உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 02, 2011

தி.வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்: சிதம்பரத்தில் பா.ம.க.வினர் 200 பேர் விலகுவதாக அறிவிப்பு

சிதம்பரம்:

     முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை அடுத்து சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

           முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் முடிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் கர்ணா, கோபு, ரவிச்சந்திரன், தமிழரசன், சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

            வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை கண்டித்தும், கட்சியின் நிறுவனர் ராமதாசை கண்டித்தும், கட்சிக்காகவும், வன்னியர் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்த பொறுப்பாளர்களை எவ்வித காரணமும் இல்லாமல் வெளியேற்றியதை கண்டித்தும் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட சுமார் 200 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தனர்.

            மேலும் வேல்முருகன் எடுக்கும் எந்த முடிவிற்கும் ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்தனர். இதில் சிதம்பரம் பொறுப்பாளர்கள் அமைப்பு செயலாளர் கோவி.தில்லைநாயகம், தொண்டரணி தலைவர் குமார், பாலு, தமிழ்மணி, சுதாகர், ராமகிருஷ் ணன், சிவா, செந்தில், குணா, சுகுமார், சண்முகம், கார்த்தி, கணேஷ், மாரியப்பன், திருமுட்டம் பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, எழிலரசன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், நாகேஷ்வரன், பாலமுருகன், காட்டு மன்னார்கோயில் பொறுப்பாளர்கள் ஆளவந்தான், சங்கர், பிரகாசு, புவனகிரி பொறுப்பாளர்கள் மனோகரன், சுரேஷ், பிரபு,காசிநாதன், பரங்கிபேட்டை சேர்ந்த பொறுப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், பாலக்கிருஷ்ணன், அருள், குமரன் உள்பட பலர் கலது கொண்டனர்.
















Read more »

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர் செல்வி ராமஜெயம் நியமனம்

       வடகிழக்கு பருவமழை தொடர்பாக 12 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     சென்னை நீங்கலாக 12 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் இதுவரை எந்தவித சேதமும் ஏற்படாதபோதிலும்,  12 கடலோர மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, 12 மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்- கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா

காஞ்சிபுரம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா

கடலூர்- சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்.

விழுப்புரம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

நாகப்பட்டினம் - மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்

தஞ்சாவூர், திருவாரூர் - வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்
புதுக்கோட்டை - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன்.

ராமநாதபுரம் - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்

திருநெல்வேலி- கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன்.

கன்னியாகுமரி - வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களா?:

          கடந்த ஆண்டு பருவமழை தொடங்கிய போது கடலோர மாவட்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

              சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்த மாவட்டங்களில் ஆட்சியர்களாக ஏற்கெனவே பணியாற்றிவர்கள் என்பதால் ஆய்வு செய்வதற்கு எளிதாக இருந்தது.
ஆனால், இப்போது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களை மட்டுமே அரசுக்கு அறிக்கையாகத் தர இயலும். இதற்கு மாறாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படும் போது ஆய்வுப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








Read more »

கடலூரில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லை : ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் செயல்படுத்த கோரிக்கை

கடலூர்:

                முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால், கடலூரில் 100-க்கும் மேற்பட்ட நகர்களில் மழைநீர் தேங்கி, வீடுகளில் வசிப்போர் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூரில் கடந்த ஒரு வாரமாக, கனமழை பெய்து வருகிறது. 

               இதனால் அண்ணா நகர், ஆர்.வி.எஸ். நகர், ரங்கநாதன் நகர், மீனாட்சி நகர், கே.கே. நகர், துரைசாமி நகர், ஆறுமுகம் நகர், பகவந்தசாமி நகர், நேருநகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நகர்களில் மழைநீர் 3 அடி உயரத்துக்கு மேல் தேங்கியுள்ளது. தேங்கிக் கிடக்கும் நீர் உடனடியாக வழிந்தோடும் வாய்ப்பு இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டன. அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட மண் அகற்றப் படாமல் சாலைகளிலேயே கொட்டப்பட்டது. 

             இதனால் சாலைகளின் மட்டம் ஏற்கெனவே ஒரு அடிக்கு மேல் உயர்ந்து விட்டது. அண்மையில் 100-க்கும் மேற்பட்ட சிமென்ட சாலைகள் ஒன்று முதல் 2 அடி உயரத்தில் அமைக்கப் பட்டன. இதனால் கடலூர் நகரச் சாலைகள் 3 அடி உயரம் உயர்ந்து விட்டன.  அதே நேரத்தில் கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் எதுவும் முறையாக அமைக்கப் படவில்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் பல வடிகால் வாய்க்கால்கள்உள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் அகற்றப்பட்ட மண் மற்றும் பாலித்தீன் குப்பைகள் பெருமளவு விழுந்து, பல வடிகால் வாய்க்கால்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்கள் பல பிரபல தனியார் பள்ளிகளாலும், தனி நபர்களாலும் ஆக்கிரமிக்கப் பட்டும் உள்ளன.

              புதிய  சாலைகள் அமைக்கும் முன்பே, பொதுநல அமைப்புகள் இப்பிரசினையை சுட்டிக் காட்டியும், நகராட்சி நிர்வாகமும், அரசும் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள்.  நகரில் சாலைகள் பலவும் சீர்குலைந்து கிடப்பதற்கு, உரிய மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததும் முக்கிய காரணமாகும். போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதாக கூறப்பட்ட பாரதிசாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் பழைய நிலையில் எந்த மாற்றமும் காணமுடிய வில்லை. 

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

              நகரில் மழைநீóர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. சாலைகளின் மட்டம் உயர்த்தப் பட்டது, கெடிலம் பெண்ணை ஆறுகளுக்கு கரைகள் அமைக்கும் போது மழைநீர் வழிந்து ஆறுகளுக்குள் செல்ல வசதியாக சிறிய பாலங்கள் ஷட்டர்கள் அமைக்கத் தவறியது மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக, நகரில் மழைநீர் இயல்பாக வழிந்தோட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் இப்போதே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. நகராட்சி நிர்வாகம் அரசுத் துறைகளுடன் விவாதித்து ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.









Read more »

கடலூர் பெருமாள் ஏரி உபரி நீர் வெளியேற்றம்: 500 ஏக்கர் பாதிப்பு

கடலூர்:

        பெருமாள் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், சுமார் 500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.  

             கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பெருமாள் ஏரி. மொத்த உயரம் 6.5 அடி. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த ஏரி மூலம் இருபோகம் பாசன வசதி பெறுகின்றன.  மழைக் காலத்தில் பெறப்படும் நீருடன், என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் பெருமாள் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது.   என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் கரித்துகள்கள் மற்றும் களிமண்ணால் ஏரி பெருமளவுக்குத் தூர்ந்து கிடக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் விரைவில் நிரம்பி வழிந்துவிடும் நிலையில் ஏரி உள்ளது.

               கடந்த ஒரு வாரமாகப் பெய்த மழையால் ஏரி நிரம்பி 2 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் பரவனாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்த உபரி நீர், பெரும்பாலான விளை நிலங்களில் பாய்கிறது. பொதுவாக பெருமாள் ஏரி பாசனப் பகுதிகளில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயம் செய்வதில்லை. இந்த நிலையில் கே.கள்ளையன் குப்பம், பூவாலை, அலமேலு மங்காபுரம், கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர் அறுவடைக்குத் தயாராக இருந்தது. அண்மையில் பெய்த மழையால் பெருமாள் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் புகுந்ததால், 500 ஏக்கரில் உள்ள நெற்பயிர் முழுவதும் மூழ்கி விட்டது. 

               வெள்ளம் உடனடியாக வடிய வாய்ப்பில்லை என்று விவசாயிகள் பலரும் தெரிவிக்கிறார்கள்.   இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கள்ளையங்குப்பம் ஊராட்சித் தலைவர் வி.தேசிங்கு தலைமையில் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லியைச் சந்தித்து மனு கொடுத்தனர். 500 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கி விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior