உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 09, 2013

கடந்தாண்டில் கடலூர் மாவட்டத்தில் நடந்த 3,484 சாலை விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்

கடலூர் முதுநகர் :

         சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.

         மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 1,816 கி.மீ., பிற சாலைகள் 5,511 கி.மீ., என மொத்தம் 7667 கி.மீ., தூர சாலைகள் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்பான முறையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

              இதன் காரணமாகவே, மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதனால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டில் 2,896 விபத்துகளில் 450 பேரும், 2009ல் 2,811 விபத்துகளில் 483 பேரும், 2010ம் ஆண்டில் 2,695 விபத்துகளில் 466 பேரும், 2011ல் 3,092 விபத்துகளில் 523 பேர் இறந்தனர். பெருகி வரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்தி வருகிறது. அதன்படி போக்குவரத்து துறை சார்பில் கடந்த 1ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

         இறுதி நாளான  கடலூர், கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.  முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், முருகேசன், காளியப்பன், நல்லத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறியது:

               மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு 2,695 விபத்துகள் நடந்துள்ளன. இதில்,உயிரிழப்பை ஏற்படுத்திய447 விபத்துகளில் 466 பேர் இறந்துள்ளனர்.  3,453 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் மொத்தம் நடந்த 3,092 விபத்துகளில், உயிரிழப்பை ஏற்படுத்திய 498 விபத்துகளில் 523 பேர் இறந்துள்ளனர். 3,790 பேர் காயமடைந்துள்ளனர். கடந்தாண்டு 3,484 விபத்துகள் நடந்துள்ளன. அதில், உயிரிழப்பை ஏற்படுத்திய 524 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர். 4,938 பேர் காயமடைந்துள்ளனர்.

          சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்த்திட வட்டார போக்குவரத்து துறையினர் அவ்வப்போது போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகிறோம். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்தாண்டு குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 5 பேரின் ஒட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 46 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

          வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன உரிமங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளின் மூலம் கடந்தாண்டு 61.92 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பதிவு பெறாத வாகனங்களுக்கு அபராதம், நிர்ணய அபராதம் போன்றவற்றின் மூலம் 1.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior