உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 44-வது தேசிய நூலக வாரவிழா

கடலூர்:

         கடலூர் மாவட்ட அரசு நூலகங்களின் வாசகர்கள் எண்ணிக்கையை, 30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.  44-வது தேசிய நூலக வாரவிழா, கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் நூல்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்  பேசியது:  

               நூலகங்கள் அறிவை வளர்ப்பவை. நூலகங்கள் பெருக வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மைய நூலகம் உள்ளிட்ட 135 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 63 கிளை நூலகங்கள், 28 பகுதி நேர நூலகங்கள், 43 ஊரக நூலகங்கள். இவற்றில் 1,40,025 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1,365 பேர் புரவலர்களாகச் சேர்ந்து உள்ளனர். அனைத்து நூலகங்களிலும் 21,19,786 புத்தகங்கள் உள்ளன.  2010-11-ம் ஆண்டில் 21,71,561 வாசகர்கள் இந்த நூலகங்களைப் பயன்படுத்தி உள்ளனர். வரும் ஆண்டில் வாசகர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக உயர வேண்டும். அதற்காக நூலகங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே நூலக அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.  

        கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு அரங்கம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்குகிறேன் என்றார். நூலகப் புரவலர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், நூலகங்கள் அறிவு சார்ந்தவை. நூலகத்தை அதிகமான வாசகர்கள் பயன்படுத்த வேண்டும். மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றதாக நூலகங்கள் அமைய வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். 

            நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமி, நகரச் செயலாளர் ஆர்.குமரன், நூலக வாசகர் வட்டத் தலைவர் தங்க சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் சின்னதம்பி வரவேற்றார். முதல் நிலை நூலகர் சந்திரபாபு நன்றி கூறினார். 












Read more »

கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்: சார் ஆட்சியர் விசாரணை

கடலூர்:

            கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை தொடர்பாக, கடலூர் சார் ஆட்சியர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.  பா.ம.க. இணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் புதிய கட்சி தொடங்க உத்தேசித்து வருவதாக தெரிகிறது. அதுகுறித்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பலத்தை நிரூபிக்க முயன்று வருகிறார்.

             இந்த நிலையில் கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை எழுந்துள்ளது. வேல்முருகன், பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் ப.சண்முகம் மற்றும் முத்தையப் படையாச்சி, அமராவதி என்று மூன்று தரப்பினர் இந்த கடலூர் அலுவலகத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பாக மூன்று தரப்பினரும் போலீசாரி டமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தனர். இதையடுத்து, கடலூர் சார் ஆட்சியர் விசாரணைக்கு, காவல் துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் பா.ம.க. தரப்பினருக்கும் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால், கடந்த 12-ம் தேதி, கடலூர் பா.ம.க. அலுவலகத்தை சார் ஆட்சியர் பூட்டி சீல் வைத்தார். 

           இதுகுறித்த விசாரணை கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. சார் ஆட்சியர் கிரண்குராலா விசாரணை நடத்தினார். அப்போது மூன்று தரப்பினரும் ஆதாரங்களை முறையாக அளிக்கவில்லை. இந்த நிலையில் பா.ம.க. அலுவலகம் உள்ள நிலம் நகராட்சிக்குச் சொந்தமானது என்றும், ராஜலட்சுமி என்பவருக்கு நீண்டகால குத்தகைக்கு அளிக்கப்பட்டு இருந்தது என்றும் மற்றொரு தகவல் கிடைத்து உள்ளது. எனவே, இப்பிரச்னையில் கடலூர் நகராட்சி நிர்வாகத்தை 4-வது தரப்பாக விசாரணையில் சேர்க்க முடிவு செய்து சம்மன் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.     இதையடுத்து, விசாரணையை சார் ஆட்சியர் டிசம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.









Read more »

சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாவு அறைக்கும் கிரைண்டர் வழங்கும் விழா

சிதம்பரம் : 
 
         சிதம்பரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு நேஷனல் சோஷியல் வெல்பேர் பவுண்டேஷன் மனித உரிமை பிரிவு அமைப்பின் சார்பில் மாவு அறைக்கும் கிரைண்டர் வழங்கப்பட்டது. 
 
           நகர தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமாறன் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைமை அமைப்பாளர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன் வரவேற்றார். மாணவர் விடுதிக்கு அமைப்பின் நிறுவனர் சிவனேசன் கிரைண்டர் வழங்கினார். ஆர்.டி.ஓ., இந்துமதி, மாவட்ட வழங்கல் அதிகாரி கல்யாணசுந்தரம், தனி தாசில்தார் தில்லை கோவிந்தன் பங்கேற்று பேசினர். விழாவில் போதக காப்பாளர் தம்புசாமி, மகளிரணி அமைப்பாளர் சுமதி, இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். துணை ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் - பு.முட்லூர் புறவழிச்சாலையில் அரசு பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

 
பரங்கிப்பேட்டை:

           சிதம்பரம் - பு.முட்லூர் புறவழிச்சாலையில் அரசு டவுன் பஸ் இயக்க கலெக்டருக்கு கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

          சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூருக்கு வெள்ளாற்று வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.ஆனால் கனரக வாகனங்கள், வேன், கார், பைக் உள்ளிட்டவைகள் சென்று வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கீழமூங்கிலடியில் தனியார் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் உள்ளது.

            இங்கு சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரி செல்ல பஸ் வசதி இல்லாததால் பு.முட்லூர் வரை இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர். சிதம்பரம் வழியாக கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் நடந்து செல்கின்றனர். கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர் வரை அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior