உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 09, 2012

கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: கண்ணீருடன் கரும்பு விவசாயிகள்

நெய்வேலி அருகே அறுவடை தாமதத்தால் வயலிலேயே காய்ந்து வரும் கரும்பு.

நெய்வேலி:

 கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவேண்டிய கரும்புகள் வெட்டப்படாததால் அவை கருகுவதைக் கண்டு, பயிரிட்ட விவசாயிகள் கண்ணீருடன் மாற்றுவழித் தெரியாமல் தவிக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டுமே இயங்கிவருகிறது. இவற்றைத் தவிர பெண்ணாடம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நம்பி பயிர்செய்த விவசாயிகள் பயிரிட்ட கரும்பை குறித்த காலத்துக்குள் அறுவடை செய்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருமாத காலமாக போராடிவருகின்றனர். ஆனால் போராட்டம் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயப் பகுதியான சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோயில், கம்மாபுரம், சிதம்பரம், விழுப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது.

கூட்டுறவு ஆலைகளை நம்பி பயிரிட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருப்பதை அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கரும்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வட்டி அதிகரிப்பதால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்துவருவதால் கரும்பை வெட்ட முடியாத விரக்தியடைந்த தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் பயிர்வித்த கரும்பை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.கரும்பு விதைப் பயிர் சட்டத்திட்டத்திற்கேற்ப ஒரு இடத்தில் பயிரிட்ட கரும்பை குறிப்பிட்ட ஆலைகளைத் தவிர வேறு ஆலைகளுக்குக் கொண்டு சென்று அரைக்க முடியாத அவலநிலை இருப்பதால் கருகும் நிலையில் உள்ள கரும்புகளை வெட்ட முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதேநிலை நீடித்தால் கரும்பு விவசாயிகள் எதிர்காலத்தில் கரும்பு பயிரிடுவதை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும். இந்த நிலையை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும் அரசும் புரிந்துகொண்டு, மாற்று வழிகளை ஆராய்ந்து கரும்பு விதைப் பயிர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு இப்போராட்டம் நடைபெறுவதால், பாதிக்கப்படுவர்கள் கரும்பு விவசாயிகள்தான். தமிழக கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் கண் முன்னே தினந்தோறும் செத்து மடியும் கரும்பு விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறது? 






Read more »

பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை

பண்ருட்டி

பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 11-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

விண்ணப்பத்தின் விலை பொதுப் பிரிவினருக்கு ரூ.500-ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250-ம், தாழ்த்தப்ட்ட, பழங்குடியினர் ஜாதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31-ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

.மேலும் தகவலுக்கு 04142-241000 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.













Read more »

கடலூரில் சுனாமியில் பெற்றோரை இழந்த இரு பெண்களுக்கு ரூ.13.68 லட்சம் நிதியுதவி

கடலூர்:

சுனாமி பேரலையால் பெற்றோரை இழந்த இரு பெண்களுக்கு திருமண வைப்பீடு தொகை ரூ.13.68 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை வழங்கினார் . 26.12.2004-ம் ஆண்டு கடலூரில் சுனாமி பேரலை தாக்கியதில் பி.வேதநாயகி, எஸ்.சுகந்தி ஆகியோர் பெற்றோரை இழந்தனர். அரசால் துவங்கப்பட்ட சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் ஜனவரி 2005-ம் ஆண்டு வேதநாயகி (6-ம் வகுப்பும்), எஸ்.சுகந்தி (பிளஸ் 2) படிக்கும்போது காப்பகத்தில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட தருணத்தில் பி.வேதநாயகிக்கு ரூ.4,66,666-ம், எஸ்.சுகந்திக்கு ரூ.4 லட்சமும் தமிழக அரசு மூலம் சுனாமி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

இத்தொகை அவர்களது திருமணத்துக்கு பின்னர் வட்டியுடன் சேர்த்து வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த ஜமாபந்தியின்போது வேதநாயகிக்கு ரூ.7,15,051-ம், சுகந்திக்கு ரூ.6,53,397-ம் ஆக மொத்தம் ரூ.13.68 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வழங்கினார். அப்போது சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி உடனிருந்தார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior