண்டால், ரூ. 3 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலையை உருவாக்கி விடுகிறார்களாம்.

இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கச் செயலர் ஏ.பாபு கூறுகையில், 

               "25 கி.மீ. தூரம் வரை புதுவை மாநிலத்துக்குள் செல்ல அனுமதி இருக்கிறது. ஆனாலும் மறுக்கிறார்களே என்று புகார் செய்தால், நியாயம் அல்ல என்று கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தாலும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது இருமாநில எல்லை பிரச்சினை. இரு மாநில அரசுகளும்தான் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள்.ஆட்டோக்களுக்கு இரு மாநில பெர்மிட் வழங்குங்கள் என்றால், அதையும் மறுக்கிறார்கள். கடலூரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. நகரில் போக்குவரத்து நெரிசல் பெருகி, விபத்துகள் அதிகரிக்கின்றன.ஆட்டோ பெர்மிட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வையுங்கள் என்றால், அதற்கும் அரசு தயாராக இல்லை. 3 ஆயிரம் ஆட்டோக்களை நம்பி இருக்கும் குடும்பங்களின் பிழைப்புக்கு வழி என்ன?' என்றார்.






Read more »

இலவசப் பொறியியல் படிப்பு

சிதம்பரம்:

               பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு பதிலாக, தமிழகத்தில் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட கல்வியான பொறியியல் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

                சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ப.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் வரவேற்றார். பொதுச் செயலர் ராஜா, பொருளர் கொளஞ்சியப்பன், அமைப்புச் செயலர் சக்திவேல், தலைமை நிலையச் செயலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                      மாவட்ட பொறுப்பாளர்கள் குமார், ராமநாதன் (சென்னை), யுவரிஸ்குமார் (காஞ்சி), வெங்கடேசன் (அரியலூர்), லட்சுமிகாந்தன், காளிமுத்து (புதுக்கோட்டை), ஸ்டீபன், ஜீவா (திருச்சி), சுந்தரராஜன், மணிகண்டன் ஜோசப் (தஞ்சை), ஆடியபாதம் (நாகை), விஜயகுமார் (திருவாரூர்), சரவணன், திராவிடமணி (திருவண்ணாமலை), சேகர் (உதகை), சித்தன், ரங்கசாமி (ஈரோடு), சந்திரசேகர் (திருவள்ளூர்) உள்ளிட்டோர் பேசினர்.




Read more »

புதுவையில் தேசிய மூத்தோர் தடகளப் போட்டி: கடலூர் மாவட்டத்திற்கு 24 பதக்கம்

கடலூர்:

              புதுவையில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் கடலூர் மாவட்ட மூத்த தடகள வீரர்கள் 24 பதக்கங்களை வென்றனர். 

                31-வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் புதுவையில் கடந்த 4-ம் தேதிமுதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 1,125 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து 70 பேரும், கடலூர் மாவட்டத்தில் இருந்து 25 பேரும் கலந்துகொண்டனர். 

                இப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற பதக்கங்கள் 56 (15 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம்). அதில் கடலூர் மாவட்டத்தினர் 14 பேர் பெற்ற பதக்கங்கள் 24 (7 தங்கம், 10 வெள்ளி. 7 வெண்கலம்). இப்போட்டியில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தையும், மகாராஷ்டிரம் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பிடித்தது. 

கடலூர் மாவட்டத்தில் பதக்கம் பெற்றவர்கள் விவரம் (அவர்களின் வயது அடைப்புக் குறிக்குள்): 

பி.நடேசரெட்டி (84) 2 தங்கம், ஒரு வெள்ளி. 

கே.பரமசிவம் (82) 2 வெள்ளி, 2 வெண்கலம். 

ஆர்.நடராஜன் (65) ஒரு வெண்கலம். 

ஜி.மாரிமுத்து (65) ஒரு வெள்ளி. 

கே.கண்ணுசாமி (65) ஒரு வெள்ளி. 

கே.வரதராஜன் (65) ஒரு வெள்ளி. 

என்.பாலசுந்தரம் (60) ஒரு வெண்கலம். 

ஏ.தெய்வநாயகம் (60) ஒரு வெண்கலம். 

ஏ.பக்கிரிசாமி (60) ஒரு வெண்கலம். 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பி.பவானி (50) 2 தங்கம், 2 வெள்ளி. 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.லட்சுமி (50) ஒரு தங்கம், ஒரு வெள்ளி. 

ஏ.வேல்முருகன் (45) ஒரு வெள்ளி. 

ஜே.தியாகராஜன் (35) ஒரு வெண்கலம். 

சப்-இன்ஸ்பெக்டர் ஜி.விஜி (35) 2 தங்கம்.

                   கடலூர் மாவட்ட அணிக்கு, மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கச் செயலாளர் என். பாலசுந்தரம் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். கடலூர் மாவட்ட காவல் துறையில் இருந்து போட்டியில் கலந்துகொண்டு, பதக்கம் வென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் பவானி, லட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பாராட்டி திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கினார். 









Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட்.படிப்பு

சிதம்பரம் :

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் பி.எட்., படிக்க நாளை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்ககம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பில் சேர நாளை (10ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

               .வரும் 28ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத் தேர்வு அண்ணாமலைநகர், கோயமுத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக படிப்பு மையங்கள் மற்றும் தகவல் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இதர விவரங்களை 

இயக்குனர், 
 தொலை தூர கல்வி இயக்ககம், 
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 
அண்ணாமலை நகர் 

என்ற முகவரியிலும், 



என்ற  மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 










Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறை பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துறைத் தலைவர் பஞ்சநாதம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாதவி வரவேற்றார். துணை வேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார்.

              பின்னர் 19 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் சமிர்ப்பித்த 450 ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட 5 மேலாண்மைத் துறை நூல்களை வெளியிட, ஜெயக்கிருஷ்ணன், சமுத்திர ராஜகுமார், லதா, தமிழ்ச்செல்வி, சோலையப்பன், ராஜாமோகன், ஆனந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் ரமேஷ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். தொலை தூரக்கல்வி இயக்குனர் நாகேஷ்வரராவ், பதிவாளர் ரத்தினசபாபதி, கடல் வாழ் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். நிகழ்ச்சியில் நியுசிலாந்தில் பணியாற்றும் மலேசிய பேராசிரியர் எர்னஸ்ட்டு சிரில் தி ரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலாண்மை பேராசிரியர் சையது ஜாபர் நன்றி கூறினார். 





Read more »

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம்



             தமிழ்நாட்டில்  கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம்  வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறப்பட்டது.

           இதையடுத்து சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க சட்டசபையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.  சமச்சீர் கல்வி சட்டத் திருத்தத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சமச்சீர்  பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு  தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதன் மீது 6 நாட்கள் வக்கீல்கள் வாதம் நடந்தது. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துகிறோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
            ஆனால் பெற்றோர் தரப்பில் வாதாடிய வக்கீல்கள், அரசியல் ரீதியில் சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பஞ்சால், தீபக்வர்மா, சவுகான் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
 
இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. காலை 10.34 மணிக்கு நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

**25   காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் அப்பீல் மனு உள்பட எல்லா மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

**தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும்.

**10 நாட்களில் சமச்சீர் கல்வி அமல்படுத் தப்பட வேண்டும்.

**சமச்சீர்  வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது.


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

           சுப்ரீம்  கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழ் நாட்டில் இந்த ஆண்டே ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
 
 
 
 
 

Read more »

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

                தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் வெடிகளை வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior